Saturday, 16 November 2013

வரகின் மகிமை

வாத்தி வரகு திரித்த கதை

நமது சமயலறையில் பயன்படும் பல பொருட்களுக்கு பதார்த்த குண விளக்கங்கள் (Materia medica of plants,spices,minerals), அதாவது அதன் மருத்துவ மகிமைகள் பற்றி பேஸ்புக்கில் சில நண்பர்கள் சித்த வைத்தியர் ரேஞ்ச்சுக்கு பதிவிடும் போது, எனக்கு பொறாமையாக இருக்கும். நாமும் ஏதாவதொன்றின் மகிமையைப் பாடியே ஆகவேண்டும் என்று நினைப்பேன். எனக்கு பரிச்சயமானது வரகுதான்.அதைப் பற்றி எழுதிவிட்டேன். 

அரிசியே நமது பிரதான உணவென்றாகிவிட்டது. அப்படியிருந்தும் கூட, கம்பு சோளம் கேழ்வரகு மற்றும் ஓரளவு வழக்கொழிந்த வரகு,சாமை, திணை போன்ற தானிய வகைகள் போற்றப்படுவது மாதிரி அரிசி போற்றப்படுவதில்லை. அனீமியா தொடங்கி சர்க்கரை வியாதி வரை பல அவஸ்தைகளுக்கு அரிசியே காரணமென்று நிந்திப்பவர்களுமுண்டு. சர்வதேசச் சதிகாரர்களும் உள்ளூர் சதிகாரர்களும் ஒன்றிணைந்து நம்முடைய பாரம்பரியத் தானிய வகைகளை அழிதொழித்து, அதிகப் பராமரிப்பும், நீர்வளமும் தேவைப்படுகின்ற சத்தே இல்லாத அரிசியை நம் தலையில் கட்டிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டுபவர்களுமுண்டு. 

பாரம்பரியத் தானியங்களிலும் அரிசியிலும் இருக்கின்ற சத்துக்களை சிலர் ஒப்பீடும் பாணியே, பாரம்பரியத் தானியவகைகள் மட்டும் நம்மிடமிருந்திருந்தால் அல்லோபதி மருத்துவத்திற்கு அவசியமில்லாமல், புஜபல பாராக்கிரமத்தோடு, இன்னும் சொல்லப்போனால் நம்மில் பலருக்கு மரணமிலாப் பெருவாழ்வு சித்தித்திருக்குமென்று நம்மை ஏங்க வைப்பது மாதிரி இருக்கும். பாரம்பரியத் தானியவகைகள் சிறந்ததுதான். ஆனால் அதன் மறுபக்கம் பார்க்கத் தெரிந்தால்தான் நமது விவசாயிகள் அதை ஏன் விட்டுவிட நேர்ந்தது என்பது புரியவரும். 

கர்ணன் மாதிரி கவச குண்டலத்தோடு பிறக்க நாம் ஆசீர்வதிக்கப் படாவிட்டாலும், குறைந்த பட்சம் வரகோடு பிறக்கவாவது ஆசீர்வதிக்கப்ப்ட்டோமே என்று பலநேரங்களில் நான் திருப்திப் பட்டிருக்கின்றேன். என் சிறுவயதில் அதுதான் பிரதானம். கர்ணனிடமிருந்து நயவஞ்சகமாக கவச குண்டலத்தை பறித்த மாதிரி யாரும் சதி செய்து வரகை நம்மிடமிருந்து பிரிக்கவில்லை. மாறாக அது சற்று அவஸ்தையாக இருந்ததால் அதைச் சற்று ஒதுக்கி வைத்தார்கள். அவ்வளவுதான். . 

வரகு ஒரு அப்பிராணிப் பயிர்தான். அது சம்சாரியை எந்தவகையிலும் படுத்தாது. உழுது விதைத்தாலே, அது சம்சாரி தனக்கு கொடுத்த மிகப் பெரிய அங்கீகாரமென்று மகிழ்ந்து மகசூல் தந்துவிடும். வரகின் குணதத்தோடு ஒப்பிட்டால் நெல் அதற்கு நேரெதிர். அது ஒரு அகங்காரம் பிடித்த பயிர். அதை ஒரு “தொடுப்பை” பார்த்துக்கொள்வது மாதிரி பார்த்துக்கொள்ளவேண்டும். செலவழிக்க வேண்டும். கண்டுகொள்ள வேண்டும். பண்டுவம் பார்க்க வேண்டும். இல்லையென்றால் கோபித்துக்கொண்டு மகசூலில் ஏமாற்றிவிடும். வரகு ஏழை வீட்டுக் குமரி என்றால் நெல் பணக்கார வீட்டு குமரி.

வரகு காட்டிலிருக்கும் வரை ஏழைவீட்டுப் பெண்தான். ஆனால் வரகரிசியாக மாறும் போது, மாமியாருக்கு அடங்காத மருமகளாகிவிடும். வரகிலிருக்கும் அவஸ்தையே அதிலிருந்து அரிசியைப் பிரிப்பதுதான். நெல் மாதிரி மாங்குமாங்கென்று உலக்கையில் குத்தி உமியைப் பிரிக்கமுடியாது. .இப்பொழுது வரகிலிருந்து உமியைப் பிரிக்க இயந்திரங்கள் வந்திருக்கலாம். ஆனால் கடந்த காலத்தில் வரகிலிருந்து அரிசியைப் பிரிக்க யுத்த முஸ்தீபுகள் அளவுக்கு சிலவற்றை முன்னெடுக்க வேண்டும். வரகைக் கல்திருகையில் போட்டு திரிக்க வேண்டும். கல்திருகைகள் பொதுவாக மாவரைக்கவென்றே வடிவமைக்கப்பட்டது. கசகசவென்று மாவரைக்கும் திருகைகளை வைத்துக்கொண்டு, சூதானமாக உமியைப் பிரிக்க திருகைகளைத் தயார்படுத்த வேண்டும். அகலமான திருகைகளைத் தேர்வு செய்து, திருகையின் அடிக்கல்லின் மேற்புறமும், மேல் கல்லின் கீழ்ப்புறமும், அதன் சுற்றளவிற்கு அளவாக சணல் சாக்கை வெட்டியெடுத்து, சாணிப்பால், செம்மண் மற்றும் சிலவற்றைக் கொண்டு பக்குவமாகத் தயாரித்த பசை கொண்டு சாக்கை ஒட்டி காயவைக்க வேண்டும். ரெம்ப தடிமனான சணல் சாக்குகள் தோதுப்படாது. சாக்கு தடிமனாக இருந்தால் திருகையைச் சுற்ற முடியாது. அளவான தடிமனில் கிடைக்கும் சாக்குகளை உஷாராக இருந்து சேர்த்து வைக்கவேண்டும். நெல் குத்துவது மாதிரி அப்பப்போ வரகைத் திரித்து அரிசியெடுப்பது இச்சலாத்தியான வேலை. ஒரு குடும்பத்திற்கு எழெட்டு மூடை வரகரிசி தேவைப்படும்பட்சத்தில் அதை ஒரேமூச்சில் ஒரு project மனோபாவத்துடன் செய்து முடிக்க வேண்டும். எழெட்டு திருகைகள் தயார்படுத்தி, அதில் ஒன்றிரண்டை ஸ்டெப்னியாக வைத்துக்கொண்டு, 4-5 பெண்களை வைத்து 8-10 நாட்கள் திரிக்கவேண்டும். வரகு திரிப்பது இடிப்பொடிக்கும், கைவலிக்கும் வேலை. அதற்கு யாரும் விரும்பி வரமாட்டார்கள். அவர்களைக் கவர குறைந்தபட்ச கவர்ச்சித் திட்டங்கள் (கடுங்காபியோ, கருவாட்டுக் குழம்புடன் கூடிய களியோ) மற்றும் வரகரிசியைக் கூலியாகக் கொடுக்கவேண்டும். வரகரிசி ஒரு கவர்ச்சி. அது வீட்டிலிருந்தால், அதைக் கூலியாகக் கொடுத்து வேலைக்கு ஆட்களை எளிதாகக் கவரலாம். 

