Saturday, 16 November 2013

வரகின் மகிமை

வாத்தி வரகு திரித்த கதை

நமது சமயலறையில் பயன்படும் பல பொருட்களுக்கு பதார்த்த குண விளக்கங்கள் (Materia medica of plants,spices,minerals), அதாவது அதன் மருத்துவ மகிமைகள் பற்றி பேஸ்புக்கில் சில நண்பர்கள் சித்த வைத்தியர் ரேஞ்ச்சுக்கு பதிவிடும் போது, எனக்கு பொறாமையாக இருக்கும். நாமும் ஏதாவதொன்றின் மகிமையைப் பாடியே ஆகவேண்டும் என்று நினைப்பேன். எனக்கு பரிச்சயமானது வரகுதான்.அதைப் பற்றி எழுதிவிட்டேன். 

அரிசியே நமது பிரதான உணவென்றாகிவிட்டது. அப்படியிருந்தும் கூட, கம்பு சோளம் கேழ்வரகு மற்றும் ஓரளவு வழக்கொழிந்த வரகு,சாமை, திணை போன்ற தானிய வகைகள் போற்றப்படுவது மாதிரி அரிசி போற்றப்படுவதில்லை. அனீமியா தொடங்கி சர்க்கரை வியாதி வரை பல அவஸ்தைகளுக்கு அரிசியே காரணமென்று நிந்திப்பவர்களுமுண்டு. சர்வதேசச் சதிகாரர்களும் உள்ளூர் சதிகாரர்களும் ஒன்றிணைந்து நம்முடைய பாரம்பரியத் தானிய வகைகளை அழிதொழித்து, அதிகப் பராமரிப்பும், நீர்வளமும் தேவைப்படுகின்ற சத்தே இல்லாத அரிசியை நம் தலையில் கட்டிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டுபவர்களுமுண்டு. 

பாரம்பரியத் தானியங்களிலும் அரிசியிலும் இருக்கின்ற சத்துக்களை சிலர் ஒப்பீடும் பாணியே, பாரம்பரியத் தானியவகைகள் மட்டும் நம்மிடமிருந்திருந்தால் அல்லோபதி மருத்துவத்திற்கு அவசியமில்லாமல், புஜபல பாராக்கிரமத்தோடு, இன்னும் சொல்லப்போனால் நம்மில் பலருக்கு மரணமிலாப் பெருவாழ்வு சித்தித்திருக்குமென்று நம்மை ஏங்க வைப்பது மாதிரி இருக்கும். பாரம்பரியத் தானியவகைகள் சிறந்ததுதான். ஆனால் அதன் மறுபக்கம் பார்க்கத் தெரிந்தால்தான் நமது விவசாயிகள் அதை ஏன் விட்டுவிட நேர்ந்தது என்பது புரியவரும். 

கர்ணன் மாதிரி கவச குண்டலத்தோடு பிறக்க நாம் ஆசீர்வதிக்கப் படாவிட்டாலும், குறைந்த பட்சம் வரகோடு பிறக்கவாவது ஆசீர்வதிக்கப்ப்ட்டோமே என்று பலநேரங்களில் நான் திருப்திப் பட்டிருக்கின்றேன். என் சிறுவயதில் அதுதான் பிரதானம். கர்ணனிடமிருந்து நயவஞ்சகமாக கவச குண்டலத்தை பறித்த மாதிரி யாரும் சதி செய்து வரகை நம்மிடமிருந்து பிரிக்கவில்லை. மாறாக அது சற்று அவஸ்தையாக இருந்ததால் அதைச் சற்று ஒதுக்கி வைத்தார்கள். அவ்வளவுதான். . 

வரகு ஒரு அப்பிராணிப் பயிர்தான். அது சம்சாரியை எந்தவகையிலும் படுத்தாது. உழுது விதைத்தாலே, அது சம்சாரி தனக்கு கொடுத்த மிகப் பெரிய அங்கீகாரமென்று மகிழ்ந்து மகசூல் தந்துவிடும். வரகின் குணதத்தோடு ஒப்பிட்டால் நெல் அதற்கு நேரெதிர். அது ஒரு அகங்காரம் பிடித்த பயிர். அதை ஒரு “தொடுப்பை” பார்த்துக்கொள்வது மாதிரி பார்த்துக்கொள்ளவேண்டும். செலவழிக்க வேண்டும். கண்டுகொள்ள வேண்டும். பண்டுவம் பார்க்க வேண்டும். இல்லையென்றால் கோபித்துக்கொண்டு மகசூலில் ஏமாற்றிவிடும். வரகு ஏழை வீட்டுக் குமரி என்றால் நெல் பணக்கார வீட்டு குமரி.

