Wednesday, 19 June 2013

அருணகிரிநாதர்


உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.

அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.

அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.

வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.

அது ஒரு “தகரவர்க்க”ப் பாடல். முற்றிலும் “த” என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே ‘வில்லி பாரதம்’ என்று வழங்குகிறது.

பாடலைப் பார்ப்போம்:
“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”

இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்

இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் “திதத்தத்தத்” என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை “மடக்கு” அல்லது “யமகம்” என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை “அந்தாதி” என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் – தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன.

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.

Tuesday, 18 June 2013

செப்டம்பர் 1752


வரலாற்றில் இருந்து ஒரு தகவல்  :

1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 11 நாட்கள் காணாமல் போய் இருக்கும்...

அது ஏன் என்றால் அந்த மாதத்தில் தான் இங்கிலாந்து அரசு "the Roman Julian Calendar" இருந்து "the Gregorian Calendar" மாற்றிக்கொண்டது....

ஜூலியன் வருடம் கிரகோரியன் ஆண்டை விட 11 நாட்கள் அதிகம்...

இதனை அறிந்த மன்னர் அந்த மாதத்தில் இருந்து 11 நாட்களை அகற்றும் படி உத்தரவிட்டார்...

ஆகையால் அந்த மாதத்தில் உழைப்பாளிகள் 11 நாட்கள் குறைவாக உழைத்தனர்..

இதிலிருந்து தான் விடுப்பு ஊதியம்(paid leave) எனும் முறை தோன்றியது...

ஜூலியன் காலேண்டேரில் ஏப்ரல் 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது....

ஆனால் கிரகோரியன் காலேண்டேரில் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது....

கிரகோரியன் காலேண்டர் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் மக்கள் பழைய வழக்கமான ஏப்ரல் 1 ஆம் தேதியையே புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்...

புதிய முறையை ஏற்க அதிக மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை ....

அரசு சிறிய உத்தரவுகள் பிறப்பித்தும் மக்கள் பழைய வழக்கத்தை விடுவதாக இல்லை....

யோசித்த மன்னர் ஒரு வினோதமான அறிக்கையை வெளியிட்டார்....

" ஏப்ரல் 1 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுபவர் யாராக இருந்தாலும் அவர் முட்டாளாக அறியப் படுவார்" என்று அந்த அறிக்கையில் இருந்தது....

அதிலிருந்து உதித்தது தான் ஏப்ரல் 1 ஆம் தேதி
முட்டாள்கள் தினம் (april fool's day)

Friday, 14 June 2013

பொங்கல் வாழ்த்து அட்டைகள்




சிறுவயதில் வீட்டுக்கு கடிதம் வருகிறதோ இல்லையோ பொங்கல் திருவிழாவின் போது நண்பர்களின் வாழ்த்து அட்டை வரும்... நாங்களும் எனது நெருங்கிய நண்பர்களுக்கு வார்த்து அட்டைகள் பெட்டிக்கடையில் வாங்கி ஊர் நடுவில் ஆலமரத்தில் தொங்கும் தபால் பெட்டியில் போடும் போது தான் எத்தனை மகிழ்ச்சி...

இன்று ஆயிரம் நண்பர்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு மேயில் தட்டினால் எல்லோருக்கும் போய்விடும் ஆனால் இதை விட அன்று ஒவ்வொரு நண்பனான அவன் பெயரையும் ஊர்ப்பெயரையும் எழுதும் போது அவனும் அவன் ஊரும் குடும்பமும் மனதில் ஒளிக்கும்..

பள்ளிகளில் பொங்கல் சமயத்தில் தபால் பெட்டி ஒன்றை தற்காலிகமாக நிறுவி நண்பர்களுக்கு வார்த்து அட்டை அனுப்ப சொல்வார்கள் நாம் நிறைய நண்பர்களுக்கு அனுப்பினாலும் நமக்கு ஒன்னு ரெண்டு வாழ்த்து தான் வரும் நம் பெயருக்கு நிறைய வரவேண்டும் என்று 10 அட்டைகளில் என் பெயரையே எழுதி எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு என்று 6 ம் வகுப்பிலேயே செய்த அலப்பறைகள் எல்லாம்... இந்த பொங்கல் வாழ்த்து அட்டையால்... கொசுவர்த்தியாக சுற்றுகிறது...

நிச்சயம் உங்களுக்கும் கொசுவர்த்தி சுற்றும் இந்த வாழ்த்து அட்டைகளை நினைத்ததும்...

திண்ணை



திண்ணை இல்லா வீட்டை பார்க்கமுடியாது முன்னொரு காலத்தில் அந்த அளவிற்கு மக்களோடு ஒன்றி இருந்தது திண்ணை. வீடு கட்டினால் நிச்சயம் பெரிய திண்ணை சின்ன திண்ணை என்று நிச்சயம் வீட்டின் முன் கட்டி இருப்பர்.