இப்பொழுதெல்லாம் பைவ் ஸ்டார் ஹோட்டல் செப்கள் வரகரிசியில் விதவிதமான பண்டங்களை சமைக்க முடியும் என்று வித்தை காட்டுகிறார்கள். வரகரிசியில் சாதத்தைவிட வேறு எதையும் நான் சாப்பிடும் புண்ணியம் வாய்த்ததில்லை. ஒரு வேக்காடு கூடிவிட்டாலும் சாதம் குலைந்துவிடும். வரகு புழக்கத்திலிருந்த காலத்தில் அரிசியும் புழக்கத்தில் இருந்தது. நெல்தான் அகங்காரம் பிடித்த பயிர். ஆனால் அது அரிசியாகிவிட்ட அடுத்த கணம், director’s artist என்று சில நடிகைகளைக் குறிப்பிடும் மாதிரி, பெண்கள் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும். மாறாக பயிராக இருக்கும் வரைதான் வரகு அப்பிராணி. அது அரிசியாகி விட்டால் அது அடங்காபிடாரிதான். அரிசியில் விதவிதமான அயிட்டங்களை சமையலில் கத்துக்குட்டிகள் கூட செய்து அசத்தமுடியும். வரகரிசியில் நினைத்த மாதிரி வித்தை காட்ட முடியாது. அது அனுபவஸ்தர்களை வந்து பார் என்று கெக்கலி காட்டும். வரகைப் பிரபலப்படுத்தும் எண்ணத்தோடு அதில் இது செய்யலாம், அது செய்யலாம் என்று சொல்லப்படும் குறிப்புகள் எல்லாம் கைப்பக்குவம் மிக்கவர்களுக்கு சாத்தியமாகலாம். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு சாத்தியப்படாது. பிறந்த வீட்டில் நல்ல மகளாக இருந்து, புகுந்த வீட்டில் அடங்காபிடாரி மருமகளாவது போலத்தான் இது. இந்த அடங்காபிடாரித்தனம், அரிசியைத் தவிர, நாம் போற்றும் பிற சிறு தானிய வகைகளுக்கு உண்டு. சதிசெய்து யாரும் அரிசியைக் கொலுவில் ஏற்றவில்லை. நம்முடைய தாய்மார்களின் விருப்பதிற்கேற்ப அரிசி வளைந்து கொடுத்த தன்மைதான், அதனுடைய பணிவுதான் அதை முதல் இடத்திற்கு உயர்த்தி இருக்க வேண்டும். 

வரகின் மகிமையைப் பற்றி யார் பேசினாலும் எனக்கு சிரிப்பு வந்துவிடும். காரணம் வரகோடு சம்பந்தப்ப்ட்ட ஒரு ஜோக்கால். வரகு திரிப்பதில் உள்ள அவஸ்தையைச் சொல்லும் ஜோக் அது. 

ஒரு கிராம பள்ளிக்கூட வாத்திக்கு தன்னிடம் படிக்கும் மாணவனின் தாயின் மீது ஒரு “கிறுக்கு”. அந்தப் பையன் மூலம் அவனின் அம்மாவிடம் “பழக” நினைத்து, அவனிடம் பிரியம் காட்டுகிறார். அந்தம்மாவும் வாத்தியைப் பார்த்தால் சிரித்துவிட்டுச் செல்வார். இது போதாதா? ஒருநாள் வாத்தியே, “சிரிச்சா மட்டும் போதுமா, வீட்டுக்கு கூப்பிடமாட்டீங்களா? என்று கேட்டே விடுகின்றார். அதற்கு அந்தப் பையனின் தாயும், “பையானோட அப்பா ஊரில் இல்லாத நாள் பார்த்து பையனிடம் சொல்லி அனுப்புவதாக” கூறிச்செல்ல, வாத்தி அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றார். அந்த நாளும் வந்தது. பையனே வாத்தியிடம் வந்து, “சார்! நாளைக்கு விடிஞ்சதும் எங்கம்மா உங்களை வீட்டுக்கு வரச் சொன்னாங்க. காலை காபி, சாப்பாடு, மதியச் சாப்பாடு எல்லாமே எங்க வீட்டில்தானென்று உங்ககிட்டே சொல்லச் சொன்னாங்க” என்று சொல்லிவிட்டுச் செல்கிறான். வாத்திக்கோ உற்சாகத்தில் இரவெல்லாம் உறக்கமில்லை. எப்பொழுது விடியும் என்று காத்திருந்து, விடிந்ததும் பையனின் வீட்டிற்கு செல்கிறார். வாத்திக்கு காபி கொடுத்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த போது, “ஊருக்குப் போன அப்பா வந்துகொண்டிருப்பதாக” பையன் மூச்சிறைக்க ஓடிவந்து சொல்கின்றான். 

‘ஊருக்குப் போனவரு திரும்பி வார நாலைந்து நாளாகும்’ என்று சொன்னதால்தான் இன்னைக்கு உங்களை வரச்சொன்னேன்.. அய்யோ அவரு கோபக்காரராச்சே உங்களை இங்க பார்த்தா, வேறு வினையே வேண்டாம்” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டே, ‘பிரியமாக வந்துட்டீங்க .நீங்க பொக்குன்னு போயிடக்கூடாது’, எனக்கு ஒரு யோசனை தோணுது அதன்படி செய்யமுடியுமா? என்று கேட்க, வாத்தியும் ‘உங்கூட இருக்கிறதுக்கு எதையும் செய்யத் தயார் என்று ஜொள் விடுகிறார். “ஒரு கிழவியை வைத்து நாலைந்து நாட்களாக வரகு திரிப்பது எம் புருசனுக்குத் தெரியும். உங்க மேலே ஒரு சேலையை போத்தி விடுறேன். திருகைக்கு முன்னாடி உட்கார்ந்து கொஞ்சநேரம் வரகு திரியுங்கள். அவரை எப்படியாச்சும் தாக்காட்டி வெளியே அனுப்பிச்சிடறேன்” என்று சொல்ல வாத்தியும் உற்சாகமாக வரகு திரிக்க ஆரம்பிக்கிறார். 