வரகு காட்டிலிருக்கும் வரை ஏழைவீட்டுப் பெண்தான். ஆனால் வரகரிசியாக மாறும் போது, மாமியாருக்கு அடங்காத மருமகளாகிவிடும். வரகிலிருக்கும் அவஸ்தையே அதிலிருந்து அரிசியைப் பிரிப்பதுதான். நெல் மாதிரி மாங்குமாங்கென்று உலக்கையில் குத்தி உமியைப் பிரிக்கமுடியாது. .இப்பொழுது வரகிலிருந்து உமியைப் பிரிக்க இயந்திரங்கள் வந்திருக்கலாம். ஆனால் கடந்த காலத்தில் வரகிலிருந்து அரிசியைப் பிரிக்க யுத்த முஸ்தீபுகள் அளவுக்கு சிலவற்றை முன்னெடுக்க வேண்டும். வரகைக் கல்திருகையில் போட்டு திரிக்க வேண்டும். கல்திருகைகள் பொதுவாக மாவரைக்கவென்றே வடிவமைக்கப்பட்டது. கசகசவென்று மாவரைக்கும் திருகைகளை வைத்துக்கொண்டு, சூதானமாக உமியைப் பிரிக்க திருகைகளைத் தயார்படுத்த வேண்டும். அகலமான திருகைகளைத் தேர்வு செய்து, திருகையின் அடிக்கல்லின் மேற்புறமும், மேல் கல்லின் கீழ்ப்புறமும், அதன் சுற்றளவிற்கு அளவாக சணல் சாக்கை வெட்டியெடுத்து, சாணிப்பால், செம்மண் மற்றும் சிலவற்றைக் கொண்டு பக்குவமாகத் தயாரித்த பசை கொண்டு சாக்கை ஒட்டி காயவைக்க வேண்டும். ரெம்ப தடிமனான சணல் சாக்குகள் தோதுப்படாது. சாக்கு தடிமனாக இருந்தால் திருகையைச் சுற்ற முடியாது. அளவான தடிமனில் கிடைக்கும் சாக்குகளை உஷாராக இருந்து சேர்த்து வைக்கவேண்டும். நெல் குத்துவது மாதிரி அப்பப்போ வரகைத் திரித்து அரிசியெடுப்பது இச்சலாத்தியான வேலை. ஒரு குடும்பத்திற்கு எழெட்டு மூடை வரகரிசி தேவைப்படும்பட்சத்தில் அதை ஒரேமூச்சில் ஒரு project மனோபாவத்துடன் செய்து முடிக்க வேண்டும். எழெட்டு திருகைகள் தயார்படுத்தி, அதில் ஒன்றிரண்டை ஸ்டெப்னியாக வைத்துக்கொண்டு, 4-5 பெண்களை வைத்து 8-10 நாட்கள் திரிக்கவேண்டும். வரகு திரிப்பது இடிப்பொடிக்கும், கைவலிக்கும் வேலை. அதற்கு யாரும் விரும்பி வரமாட்டார்கள். அவர்களைக் கவர குறைந்தபட்ச கவர்ச்சித் திட்டங்கள் (கடுங்காபியோ, கருவாட்டுக் குழம்புடன் கூடிய களியோ) மற்றும் வரகரிசியைக் கூலியாகக் கொடுக்கவேண்டும். வரகரிசி ஒரு கவர்ச்சி. அது வீட்டிலிருந்தால், அதைக் கூலியாகக் கொடுத்து வேலைக்கு ஆட்களை எளிதாகக் கவரலாம். 

