2,722 அடி உயரம், 163 மாடிகள்: புவி ஈர்ப்பு விசையை ஏமாற்றி புர்ஜ் கலிஃபாவில் தண்ணீர் மேலே செல்வது எப்படி?
உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிஃபா (163 மாடிகள்), வெறும் ஆடம்பரம் மட்டுமல்லாமல் பல்வேறு இயற்பியல் சவால்களை முறியடித்துக் கட்டப்பட்ட ஒரு பொறியியல் விந்தை ஆகும்.
உலகின் மிக உயரமான கட்டிடம், துபாயின் பெருமை எனப் போற்றப்படும் புர்ஜ் கலிஃபாவை (Burj Khalifa) கட்டிடமாக மட்டும்தான் தெரியும். ஆனால், 163 மாடிகளைக் கொண்ட இந்த பிரம்மாண்டத்தின் பின்னால் இருக்கும் பொறியியல் விந்தைகளும், சில கசப்பான உண்மைகளும் பலருக்குத் தெரியாது. புர்ஜ் கலிஃபா எப்படி இயற்பியல் விதிகளையே ஏமாற்றிக் கட்டப்பட்டது என்று பார்ப்போம்.
புர்ஜ் கலிஃபாவின் தரைத்தளத்தில் இருந்து அதன் உச்சிக்கு ஒரே பைப் வழியாக தண்ணீரை மேலே கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்து பாருங்கள். அப்படிச் செய்தால், அந்த பைப்பில் உருவாகும் அழுத்தம் (Pressure) சுமார் 1200 psi ஆக இருக்கும். இது நாம் வீட்டில் பயன்படுத்தும் தண்ணீர்க் குழாய் அழுத்தத்தை விட 24 மடங்கு அதிகம். இந்த அசுர அழுத்தத்தைத் தாங்க முடியாமல் இரும்பு பைப்புகளே வெறித்தனமாக வெடித்துச் சிதறி, முழுக் கட்டிடமுமே செயற்கை சுனாமியில் மிதந்திருக்கும். இந்த அழுத்தப் பிரச்னையைச் சமாளிக்க பொறியாளர்கள் ஒரு சூப்பர் ஐடியா செய்தார்கள். முழுக் கட்டிடத்தையும் 7 மண்டலங்களாக பிரித்தார்கள். ஒவ்வொரு 30 மாடிக்கும் ஒரு வாட்டர் டேங்க் மற்றும் பம்ப் அமைத்தார்கள். தரைத்தளத்தில் இருந்து பம்ப் செய்யப்படும் தண்ணீர் முதலில் 40-வது மாடிக்குச் செல்லும். அங்கிருக்கும் அடுத்த பம்ப் அந்தத் தண்ணீரை 70-வது மாடிக்குக் கொண்டு செல்லும். இப்படிப் புவி ஈர்ப்பு விசையையே ஏமாற்றி, படிப்படியாகத் தண்ணீரை உச்சிக்குக் கொண்டு சென்று அசத்தியுள்ளனர்.
புர்ஜ் கலிஃபாவைப் பற்றி வெளியே சொல்லப்படாத ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தக் கட்டிடம் திறக்கப்பட்ட முதல் 3 ஆண்டுகளுக்கு அங்கு முறையான பாதாளச் சாக்கடை (Sewerage Connection) இணைப்பே கிடையாது. கட்டிடத்தின் பிரம்மாண்டத்திற்கு இணையான கழிவுநீர் கட்டமைப்பு அப்போது துபாயில் இல்லை. இதனால், தினமும் புர்ஜ் கலிஃபாவில் சேரும் டன் கணக்கிலான கழிவுநீரை அகற்றுவதற்காக, நூற்றுக்கணக்கான ஆரஞ்சு நிற லாரிகள் தினமும் வரிசையாக வந்து நின்றன. அந்த லாரிகள் மூலம் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, பாலைவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுக் கொட்டப்பட்டன.
துபாயின் கோடைகாலம் என்பது சாதாரணமானது அல்ல, 122°F வரை வெயில் கொளுத்தும். இவ்வளவு கடுமையான வெயிலில் புர்ஜ் கலிஃபா கட்டும்போது, சிமெண்ட் கலவை பைப்பிற்குள்ளேயே உறைந்துபோகும் ஆபத்து இருந்தது. சிமெண்ட் காய்ந்துபோனால் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிவிடும். இதற்காகப் பொறியாளர்கள் கையாண்ட வினோதமான முறைதான் 'ஐஸ் கட்டி சிமெண்ட்'! சிமெண்ட் கலவையோடு பல டன் ஐஸ் கட்டிகளைக் (Ice Cubes) கலந்து குளிர்வித்தார்கள். அதுமட்டுமில்லாமல், வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் இரவு நேரங்களில் மட்டுமே சிமெண்ட் பூசும் பணிகளை மிகக் கவனமாக மேற்கொண்டார்கள். வெறும் ஆடம்பரத்திற்காக மட்டுமில்லாமல், அறிவியல் மற்றும் இயற்பியல் விதிகளையே சவாலுக்கு இழுத்து, பொறியாளர்களின் அசாத்திய திறமையால் செதுக்கப்பட்டதுதான் இந்த புர்ஜ் கலிஃபா.