சண்டிகேஸ்வரரை வழிபடும்போது, கைகளைத் தட்டி வழிபடலாமா?
சிவன் கோயிலுக்குச் செல்கின்றவர்கள் அனைவரும், தவறாமல் சண்டிகேஸ்வரர் சந்நிதிக்குச் சென்று, கைகளைத் தட்டி வழிபட்டுச் செல்வார்கள். அப்படி சண்டிகேஸ்வரரை வழிபடும்போது கைகளைத் தட்டி வழிபடலாமா?
முற்காலத்தில் சோழ வள நாட்டில், சேய்ஞ்ஞலூர் எனும் ஊரில் எச்சதத்தன், பவித்திரை என்னும் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு விசாரசருமன் என்ற மகன் இருந்தான். அவன் தினந்தோறும் கிராமத்திலுள்ள சிலருடைய பசுக்களை அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் மேய்த்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். பசுக்களை மேய்க்கும் தொழிலில் இருந்தாலும், விசாரசருமன் சிறு வயது முதற்கொண்டே சிவபக்தியில் மிகுந்த நாட்டமுள்ளவனாக இருந்தான். இதனால் சகல உயிரினங்கள் மீதும் குறிப்பாக பசுக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தான். பசுக்களும் இவனிடம் மிகவும் பிரியமாகப் பழகின.
பசுக்களை மேய்க்கும்போது ஒவ்வொரு நாளும் அங்குள்ள ஒரு மர நிழலில் மணலைக் குவித்து சிவலிங்கம் போல் செய்து சிவனை வழிபட்டு வந்தான். அப்படி அவன் உருவாக்கிய சிவலிங்கத்தின் மீது இவனுடன் மேய்ச்சலுக்கு வந்த பசுக்கள், பாலைப் பொழிந்து அபிஷேகம் செய்வது வழக்கம். சிவலிங்கத்துக்கு பசுக்கள் பாலைப் பொழிந்திருந்தாலும் மாலையில் வீடு திரும்பியதும், தங்களது எஜமானர்களுக்கு வழக்கத்துக்கு அதிகமாகவே பாலைப் பொழிந்தன .
ஒருநாள், அதே ஊரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், விசாரசருமனின் மணல் லிங்கத்தின் மீது பசுக்கள் தானாகவே சென்று பாலைப் பொழிவதைப் பார்த்துவிட்டான். வியப்பான இந்த நாடகம் அவனுக்கு மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது. தினமும் இப்படி நடப்பதை ஊருக்குள் போய், மாடுகளின் எஜமானர்களிடம் சொல்லிவிட்டான். உடனே அவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு வந்து விசாரசருமனின் தந்தையிடம் புகார் செய்தனர். இத்தனை நாளாக தான் சம்பாதித்து வைத்திருந்த நற்பெயருக்கு தனது மகனால் கலங்கம் ஏற்பட்டுவிட்டதென ஆத்திரமுற்றார். மறுநாள் மகன் பசுக்களை மேய்க்கச் சென்றதும், மறைந்து மகனின் செயலையும் பசுக்களின் போக்கையும் கவனித்தார். பசுக்கள் தானாகவே வந்து மணல் லிங்கத்தில் பாலைபொழிவதைப் பார்த்து, ஆத்திரமுற்றவர் மகனை அடித்து உதைத்தார்.
''இங்கே எவ்வளவு பாலை பொழிந்தாலும், வீட்டுத் தொழுவத்தில் கறக்கும்போதும் வழக்கமான அளவைவிட கூடுதலாகவே தருகின்றபட்சத்தில், எதற்காக நீங்கள் கோபப்படுகிறீர்கள்?'' என்றான். தன் மகன் தன்னையே எதிர்த்துப்பேசியதால், மணல் லிங்கத்தை காலால் உதைத்து கலைத்தார். தன் நெஞ்சகோயிலில் தெய்வமாக வைத்து வணங்கும் ஈசனை எட்டி உதைத்த தந்தையின் மீது சினமுற்ற விசாரசருமன், அருகிலிருந்த குச்சியை எடுத்து வீசினான். அது சிவபெருமானின் மழுவாக மாறி, அவரது காலை வெட்டி காயப்படுத்தியது.
தன் மீது இருக்கும் அன்பினால், தகப்பன் என்றும் பாராமல் காயப்படுத்திய விசாரசருமனின் பக்தியில் நெகிழ்ந்து போன சிவபெருமான், பார்வதி பிராட்டியாருடன் தோன்றி, எச்சதத்தனின் காலை குணப்படுத்தியதுடன், விசாரசருமனுக்கு தனது சிவ கணங்களை நிர்வகிக்கும் 'சண்டேச' பதவியையும் வழங்கினார். தனக்கு அணிவிக்கும் மாலை, நைவேத்தியங்களை சண்டிகேஸ்வரருக்கும் வழங்க வேண்டுமெனவும் கூறினார்.
இத்தனை சிறப்பு வாய்ந்த சண்டீகேஸ்வரர் எப்போதும் சிவ சிந்தனையுடன் தியானத்தில் இருப்பவர். அதனால், அவரை வணங்கும்போது, கைதட்டி வணங்குவது, கைகளைச் சொடுக்கி சொடக்கு போடுவது, தங்களது உடையிலிருந்து ஒரு நூலைப் பிரித்தெடுத்து போட்டுவிட்டு வருவது போன்றவற்றை, நாம் செய்யக்கூடாது. ஆகம விதிகளில் இப்படி கிடையாது. பிற்காலத்தில் ஆள் ஆளுக்கு ஏற்படுத்திக் கொண்ட சம்பிரதாயம் இது. இது கண்டிப்பாக தவிர்க்கப் படவேண்டும்.
சிவலாயங்களுக்கு வழிபடச் செல்லும்போது மூலவரை வணங்கியதும், விநாயகரை வணங்கும்போது தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். முருகனை வழிபடும்போது, பிரணவ மந்திரத்தைச் சொல்லவேண்டும். சண்டிகேஸ்வரரை வணங்கும்போது, "ஆலய தரிசனத்தை சிறப்புறச் செய்து முடித்துவிட்டேன்" என மனதுக்குள் நினைத்து வணங்கினாலே போதும்.
நன்றி - விகடன்