இப்பொழுதெல்லாம் பைவ் ஸ்டார் ஹோட்டல் செப்கள் வரகரிசியில் விதவிதமான பண்டங்களை சமைக்க முடியும் என்று வித்தை காட்டுகிறார்கள். வரகரிசியில் சாதத்தைவிட வேறு எதையும் நான் சாப்பிடும் புண்ணியம் வாய்த்ததில்லை. ஒரு வேக்காடு கூடிவிட்டாலும் சாதம் குலைந்துவிடும். வரகு புழக்கத்திலிருந்த காலத்தில் அரிசியும் புழக்கத்தில் இருந்தது. நெல்தான் அகங்காரம் பிடித்த பயிர். ஆனால் அது அரிசியாகிவிட்ட அடுத்த கணம், director’s artist என்று சில நடிகைகளைக் குறிப்பிடும் மாதிரி, பெண்கள் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும். மாறாக பயிராக இருக்கும் வரைதான் வரகு அப்பிராணி. அது அரிசியாகி விட்டால் அது அடங்காபிடாரிதான். அரிசியில் விதவிதமான அயிட்டங்களை சமையலில் கத்துக்குட்டிகள் கூட செய்து அசத்தமுடியும். வரகரிசியில் நினைத்த மாதிரி வித்தை காட்ட முடியாது. அது அனுபவஸ்தர்களை வந்து பார் என்று கெக்கலி காட்டும். வரகைப் பிரபலப்படுத்தும் எண்ணத்தோடு அதில் இது செய்யலாம், அது செய்யலாம் என்று சொல்லப்படும் குறிப்புகள் எல்லாம் கைப்பக்குவம் மிக்கவர்களுக்கு சாத்தியமாகலாம். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு சாத்தியப்படாது. பிறந்த வீட்டில் நல்ல மகளாக இருந்து, புகுந்த வீட்டில் அடங்காபிடாரி மருமகளாவது போலத்தான் இது. இந்த அடங்காபிடாரித்தனம், அரிசியைத் தவிர, நாம் போற்றும் பிற சிறு தானிய வகைகளுக்கு உண்டு. சதிசெய்து யாரும் அரிசியைக் கொலுவில் ஏற்றவில்லை. நம்முடைய தாய்மார்களின் விருப்பதிற்கேற்ப அரிசி வளைந்து கொடுத்த தன்மைதான், அதனுடைய பணிவுதான் அதை முதல் இடத்திற்கு உயர்த்தி இருக்க வேண்டும். 

வரகின் மகிமையைப் பற்றி யார் பேசினாலும் எனக்கு சிரிப்பு வந்துவிடும். காரணம் வரகோடு சம்பந்தப்ப்ட்ட ஒரு ஜோக்கால். வரகு திரிப்பதில் உள்ள அவஸ்தையைச் சொல்லும் ஜோக் அது. 

ஒரு கிராம பள்ளிக்கூட வாத்திக்கு தன்னிடம் படிக்கும் மாணவனின் தாயின் மீது ஒரு “கிறுக்கு”. அந்தப் பையன் மூலம் அவனின் அம்மாவிடம் “பழக” நினைத்து, அவனிடம் பிரியம் காட்டுகிறார். அந்தம்மாவும் வாத்தியைப் பார்த்தால் சிரித்துவிட்டுச் செல்வார். இது போதாதா? ஒருநாள் வாத்தியே, “சிரிச்சா மட்டும் போதுமா, வீட்டுக்கு கூப்பிடமாட்டீங்களா? என்று கேட்டே விடுகின்றார். அதற்கு அந்தப் பையனின் தாயும், “பையானோட அப்பா ஊரில் இல்லாத நாள் பார்த்து பையனிடம் சொல்லி அனுப்புவதாக” கூறிச்செல்ல, வாத்தி அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றார். அந்த நாளும் வந்தது. பையனே வாத்தியிடம் வந்து, “சார்! நாளைக்கு விடிஞ்சதும் எங்கம்மா உங்களை வீட்டுக்கு வரச் சொன்னாங்க. காலை காபி, சாப்பாடு, மதியச் சாப்பாடு எல்லாமே எங்க வீட்டில்தானென்று உங்ககிட்டே சொல்லச் சொன்னாங்க” என்று சொல்லிவிட்டுச் செல்கிறான். வாத்திக்கோ உற்சாகத்தில் இரவெல்லாம் உறக்கமில்லை. எப்பொழுது விடியும் என்று காத்திருந்து, விடிந்ததும் பையனின் வீட்டிற்கு செல்கிறார். வாத்திக்கு காபி கொடுத்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த போது, “ஊருக்குப் போன அப்பா வந்துகொண்டிருப்பதாக” பையன் மூச்சிறைக்க ஓடிவந்து சொல்கின்றான். 

‘ஊருக்குப் போனவரு திரும்பி வார நாலைந்து நாளாகும்’ என்று சொன்னதால்தான் இன்னைக்கு உங்களை வரச்சொன்னேன்.. அய்யோ அவரு கோபக்காரராச்சே உங்களை இங்க பார்த்தா, வேறு வினையே வேண்டாம்” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டே, ‘பிரியமாக வந்துட்டீங்க .நீங்க பொக்குன்னு போயிடக்கூடாது’, எனக்கு ஒரு யோசனை தோணுது அதன்படி செய்யமுடியுமா? என்று கேட்க, வாத்தியும் ‘உங்கூட இருக்கிறதுக்கு எதையும் செய்யத் தயார் என்று ஜொள் விடுகிறார். “ஒரு கிழவியை வைத்து நாலைந்து நாட்களாக வரகு திரிப்பது எம் புருசனுக்குத் தெரியும். உங்க மேலே ஒரு சேலையை போத்தி விடுறேன். திருகைக்கு முன்னாடி உட்கார்ந்து கொஞ்சநேரம் வரகு திரியுங்கள். அவரை எப்படியாச்சும் தாக்காட்டி வெளியே அனுப்பிச்சிடறேன்” என்று சொல்ல வாத்தியும் உற்சாகமாக வரகு திரிக்க ஆரம்பிக்கிறார். 