வீட்டுக்கு வந்த புருசனும் வீட்டுக்குள் வராமல், வரகு திரிப்பதை பார்த்துக்கொண்டு வெளியே உட்கார்ந்து கொள்கிறான். “நான் போய் கவுச்சியும், முட்டையும் வாங்கி வாறேன்” என்று வாத்திக்கு கேட்கும்படி புருசனிடம் சத்தமாகச் சொல்ல, வாத்தி அது நமக்குத்தான் என்று நினைத்து திருகை சுற்றுவதை வேகப்படுத்துகிறார். வெளியே போய்விட்டு வந்த பெண்டாட்டி, ‘”கொஞ்சம் பொருத்துக்குங்க. வேகமாச் சமைச்சி, வெந்தும் வேகாமலும் ஒரு நாலுதுண்டு கரியைப் போட்டு அவரை வெளியே பத்திவிடுறேன்’ என்று வாத்தி காதில் கிசுகிசுத்துவிட்டு சமைக்க ஆரம்பிக்கிறார். சமைத்து புருசனும் பொண்டாட்டியும் சாப்பிடுகிறார்கள். வாத்திக்கு கேப்பைக்கூழ் கொடுத்துக்கொண்டே, ‘கொஞ்சம் பொருத்துக்குங்க அவரை இப்ப அனுப்பிச்சிறேன்’ என்று மீண்டும் வாத்தியிடம் கொஞ்சலாக கிசுகிசுத்து செல்கிறார். நேரம் போனதுதான். புருஷன் போனமாதிரி தெரியவில்லை. புருஷன் வெளியே உட்கார்ந்துகொண்டு வரகு திரிப்பதையே பார்த்துக்கொண்டிருக்கின்றான். மாலை நெருங்கி விளக்கு வைக்கும் நேரம். “மூணாளு திரிக்கிற வரகை இன்னைக்கு கிழவி ஒத்தை ஆளா திரிச்சிருச்சி. அவளுக்கு காபித் தண்ணி ஏதாச்சும் குடு. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வாறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான், பொண்டாட்டியும் “சே! வந்த மனுஷன் இப்படியா ஆணி அடிச்ச மாதிரி உட்கார்ந்துக்கிடுவாறு. விளக்கு வைக்கிற நேரமாச்சு. நீங்க புறப்படுங்க. இன்னொரு நாள் பையங்கிட்டே சொல்லி அனுப்புறேன் என்று சொல்ல, உடம்பெல்லாம் ஒரே தூசு. கைகால் அலம்பிட்டு போறேன் என்று தட்டி மறைவிற்கு வாத்தி செல்கிறார். 

காலையிலிருந்து வீட்டில் இல்லாத பையன் அப்பொழுது ஓடிவருகின்றான். “உங்க வாத்தி இன்னைக்கு மூணு மூடை வரகை ஒத்தை ஆளா திரிச்சிட்டாறு. அம்மா கரிக்கொழம்பு வச்சிருக்கா. வீட்டுக்கு போன்னு அப்பா சொன்னாரும்மா” என்று சொன்னது முகம் கழுவிக்கொண்டிருந்த வாத்தி காதில் விழுகிறது. முழுக் குடும்பமும் ஒண்ணாச் சேர்ந்து தனக்கு கோமாளிப் பட்டம் கட்டியதை தெரிந்து நொந்து போய் வெளியேறுகிறார்.

இது தெரியாதா பையன் ஒருவாரம் கழித்து வாத்தியிடம், “அப்பா ஊர்லே இல்லையாம். அம்மா உங்களை வீட்டுப் பக்கம் வந்து போகச் சொன்னாங்க” என்று சொல்ல, வாத்தி அந்தப் பையனை கையெடுத்து கும்பிட்டு, “சாமீ!உங்க வீட்ல நாள் பூரா உக்காந்து வரகு திரிக்க எம் ஓடம்புல தெம்பில்லை. இதை உங்க அம்மாகிட்டே சொல்லீறு” என்று முடித்துக்கொள்கிறார். 

Friday, 15 November 2013

வாழ்க்கையின் ரகசியம்

''சீனக் கதை இது. ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், 'அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’ அம்மா சொன்னாள், 'எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’ 

அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, ஆசிரியை 'நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன. 

ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் 'நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான். 

ஆசிரியை கோபமாக, 'உனக்குக் கேள்வி புரியவில்லை’ என்றார். சிறுவனோ, 'டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை’ என்றான்!''

Friday, 4 October 2013

துபாய் கணவா....

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
ஒருகையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...
என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?
கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா...?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு..
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!

இல்லையேல் விவாக ரத்துசெய்து விட்டு போ

Friday, 30 August 2013

தேங்காய்

பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன. தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.

தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம்.

தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் :

தேங்காய் :

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

தேங்காய்ப் பால் :

உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.  குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். 

தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் : 

நாள்பட்ட தீராத புண்களுக்கு மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்கு வெப்பாலைத் தைலம், பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம்.

இளநீர் :

இளநீர் மிக மிகச் சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.

அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இதன் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப்பொருள்களும் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக, ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

தென்னம் பூ :

வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க தென்னம் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

தென்னை வேர் :

மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கிற்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.

தென்னங்குருத்து :

மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.

Friday, 23 August 2013

ஆயிரம் கரங்கள் நீட்டி


ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!

காலத்தை வென்று சரித்திரங்கள் பல படைத்த "கர்ணன்" திரைப்படத்தின் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத இந்த பாடலை விரும்பாதோர் தமிழரே இல்லை எனலாம்.

இயற்கையின் தாயான கதிரவனைப் பற்றிய பாடலாதலால் அனைத்து மதத்தவராலும் ரசிக்கப்படுகிறது.

T.M.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P.B.ஸ்ரீநிவாஸ், திருச்சி லோகநாதன் ஆகிய நான்கு இசையுலக ச் சக்கரவர்த்திகள் இணைந்து பாடி, இனி இப்படி ஒரு பாடல் உலக வரலாற்றிலேயே அமையாது என்று எண்ணும் அளவுக்கு புகழ் பெற்றது.

இதனை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மனம் லயிக்கும்; உடல் சிலிர்க்கும்; கண்கள் பனிக்கும்.

இந்த பாடலை தேடிக்கொண்டிருப்போர் பலர் இருப்பார்கள். ஆகவே youtube video link : http://www.youtube.com/watch?v=xsCtzX-9TiU mp3 link : http://tamildada.com/karnan-songs/ பாடல் வரிகள் ஆகியவற்றை தமிழன் என்ற பெருமையுடன் பகிர்கின்றேன்.

Thursday, 22 August 2013

CHEPAUK PALACE

CHEPAUK PALACE, that genesis of the Indo-Saracenic School of architecture, is impossible to be seen in its handsome entirety today, hidden as it is by the buildings that have come up around it. Even its vast grounds are no longer visible, Chepauk Park is but a sad memory. And this sad stage of affairs is not wholly due to present-day development; it began when the `Government' of the time took over the palace and park 150 years ago.



 When Mohammed Ali Wallajah, friend of the British, died, he was succeeded as the Nawab of Carnatic by his son Umdat-ul-Umrah, no favourite of the Council in Fort. St. George. Accusing him of having conspired with Tippu Sultan during the Fourth Mysore War, Lord Edward Clive sent his soldiers in to occupy the palace in 1801, annexed the Carnatic in consequence of the settlement of the Carnatic debts and reduced the Nawabocracy to a Titular Nawabship. When the last Titular Nawab, Ghulam Ghouse Khan Bahadur, died in 1855, the British decided to make its occupancy of the palace permanent by moving out of it, its chief occupant, thereafter to be known as the Prince of Arcot. After a series of moves, Amir Mahal became the home of the successive Princes of Arcot, who from 1868 began receiving a pension from the Government, various tax exemptions and the maintenance costs of their new home. These obligations are still met by the Government of India, honouring the agreements of the Victoria era, as they do for three other princes as well, those of Tanjore, Calicut and Oudh.

 With Chepauk Palace now vacant, the Madras Government decided to legitimise its occupancy by putting up the property for sale in 1859. When Government was the only party that could meet the minimum asking price, it took over the ownership of Chepauk Palace and its host of outbuildings, Marine Villa by the Cooum and their 117 acres for Rs. 5.8 lakhs. And into the palace it moved several Government offices, beginning the process of decline.

