Monday, 18 January 2016

கலியுகம் எப்படி இருக்கும்?

உத்தவ கீதையில் கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு கலியுகம் எப்படி இருக்கும் என்று மிக அழகாக தெரிவிக்கிறார்.

ஒருமுறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பாண்டவர்களில் நால்வரான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்று தங்கள் சந்தேகத்தை கேட்டனர். அதற்கு மாதவன், "சொல்வதென்ன எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன்" என்று கூறி நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தினார். அவற்றை கொண்டு வருமாறு நான்கு பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். கோவிந்தனின் ஆணைப்படியே நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அர்ஜுனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான பாடலை கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பி பார்த்த அர்ஜுனன் ஒரு கோரமான காட்சியை கண்டான். அங்கு அந்த குயில் ஒரு வெண்முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ணி குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சியை கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. ஈன்ற கன்றை தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய் பசு வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அந்த கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும் என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுதுதுக்கொண்டு திரும்பினான். மலைமேல் இருந்து, பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும், தடைகளையும் இடித்து தள்ளி, வேகமாய் உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சரியத்தோடு அதை கண்ட சகாதேவன், தெளிவுபெற பகவானை நோக்கி புறப்பட்டான்,

இவ்வாறு நான்கு பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும், ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கேட்டனர். கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்.



"அர்ஜுனா,

கலியுகத்தில் போலி மதகுருக்கள், ஆச்சாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும் அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள்." – குயிலை போல்.

"பீமா,

கலியுகத்தில் செல்வந்தர்களிடையே ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் செல்வம் வழிந்தாலும், அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வதை ஈட்டி சேமித்து வைப்பார்கள். ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வந்தர்கள் ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள்." – வற்றிய கிணற்றுக்கு அருகாமையில் உள்ள நிரம்பி வழியும் கிணறுகளை போல்.

"சகாதேவா,

கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண்மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவர்கள்." - பசுவைப் போல்.

"நகுலா,

கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும் நற்குணத்தினின்றும் நீங்குவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுதமாட்டர்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும்." - பாறையைத் தடுத்த சிறுசெடியைப் போல்.

Tuesday, 5 January 2016

ஆமைகளின் கடல்வழித்தடம்

" ஆமைகளின் வழித்தடத்தில் கடல்வழிகண்ட ஆதித் தமிழர்கள் "

ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப்பயணம் மேற்கொண்டனர். முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன.

இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக்
கொண்டனர்.

தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது. கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர்
கிழக்கில் இருந்து வந்த வேளாண்தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன்
அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந்தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான்.