வீட்டுக்கு வந்த புருசனும் வீட்டுக்குள் வராமல், வரகு திரிப்பதை பார்த்துக்கொண்டு வெளியே உட்கார்ந்து கொள்கிறான். “நான் போய் கவுச்சியும், முட்டையும் வாங்கி வாறேன்” என்று வாத்திக்கு கேட்கும்படி புருசனிடம் சத்தமாகச் சொல்ல, வாத்தி அது நமக்குத்தான் என்று நினைத்து திருகை சுற்றுவதை வேகப்படுத்துகிறார். வெளியே போய்விட்டு வந்த பெண்டாட்டி, ‘”கொஞ்சம் பொருத்துக்குங்க. வேகமாச் சமைச்சி, வெந்தும் வேகாமலும் ஒரு நாலுதுண்டு கரியைப் போட்டு அவரை வெளியே பத்திவிடுறேன்’ என்று வாத்தி காதில் கிசுகிசுத்துவிட்டு சமைக்க ஆரம்பிக்கிறார். சமைத்து புருசனும் பொண்டாட்டியும் சாப்பிடுகிறார்கள். வாத்திக்கு கேப்பைக்கூழ் கொடுத்துக்கொண்டே, ‘கொஞ்சம் பொருத்துக்குங்க அவரை இப்ப அனுப்பிச்சிறேன்’ என்று மீண்டும் வாத்தியிடம் கொஞ்சலாக கிசுகிசுத்து செல்கிறார். நேரம் போனதுதான். புருஷன் போனமாதிரி தெரியவில்லை. புருஷன் வெளியே உட்கார்ந்துகொண்டு வரகு திரிப்பதையே பார்த்துக்கொண்டிருக்கின்றான். மாலை நெருங்கி விளக்கு வைக்கும் நேரம். “மூணாளு திரிக்கிற வரகை இன்னைக்கு கிழவி ஒத்தை ஆளா திரிச்சிருச்சி. அவளுக்கு காபித் தண்ணி ஏதாச்சும் குடு. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வாறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான், பொண்டாட்டியும் “சே! வந்த மனுஷன் இப்படியா ஆணி அடிச்ச மாதிரி உட்கார்ந்துக்கிடுவாறு. விளக்கு வைக்கிற நேரமாச்சு. நீங்க புறப்படுங்க. இன்னொரு நாள் பையங்கிட்டே சொல்லி அனுப்புறேன் என்று சொல்ல, உடம்பெல்லாம் ஒரே தூசு. கைகால் அலம்பிட்டு போறேன் என்று தட்டி மறைவிற்கு வாத்தி செல்கிறார். 

காலையிலிருந்து வீட்டில் இல்லாத பையன் அப்பொழுது ஓடிவருகின்றான். “உங்க வாத்தி இன்னைக்கு மூணு மூடை வரகை ஒத்தை ஆளா திரிச்சிட்டாறு. அம்மா கரிக்கொழம்பு வச்சிருக்கா. வீட்டுக்கு போன்னு அப்பா சொன்னாரும்மா” என்று சொன்னது முகம் கழுவிக்கொண்டிருந்த வாத்தி காதில் விழுகிறது. முழுக் குடும்பமும் ஒண்ணாச் சேர்ந்து தனக்கு கோமாளிப் பட்டம் கட்டியதை தெரிந்து நொந்து போய் வெளியேறுகிறார்.

இது தெரியாதா பையன் ஒருவாரம் கழித்து வாத்தியிடம், “அப்பா ஊர்லே இல்லையாம். அம்மா உங்களை வீட்டுப் பக்கம் வந்து போகச் சொன்னாங்க” என்று சொல்ல, வாத்தி அந்தப் பையனை கையெடுத்து கும்பிட்டு, “சாமீ!உங்க வீட்ல நாள் பூரா உக்காந்து வரகு திரிக்க எம் ஓடம்புல தெம்பில்லை. இதை உங்க அம்மாகிட்டே சொல்லீறு” என்று முடித்துக்கொள்கிறார். 

No comments:

Post a Comment