Wednesday, 14 August 2013

மனைவி அமைவதெல்லாம்..!

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும், பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும், கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நிறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால்..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன். இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன். எஸ்.ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன். கேரம், செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள். ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .

ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.

கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.

புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?

இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!

எந்த புக்கும் படிச்சது இல்லையா ?

ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!

இந்த குமுதம், ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?

நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடைசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!

எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன்..!

எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள்...? ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது..!


கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம்.

ஆனால்..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது, வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.

அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன்..!

இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா..?

எதுக்கு வாங்குனீங்க..?

இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா..? கிரிக்கெட் பார்ப்பியா..?

எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது..!

(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும்)

யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!

இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?

ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!

உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!

அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?

சரி எஸ்.ஜானகி புடிக்குமா ?

யாரு கிழவி போல இருக்குமே அதுவா ?

எஸ்.ஜானகியை கிழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம்...! எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!

என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம்...! துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .

ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்

இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .

கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!

பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.

மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சதை சமைச்சு போடணும் - இது என் அம்மா

நானும் அவளிடம் கேட்கிறேன்

உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு

அதெல்லாம் ஒன்னும் வேணாம்

இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்

பிடிக்குமென சிலதை சொல்ல

முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.

இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல..?

ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.

அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.

நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை சுக பிரசவம் தான் .

நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.

இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.

பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம், ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.

குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .

தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .

வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!

சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.

இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல், மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று..!

சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான்...

இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி , இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன், கிரிக்கேட், எஸ்.ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல..!

ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!

எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்

ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!

தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..!

Tuesday, 13 August 2013

காதல்

காதல் என்பது...

ஒவ்வொரு மனிதனின்

தலை எழுத்தில் இருக்கும் எழுத்து பிழை...!

விலகவும் முடியாது

விளக்கவும் முடியாது...

Monday, 29 July 2013

மறுமுறைகண்டவாசகம் - தற்சோதனை

வள்ளலார் அருளிய மறுமுறைகண்டவாசகம் 
மூலம் நாமும் தற்சோதனை செய்வோம்...

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ் வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக்கொழிய வழியடைத்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ!
கோள்சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ!
கலங்கியொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல்கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!

குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!

பக்ஷயைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப்பாலுட்டாது கட்டி வைத்தேனோ!
ஊன்சுவையுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!

அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந்துர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறிவைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!

சுத்த ஞானிகளைத் து஡ஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வமிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்ன தென்றறியேனே!

என்ன பாவம் செய்தேனோ! என்ன பாவம் செய்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ!என்ன பாவம் செய்தேனோ!

பூவரசு

பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று. காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது.

இதில் கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.



பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்...

நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.

சிதம்பர ரகசியங்கள்


சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல செய்திகளை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த சில தகவல்கள்.

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயம் ஆகியன சரியாக ஒரே நேர்கோட்டில் 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கே கணிக்கப்பட்டது பொறியியல், புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.



(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலின் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிக்கின்றன.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது. (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் உடலின் கண்ணுக்குத் தெரியாத பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்" 

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், இதன் பொருள் : " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". 

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தின் இடத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபையைத் தாங்க 4 தூண்கள் உள்ளன, இது 4 வேதங்களை குறிக்கின்றது.

(8) பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS), மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றன.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

Tuesday, 23 July 2013

தச வாயுக்களும் அதன் பணிகளும்


கண்ணால் காண முடியாத (உயிர், பிராணன், ஜீவன்) எனும் உயிர்க்காற்று நிலவி, நிரவிடும் ( தச வாயுக்களில் ஒன்றான பிராதனமான பிராண வாயு ஆகும்.)

பிறந்த உடன் துவக்கிய சுவாசம் இறுதி மூச்சு எனப்படும் மரணம் வரை அவனை வாழ வைக்கிறது.

பிராண வாயுக்களோடு (பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்) என்று பெயர்ப்பும் பிரதான ஐந்து வாயுக்களுடன் இதர உப வாயுக்களான (நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் , தனஞ்செயன் ) என்ற ஐந்து வாயுக்களும் சேர்ந்து தச வாயுக்கள் எனப்படும் பத்து வாயுக்களும் இணைந்திருப்பினும் செயல்படாமல் இருந்தன எனக்கூறலாம்.

கருவீட்டினின்றும் பெருவீடு என்ற இந்த பிரபஞ்சத்தின் பிடிக்கு வந்த பிறகே இந்த பத்து வாயுக்களும் தத்தம் பணியினைத் துவங்கியது என்பதோடு உடலின் பல்வேறு பகுதிகளில் பிராணனோடு இணைந்தும், தனித்தும் பிராணனின் கட்டுப்பாட்டில் பங்கேற்கிறது. தச வாயுக்களும் அதன் தன்மைகளும் பிராணன் ஏனைய வாயுக்களுக்கு எல்லாம் தலைமையாக இருந்து அனைத்து உறுப்புகளுக்கும் உயிரூட்டும் வகையில் ரத்த ஓட்டத்தின் மூலம் பிராண வாயுவினை அளித்து வருகிறது.


இப்பணிக்கு வாசி என்ற சுவாசத்தை பயன்படுத்தி அச்சுவாசத்தின் மூலம் அச்சுவாசத்தினுள் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்கிறது. இது மேல் நோக்கிய பாய்ச்சலைக்(ஓட்டம்)கொண்டது.

அபானன்

அபான வாயு கீழ் நோக்கிய பாய்ச்சலைக்(ஓட்டம்)கொண்டது. “மலக்காற்று” எனவும் இதற்குப் பெயர் உண்டு.

குண்டலினி போன்ற மா சக்திகளைப் பெறுவதற்கு இன்றியமையாதது மட்டுமின்றி குறிப்பிட்ட சில பயன்களுக்காக அபானன் வெளியேறி விடாமல் இருக்கச் சில பந்தங்களை இயற்றி அப்பலன்களை அடைவாரும் உண்டு.

கும்பகம் என்ற உள்நிறுத்த சுவாசப்பயிற்சியின் பலன்கள் எண்ணிலடங்காதது என சித்தர்கள் கூறுகின்றனர். அவ்வமயம் அபானனை வெளியேறி விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இதில் தவறு ஏற்படுமாயின் கும்பகப்பயிற்சி பலன் அற்றதாகி விடும் என்றும் எச்சரிக்கின்றனர்.

வியானன்

இதன் உற்பத்தி மூலத்தானமாக மண்ணீரல் விளக்குகிறது. உணர்வு நரம்புகள் (கட்டளை நரம்புகள்) மற்றும் உணர்வுகளை எற்றிசெல்லுதல் ,செயல் படுத்துதல் நரம்புகளாகவும் மற்றும் இரு நரம்புகளுக்கு இடையே வியாபகம் பெற்ற நரம்பணுக்களை கட்டுப்படுத்துவதாகவும் நரம்புகளின் கேந்திரமான மூளையையும் செயல்படுத்தும் (இயங்கும்) வகையில் தொழில் புரிய வைப்பதும் வியானன் என்ற வாயு ஆகும் . இதனை தொழிற்காற்றென அழைப்பர்.