திண்ணை என்பது ஒரு திண்டு போல இருக்கும். இது வீட்டின் முன் பகுதியில் அல்லது தலைவாசல் பகுதியில் திறந்த வெளியில் அமைந்திருக்கும். சுவற்றில் சாய்ந்தும், காலைத் தொங்கவிடுவதற்கும் வசதியான அமைப்பாக அமைத்திருப்பர். இதில் இருக்கும் தூண்கள் வீட்டைத்தாங்கிக்கொண்டு இருக்கும்.

திண்ணையில் உட்கார்ந்து ஊர் கதை பேசுவதும் வீட்டுக்கு வரும் உறவினர்கள் அங்கு உட்கார்ந்து ஊர்க்காரர்களோடு அளவாடுவதும், பள்ளிப்பாடங்களை சிறுவர்கள் அங்கு உட்கார்ந்து படிப்பதற்கும், வீட்டு பஞ்சாயத்து, ஊர் பஞ்சயாத்து என ஒவ்வொரு திண்ணைகளும் அந்த கால கதையை சொல்லும்..

தங்களது அனுபவங்களை பகிரும் இடமாக இருந்த திண்ணை இன்று இல்லாமலே போய் விட்டது.. திண்ணை கட்டும் இடத்தில் ஒரு 4 க்கு 4 அறை கட்டி வாடகைக்கு விடும் காலம் இந்த காலம்...

கிராமத்துத் திண்ணை நினைவுகளில்
அலைபாயும் நெஞ்சில் ஏக்கம்வடியுது;

இனி திண்ணையோடு வீடு கிடைக்குமா?

Tuesday, 11 June 2013

அகத்தியரின் மித்ரவருண சக்தி


சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,



"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிரப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விசயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

Friday, 10 May 2013

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்


சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100


ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

கிருமிகள் உருவாகக் காரணம்

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

கண் நோய் :

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

பொதுக் காரணங்கள் :

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

சிறப்புக் காரணம் :

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

காசநோய் :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

வெள்ளெழுத்து

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

தலைநோய் :

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

கபால நோயின் வகை :

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

அம்மை நோய் :

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி 2. பாலம்மை

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

ஆண், பெண், அலியாவது ஏன்?
"பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே"
(திருமந்திரம் 480)

ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.

குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
(திருமந்திரம் 482)

அது சரி, ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்? அதற்கும் திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.

கருத்தரித்து விட்டது, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சி தரும் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம் என்கிறார் திருமூலர். மேலும் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கும் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார். பெண்ணின் வயிற்றில் மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால்குழந்தை குருடனாகவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?

"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
(திருமந்திரம் 481)

சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும் குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும்ஒருசேரக் குறைவாக இருந்தால் குழந்தை கூனாகப் பிறக்கும்.

100 ஆண்டு வாழ்வது எப்படி?
நாம் நூறாண்டு வாழ்வதற்கு நம் தந்தையரே காரணமாகின்றனர். எப்படி? விந்து வெளிப்பட்டதும் ஆண் விடும் சுவாசம் ஐந்து மாத்திரைக் கால அளவு நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆணிரம் பிறைகள் காண முடியும். ஆனால் மாத்திரை அளவு குறையக் குறைய அதற்கேற்றாற்போல் நமது ஆயுளும் குறையும் என்று பின்வரும் பாடலில் கூறுகிறார்.

பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே
(-திருமந்திரம் 479)

பிறப்பு இறப்பு பற்றிய இன்னும் பல கேள்விகளுக்கும் திருமூலர் பதில் கூறுகிறார்.

தொடரும்....

Wednesday, 1 May 2013

அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்..!


அரிக்கன் விளக்கு

காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.

அம்மி

குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.

அண்டா

அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.

அடுக்குப்பானை

ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.

அடிகுழாய்

கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.

ஆட்டுக்கல்

வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.

அங்குஸ்தான்

தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.

ஓட்டியாணம்

பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.

எந்திரம்

(அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.

உரல்

வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.

உரி

(வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.

குஞ்சம் - குஞ்சலம்

(பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.

கூஜா

(குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.

கோகர்ணம்

(ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.

கொடியடுப்பு

ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.

சுளகு

வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.

தாவணி

(இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.

தொடி

பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.

நடைவண்டி

(குழந்தை நடைபழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.

பஞ்சமுக வாத்தியம்

கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.

பாக்குவெட்டி

(பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.

பிரிமணை

(பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.

புல்லாக்கு

மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.

முறம்

(தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.

லோட்டா

நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.

மரப்பாச்சி

பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.

மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்துகொண்டே வருகின்றன. முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்.

நன்றி: தினமணி