உதானன்

மூச்சு மண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள முன் தொண்டை, மூக்கு ,குரல் வளை, மூச்சுக்குழல் , மூச்சின் இதர கிளை குழல்கள் ஆகிய கருவிகளின் உதவியினாலும் நாபி எனும் பகுதியில் இருந்து பிராண உந்துதலால் குரல் (சப்தம்) எழும்புவதற்கு அடிப்படை உதானன் என்ற ஒலிக்காற்று ஆகும். மேலும் குரல் வளையினுள் உட்பக்கத்திற்குள் இரண்டு பக்கத்திலும் பக்கத்திற்கு இரண்டு திசுக்களான மடிப்புகள் இடைவெளியுடன் அமையப்பெற்றுள்ளன . இம்மடிப்புகள் குரல் நாண்கள் எனப்படுவதாகும். இதனுள்ளே உதானன் செல்கிறபோது குரல் நாண்கள் அதிர்ந்து ஒலியினை எழுப்புகின்றன.


சமானன்.

உடலின் அனைத்துப் பகுதிகளில் உள்ள திசுக்கள் மற்றும் மிக நுண்ணிய உடலணுக்களை வளர்க்கவும் பராமரிக்கவும் காரணியாய் உள்ளதும் பல்வேறு வகை புரதம் மற்றும் இதர தாதுக்களை உணவில் இருந்து பிரித்தல் , உணவை செரித்தல் , அவ்விதம் செரித்தல் மூலம் கிட்டிய சத்துக்களை உடல் முழுதும் பரவச்செய்தல் போன்ற பணிகளைச் செய்யும் வாயுவே சமானன் ஆகும் . இதனை நிரவுக்காற்று(பரப்புதல்,சேர்ப்பித்தல்)எனப் பெயர்பெறுகிறது.


நாகன்

பிராணனின் தலைமை வாயிலான மூக்கு மற்றும் கேந்திர பாகமான நுரையீரலின் அனைத்துப் பகுதிகளிலும் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் தூசு, மாசுக்காற்று , ஆகியவைகள் உட்புகாமல் வெளியேற்றும் வகையில் மூளையின் அதிவேக கட்டளையின்படி சாதரண மூச்சின் அழுத்தம் மற்றும் வேகத்தை விட பல நூறு மடங்கு வேகமும் அழுத்தமும் கொண்ட தும்மல் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும் வாயு நாகன் ஆகும். இதனை “தும்மற்காற்று” எனக்கூறுவர். மேலும் கபாலத்தின் கீழ்ப்பகுதி ,கண்களின் நேர்பின் பகுதி , மூக்கின் வலது மற்றும் இடது உள்பள்ளப்பகுதி (CAVITY) ஆகியவற்றின் சவ்வுகளின் ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக இறந்த செல்களை வெளியேற்றவும் , தும்மல் மூலம் வெளியேற்றுதலுக்கு நாகன் வாயு உதவிபுரிகிறது.


கூர்மன்

உள்விழி நீரை சரியான அழுத்தத்தில் வைத்திடவும் விழிகளின் அசைவிற்கு துணை புரிவதும் , மகிழ்ச்சி ,சோகம் மற்றும் விழிக்கு ஒவ்வாத நிலையினை ஏற்படுத்தும் காலங்களில் விழி நீர் என்ற கண்ணீரை வரவழைப்பதும் கூர்மன் என்ற வாயுவின் பணியாகும். குறிப்பு - விழிநீரில் சோடியம் குளோரைடு என்ற உப்பு நீர், அல்குமீன் , என்ற முட்டைச் சத்து சிறிதளவு சளி போன்ற கிருமி நாசினிகளை வெளியேற்றி விழிகளை பாதுகாப்பதும் கூர்மனின் பணியாகும்.


கிருகரன்

மூளை தனக்கு ஒய்வு பெற எண்ணும்போதும் மூச்சின் வேகம், மூச்சின் எண்ணிக்கை இரண்டையும் குறைக்க முயலும்போது அந்நேரம் உறக்கம் வருவதற்கு “கொட்டாவி” என்ற செயலை ஏற்படுத்துவது கிருகரன் ஆகும். அவ்வேளை நுரையீரல் உள்ளே உட்புகும் வெளியேறும் பிராண வாயு குறைவினால் உடலின் அனைத்து பாகங்களிலும் பிராண வாயு ஏற்றம் திடீரெனக் குறைவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் நுரையீரலை வேகமாகச் சுருங்கி விரியும் தன்மையினை ஏற்படுத்தி நுரையீரல் பிராண வாயு பற்றாக்குறையினைச் சரிப்படுத்தும் நோக்கமும், ஆக இவ்விரு பணிகளையும் செய்து முடிப்பதும் கிருகரன் என்ற வாயுவின் பணி ஆகும்.

தேவதத்தன்
விழி உலராயிருக்கவும் , விழியை பாதுகாக்கவும் ,இமைகளை இமைத்தல் (நிமி) என்ற பணியை மேற்கொள்வது தேவதத்தன் ஆகும். மேலும் நாம் உறங்கும் சமயம் தவிர்த்து விழித்திருக்கும் முழுதும் இடைவிடாது செயாலற்றும் வாயுவை தேவதத்தன் என்பர்.


தனஞ்செயன்
மனித உடல் இறந்து பட்டு வீழ்ந்தபின் ஏனைய ஒன்பது வாயுக்களின் பணிகள் முற்றிலும் நின்று விடும். அத்துடன் அவை யாவும் உடலை விட்டு வெளியேறிவிடும். ஆனால் தனஞ்செயன் மரித்த உடலில் இயங்கிக்கொண்டு இருந்த ஒவ்வொரு செல் (நுண் திசுக்கள்) இயக்கமறச்செய்து விடுகிறது. அவ்வமயம் தனஞ்செயன் நுண் கிருமிகளைத் தூண்டிவிட்டு வெளியே இருந்து வெளிக்காற்று, ஒளி உட்புக முடியாமல் உடல்தோல் மற்றும் தசைகளை விறைக்கச் செய்வதும் உடலை வீங்க வைத்தும் பின் உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது. இதனை வீங்கற்காற்று என அழைப்பர்.


இவ்விதமாய் தசவாயுக்களும் நம் உடலில் பல்வேறு செயல்களும் தன்னிச்சையாக செயல்படுகிறது. உயிர்க்காற்று (பிராண வாயு) யின்றி ஏனைய ஒன்பது காற்றுகளும் செயல்படமுடியாது.

எனவே பிராணனை நன்கு இயக்கி பிராணனுள் பிராணனால் சக்தியூட்டி பிராண ஆற்றலை மேம்படுத்தி அதன் வழியே உடல், மனம் இரண்டின் இயக்கங்களை நம் கட்டுபாட்டில் கொணர்ந்து உடற்சக்தி , உளசக்தி இரண்டின் துணையுடன் மூன்றாவது ஆன்ம சக்தியை எழுப்பி அதன் மூலம் தேவையான போது உடல் இயக்கத்தை முற்றிலும் நிறுத்தி ஆன்ம எழுச்சி முதிர்கின்ற போது இவ்வுடற் சக்தியின்றியே இறைசக்தியினை உணர்வதற்கு ஞானிகள் கூறிய யுக்தியே பிராணனை வசமாக்கும் “பிராணாயாமம் ” ஆகும்.

Tuesday, 16 July 2013

பென்சில் - ரப்பர்

பென்சில்:
என்னை மன்னிக்க வேண்டும்.

ரப்பர்:
எதற்காக மன்னிப்பு?

பென்சில்:
நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?

ரப்பர்:
நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்காகவே நான் படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன்.அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும்,நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன்.அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும்.

இதுதான் வாழ்க்கை ..
நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம் வெளியே தெரியாமல்...

நன்றி : Facebook

Monday, 8 July 2013

மதுரை


உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள். நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The World's only living civilization" என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.

மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க விடயம் என்னேன்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர். ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?

அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.

ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும், மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!

குறிப்பு: அன்றைய மதுரை என்பது இன்றைய மதுரையைக் காட்டிலும் மிகப் பெரிய அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக தொண்டி செயல்பட்டது மேலும் கீழ் திசையில் நெல்லை வரையிலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது!

Thursday, 4 July 2013

சோற்றுக் கற்றாழை


கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

ஸ்ரீரங்கம் அன்றும் இன்றும்

வண்டின முறலும் சோலை மயிலின மாடும் சோலை. மாற்றங்களை வரவேற்றபடி. இருபத்தியைந்து வருடங்கள் நான் வளர்ந்திருக்கிறேன், அதன் வீழ்ச்சியுடன். இன்றும் விட்டுவிடாமல் தொட்டுக்கொள்வதற்கு மட்டுமான உறவு. பழைய ஞாபகங்கள். புதிய ரணங்கள். நண்பிக்கு மேலே, காதலிக்கு கீழே. மனைவியாகிவிடமாட்டாள் என்பதில் ‘அப்பாடா, தப்பித்தோம்’ என்கிற நிம்மதியில்லை. மனைவியானாலும் அறுபதாம் கல்யாணத்தில்தான் என்பதில் இன்றளவு நிம்மதியே.

ஸ்ரீரங்கமும் கிட்டத்தட்ட இதையேதான் சொல்லும், என்னைப் பற்றி.

பல்லவனில் லால்குடி வந்ததுமே எழுந்து (சில முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் அரியலூரிலேயே எழுந்துவிடுவர்) தலையைச் சரிசெய்துகொண்டு, பரணில் இருக்கும் லக்கேஜையெல்லாம் இறக்கி அவற்றை அடுத்தவர் முன்னேறிவிடாமல் தற்காப்பாய் வைத்துக்கொண்டு, வாசலுக்கு கியூ-கட்டி, கொள்ளிடம் வந்ததும் ராயகோபுரத்தை பார்வையிட ஜன்னல் வழியே குனிந்தால், காணோம். கும்மிருட்டு. கரண்ட் இல்லை.

நான் வாசித்த ஹைஸ்கூல் தாண்டி என்றும் மூடியிருக்கும் லெவல்கிராஸிங் ஊடே காட்டழகியசிங்கரைக் கடந்து, ரயில்நிலையத்தில் இறங்கியதும் சிறு உற்சாகம். தண்டவாளத்தில் ரயில் வருமுன் இரண்டு பைசாவை வைத்து, தடதடத்ததும் பத்துபைசா சைஸிலிருக்கும் அக்காசைத் தேடிப் பொறுக்கி, இன்ட்ரவலில் அருகில் பள்ளியின் முன் ஐஸ்ஃப்ரூட் வாங்குவது பாலகாண்டத்தில்.

சிறுவனாய் வசித்த தாத்தம் தெரு வீடு, திருமஞ்சனக்காவேரி என்றழைக்கப்படும் திருச்சாக்கடையின் திருப்பாலம், வேலிக்குள் முட்புதர்களாகவும், கறிகாய்ச் செடிகளாகவும் இருந்த பிரதேசங்கள் ஹோல்சேலாய் சிமெண்ட் ஜல்லிக் கலவைகளில் சிரிக்க, இளமை நினைவை சுரக்கும், துறக்கும், தெருக்கள் என்று அந்நியமாய்க் கடந்து வீட்டையடைந்தேன். முப்பது வருடம் முன்னர் திருமஞ்சனக் காவேரியில்தான் வீட்டில் பொங்கலுக்கு “காக்கா பிடி, கன்னு பிடி” என்று கலர் சாதங்களை வைத்துப் பிடி சுற்றுவார்கள். பாலத்தில் மேலிருந்து அதில் தொபுகடீர் என்று குதித்துக் குளிக்கும் சக சிறுவர்களை, காலில் தண்ணீர் படாமல் (அரைகுறையாய் உள்ளங்கால் ஈரமாகி அடுத்த அடியில் ஒட்டும் மண் எனக்கு மரவட்டையை ‘க்ரச்சக்’ என்று மிதிப்பதைவிட உவேக்) ஓரமாய் நின்று வேடிக்கைப் பார்ப்பேன். பாலத்திலிருந்து தொபுகடீர் என்று திருமஞ்சனக் காவேரிக்குள் இன்று தற்கொலை செய்துகொள்ளக்கூட குதிக்கமுடியாது. சற்றே ஆழமான குப்பைக்குழியில் விழுவதால் கால் மட்டும் உடையலாம்.

திருச்சி மாவட்டம் கந்தக பூமி. கோடை வெப்பநிலையும் சென்னையைக்காட்டிலும் ஸ்ரீரங்கத்தில் அதிகம். நிச்சயம் தரையிலேயே ஆம்லெட் போடலாம். ஹீரோயினின் நாபிக்கமல பிரதேசங்களைத் தேடிப்போகவேண்டியதில்லை. மொட்டைமாடியில் வேஷ்டியில் பிழிந்த கூழ் இரண்டு மணிநேரத்தில் காய்ந்த வற்றலாகிவிடுகிறது. சற்றுப் பொறுத்து எண்ணை ஊற்றினால், அங்கிருந்தே வற்றலை இலைக்குப் பரிமாறிவிடலாம்.

வித்தியாசம், வெயில் சென்னையில் ஈரப்பதத்துடன்; ஸ்ரீரங்கத்தில் உலர்ந்து. அதனால் சென்னையில் வியர்த்துக்கொட்டுவது உடலின்மேலேயே அதிகமாய் தங்கி கசகசவென்றிருக்கும். வீட்டினுள் புழுங்கும். வெளியே ‘ஸீ ப்ரீஸ்’ வாங்கினால் தேவலை என்றாகும். ஸ்ரீரங்கத்தில் உலர்ந்த ’அனல் காற்றில்’ வியர்வை ஆவியாகிவிடும். கசகசக்காது. ஆனால், வெளியே சென்றால் அரைமணியில் ஆயாசமாகிவிடும். ஆவியான வியர்வையுடன் நம் உடல் ஆற்றல் அல்லவா வெளியேறுகிறது. வீட்டினுள் புழுங்காமல் சற்று இதமாய் இருக்கும். உடலின்மேல் வியர்வை தென்படவில்லை என்பதால் அலட்சியமாகாமல், நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். மறந்தால் உச்சா எரியும்; மூக்கில் ரத்தம் கசியும்.

தண்ணீர் என்றதும் காவேரி, கொள்ளிடம் ஆறுகள். ‘பெரெனியல்’ என்று பாடத்தில் படிப்பதோடு சரி. வெள்ளையாய் காவேரி ஆற்றுப்படுகையில் பாலத்திற்கு அருகில் சீரியல் லைட் கட்டி சென்ற வருடம் துவங்கப்பட்ட பொதுமக்களுக்கான ‘பீச்’, செம ஹிட். ‘கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்’ என்று காவிரி மண்ணில் புதையப்புதைய நடக்கிறார்கள், இருள்கவியும்வரை. கொள்ளிடம் பாலத்திற்கு அருகில் இதேபோல் ‘மணல்வாரியம்மன் துணை’ என்று லாரிகள் பவனி.

கொள்ளிடத்தில் ‘வெய்யில் வீணாப்போறதேன்னு’ ஓரளவு சமதளமாயுள்ள இடத்தில் ’பிட்ச்சின்’ இருபுறமும் ஸ்டெம்ப் நட்டு கிரிக்கெட் ஆடுவோம். பந்தை லாங்-ஆஃபில் தூக்கி அடித்தால் திரும்பி நம்மிடமே வந்துவிழும். காற்று அப்படி. எதிர்ப்புறம் பௌலர் வீசிய பந்து, அடிக்க பாட்ஸ்மேனிடமே வராது.

வீட்டிலிருந்து துணிகளை பெருமுடிச்சேயில்லாத மூட்டையாய் கட்டி, கழுதைமேல் பொதியாய், வசந்த நகர் கடந்து, திருமங்கை மன்னன் படித்துறை தாண்டி கொள்ளிடத்தில் கரையோரத்தில் என்றும் சலசலக்கும் நீரில் துவைத்து வெள்ளாவி வைத்து வேட்டிகளை வெளீரிடும் வண்ணான்கள் வழக்கொழிந்துவிட்டனர். கொள்ளிடத்தைக் கடந்து உத்தமர் கோவிலில் வாஷிங்மிஷின் விற்கிறார்களாம். இளவேட்டிகளெல்லாம் வயதானப் பற்களென மஞ்சளாய் இளிக்கின்றன.

வீட்டில் ரிடையரான பெற்றோர்கள் செல்பேசியில் அலார்ம் வைத்துக்கொண்டு பங்சுவலாய் டி.வி.யில் ‘சிவம்’ பார்க்கிறார்கள். உதவியாளி ‘தளிப்பன்ற உள்ளையும்’ பெருக்குகிறாள். இரவில் வயதானவர்களால் ஏஸி இன்றித் தூங்கமுடிவதில்லை. கரெண்ட் இல்லாவிட்டாலும் பரவாயில்லையாம். வயதான உடல் லேசில் மாறாது. முயன்று மாற்றிவிட்டால், மீண்டும் அப்புதிய நிலையிலிருந்து லேசில் மாறாது. ஐந்தில் வளைந்தாலும், ஐம்பதில் வளைந்தாலும், சரியான மாற்றங்களையே முயலவேண்டும்.

ஓரிரவில் கொசுக்களுக்கு நாம் வந்தது தெரிந்துவிடுகிறது. என்னுடைய பி-பாஸிடிவ் வகை ரத்தத்தை மட்டுமே விரும்பிக் குடிக்கின்றன்றனவோ என்பது என் நெடுநாளைய சந்தேகம். நாக்கற்ற கொசுக்களுக்கும் உணவில் ஒரு தேர்வு இருக்கலாமல்லவா. என் மனைவியைக் கொசுக்கள் கடிப்பதில்லை.

வரும் இரவுகளில் மகள், மனைவி தூங்குவதற்கு, தூங்கமுடியாத நான் சாமரம் போடவேண்டியுள்ளது. எலக்ட்ரிக் கொசு பேட் வைத்துக்கொண்டு. கிரிக்கெட், டென்னிஸ் (இவன் ஃபோர்ஹேண்ட் அழகாய் இருக்கிறது என்பார் ஸ்ரீரங்கம் கிளப் கோச்), டேபிள் டென்னிஸில் (டேபிளுக்கு மேல்பக்கமாய் அடிப்பா) பால்யத்தில் ஆடாது விட்ட ஷாட்களையெல்லாம் பழகிக்கொள்கிறேன்.

ஆனால் கொசுக்கள் ஒன்றும் புதிதல்ல. சுதந்திரப் போராட்டத் தியாகியான என் தாத்தாவையும் கடித்திருக்கிறது. கொசுக்கடிக்கு பேர்போன ஆர்-ஈ.ஸி. கல்லூரி விடுதியிலிருந்து இரவு தங்குவதற்கு ஸ்ரீரங்கம் வீட்டிற்கு வந்திருந்த மெட்ராஸ் நண்பன் கொசுக்கடியின் வலிதாங்காமல், “டேய், இங்கயும் கொசு கடிக்குமா,” என்றதற்கு “இங்க மட்டும் இல்லடா, எங்கயும் கொசு கடிக்கத்தான் செய்யும்,” என்கிற என் பதிலில் விட்டதுதான் நட்பை.

முப்பத்தைந்து வருடங்கள் முன்னர் வீட்டைக் கட்டியபோது ஸ்ரீரங்கத்தில் மூன்றே காண்ட்டிராக்டர்கள். ரெங்காச்சாரி மாமா கூப்பிட்ட குரலுக்கு ஆள் அனுப்பி வீட்டில் கழன்ற ஜன்னல் கொக்கியை மாட்டுவதிலிருந்து, கிணற்றில் உள்புறம் குருவிப் பொந்துகளில் சிமெண்ட் பூசுவதுவரை அனைத்து சில்லறை வேலைகளையும் செய்துகொடுப்பார். பெரிய வேலைகளுக்கு மட்டும் ரேட் பேசி, காசு வாங்கிக்கொள்வார். இன்றும் மோட்டார் காயில் மாற்றுவது, பியூஸ் போடுவது, சந்துப்பக்கங்களை சுத்தம்செய்வது, பெயிண்ட், ஒட்டடை அடிப்பது, தேங்காய் பறிக்க, வாழைத்தார் களைய, வேப்பமரக்கிளை மின்கம்பியில் உரசாமல் கழிக்க, என்று வீட்டை ரிடையராகவிடாமல் இருத்த நான்கைந்து உதவியாளர்கள் தொடர்ச்சியாய் தேவையாயிருக்கிறது.

கவிஞர்களுக்கு அடுத்துச் சுயதொழிலாய் ஸ்ரீரங்கம் முழுவதும் அடுக்ககம் மட்டுமே கட்டத்தெரிந்த காண்டிராக்டர்கள் நிறைய இன்றுள்ளனர். கட்டிய வீட்டைக் காபந்து பண்ண மேற்படி சில்லறை வேலைகளுக்கு அவர்களிடம் ஆட்களில்லை.

முழங்கை மோதி குழாய் உடைந்துவிட, நிறுத்தமுடியாத குளியல். முப்பது வருடம் முன்னால் என்னுடன் மாங்காய் அடித்தவர்தான் இன்று மிஞ்சியுள்ள பிளம்பர். ‘பல்திறனாளி’. ஆனால் லேசில் வந்துவிடமாட்டார். ஏக டிமாண்ட். ஃபோனில் “இதோ பறிச்ச எலுமிச்சம்பழத்தோட வந்துட்டேன்” என்றார், தில்லானா மோ. வைத்தி கணக்காய். நானே உடைந்த குழாயை கழற்றி, திருகுகளில் நூல்சுற்றி, ஒரு லொடக் லொடக் பைப்ரென்ச் உதவியுடன் துருப்பிடித்த ஸ்டாப்பரைத் திருகி அடைத்துவிட்டேன். விரல் முட்டிகளில் சிராய்ப்புகளுடன் தொப்பலாய் வெளிவந்த என்னைப்பார்த்ததும், அப்பா, “இவனும் மெக்கானிக்கல் படிச்சதுக்கு உபயோமா ஒரு வேல செஞ்சுட்டாண்டி”. நான்கைந்து நாள் கழித்து அம்மா ஃபோனில் “இன்னும் எலுமிச்சம்பழம் வரலை” என்றிருந்தார்.

நாச்சிமுத்து துணிக்கடை இருபது வருடத்தில் இரண்டிலிருந்து மூன்றாகியிருக்கிறது. ரெடிமேட் சுடிதார்களும் விற்கிறார்கள். இன்றும் தீபாவளிக்கு அங்கு துணியெடுத்து, அளவுகொடுத்து டைட்டாய் சட்டை தைத்துக்கொள்ள ஆசைதான். ரோட்டில் தள்ளிக் கொண்டுவந்து வீட்டிலேயே அரைநாளில் தைத்துக்கொடுக்கும் டெய்லர்கள் இல்லை. அம்மாமண்டபம் கடை டெய்லருக்கு ரெண்டு நாளிற்குள் சுடிதார் தைப்பதுதான் ஞாபகம் இருக்கிறதாம். உடுத்தும் அளவு எனக்கு ஆண்ட்ராஜினஸ் அவசரமில்லை.

வெள்ளை வேட்டி, சுருட்டிவிடப்பட்ட வெள்ளைச் சட்டையில், தலையில் கூடையில் வைத்து எவர்சில்வர் பாத்திரம் விற்றவரும் ரிடையர் ஆகிவிட்டார். பையன் பொறியியல் படித்துவிட்டு எங்கோ சாஃப்ட்வேர் எழுதி விற்றுக்கொண்டிருக்கிறான்.

இளநீர் பறிப்பவரை செல்போனில் அழைத்தால் வருகிறார். களேபரமாய் கம்பங்களுக்கு சுற்றியுள்ள டி.வி. கேபிள் ஒயர்கள்மேல் மட்டையைப் போடுகிறார். ரிமோட் உதவியின்றி சேனல்கள் மாறுகின்றன. பார்ப்பவர்களுக்கு ஒன்றும் வித்தியாசப்படவில்லை.

பணியாளர்கள் என்றில்லை, சிறு தொழில் வேலை செய்த அநேகர் டோடோ பறவை போலாகிவிட்டனர். சிட்டுக்குருவிகளே தேவலாம். ஆங்காங்கே ஒன்றிரண்டு ஊஞ்சலுக்கு மேல் உத்திரத்தில் கூடுகட்ட மிஞ்சுகிறது.

வீட்டிற்கு அருகிலிருந்த சாராயக்கடையும் அடுக்ககமாகிவிட்டது. ‘பார்’கள் வீட்டு இலக்கங்களில் உறைந்துவிட்டன. என் சிறுவயதில் ஒருமுறை அப்பா இக்கடையினுள் சென்றுவருவதை பார்த்திருக்கிறேன். கோன் ஸ்பீக்கர் வால்யூமை குறைத்துவைக்கச்சொன்னார். செய்தார்கள். எதிர் சாரியில் மாடிவீடாகிவிட்டது மல்லிகைப்பூக் கொல்லை. அருகில் அதன் சொந்தக்காரரின் குடிசை, மொட்டைமாடிக் குடிலாகிவிட்டது. எங்கள் வீட்டிற்கு பாம்புகள் வருகை இன்றில்லை.

அடிக்கும் ரியல் எஸ்டேட் காற்றில், வீட்டைச் சுற்றி வீசக் காற்றில்லை. தோப்பே தோற்று உருமாறுதோற்றப் பிழையாகிவிட்டது. மிஞ்சியிருக்கும் தென்னை, நாற்றங்கால் முதலியவை, சாணக்கியர் சந்திரகுப்தருக்கு எதிரிநாட்டை வீழ்த்த வழங்கிய அறிவுரைக்கேற்ப, ஓரங்களில் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ’வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்’ தோற்றுவிக்க, இனி கட்டிடங்களையே ஆடும் வகையில் கட்டினால்தான் உண்டு.

ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் அதிகம் விலைபோகுமிடங்கள் சென்னை, கோவை, அடுத்து ஸ்ரீரங்கமாம். எங்கிருந்தோ பொற்கிழி ஈந்து ஸ்ரீரங்கத்தையே பார்த்திராத ஜனம், இங்கு ரிடையரான சந்ததியினரில் தங்களுக்கு வேண்டிய சிலரை வாஸ்த்துப்படி காவியடித்த அடுக்ககங்களில் இருத்திக்கொண்டே இருக்கிறது. நேற்று ரிடையர் ஆன என் அப்பாவையே ‘வாடாப்பா சௌக்கியமா’ என்று குசலுவார்கள் இதிலுறையும் சீமையில் சில்லறைபுரளும் சீமாச்சுக்களின் சீனியர்சிட்டிசன்கள். அடுக்கக வருணாஸ்ரம அழுத்தத்தில் ஊரே சில வருடங்களில் சந்நியாஸம் வாங்கிக்கொண்டுவிடும்.

என்னை அழைத்திருந்த ‘க்ருஹப்பிரவேசத்திற்கு’ வாலை என்னதான் அமுக்கித் திருகினாலும் மூன்றாவது மாடிக்குப் பசுமாடு படியேறச் சம்மதிக்கவில்லை என்பதால் லிஃப்ட்டுக்கருகில் அமெரிக்கா பூச்சுடன் அலங்காரமாய் இருக்கும் ‘மாட்டுப்பெண்ணிடம்’ மஞ்சநீர் தட்டில் தங்க முலாமிட்ட பசுமாடு விக்ரகம் வைத்துத் தடவிச் சிலிர்த்துக்கொண்டார்கள். இரண்டே நாள் விடுப்பில் இதற்கென்றே ராம்ராஜ் வேஷ்டியில் இறக்குமதியாகியிருக்கும் மகன், ஸ்மார்ட் ஃபோனில் தட்டி, ஃபேஸ்புக்கில் லைக்கிட முரசுகிறார். ஸ்ரீரங்கத்தில் அடுத்த அடுக்ககத்தை இண்டஸ்ட்ரியல் லிஃப்ட் வைத்துக் கட்டினால், பசுமாட்டை மாடிவீட்டு வாசல்வரை அழைத்துவருவது எளிமையாகும். சம்பிரதாயங்களை விட்டுக்கொடுக்கலாமா. சாணித் தொல்லைக்கு பெரிய சைஸ் டயப்பெர் அமெரிக்காவிலேயே கவனம் செய்யலாம்.

சுற்றிலும் தென்னை மரங்களுடன், சோலைக்குள் நான் ஸ்ரீரங்கத்தில் வாசிக்கத் துவங்கிய கூரைப் பள்ளிக்கூடம் இன்று அடுக்ககமானது போகட்டும். அதற்கு “ஜெயஸ்ரீ கார்டன்ஸ்” என்று பெயர்வைப்பது “மருமத்தினெறிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும்புழையிற் கனல் நுழைந்தாலெனும்” வகை முரண்நகை. உள்ளே ஒரு துளசி மாடம் கூட இல்லை. ஜெயஸ்ரீ என்று பெயருடைய தாவணிப் பெண்ணாவது உலாவரட்டும்.

பிரதானக் கூடத்தின் கூரையில், எடுத்துக்கட்டி எனப்படும், நான்கு சுவர்களிலும் பெரிய சாளரங்களுடனான சதுரமான சிறு கோபுர வடிவம் கொண்ட வீடுகள் ஸ்ரீரங்கம் பிரதான சித்திரை, உத்திரை வீதிகளில் இயல்பு. எடுத்துக்கட்டி வழியே பக்கவாட்டில் சூரிய ஒளி வீட்டினுள் மிதமாய் விழுந்து ஒளியூட்டும். வாசல் ஒரு வீதியிலும், கொல்லை பின் வீதியிலும் முடியும் இவ்வகை வீடுகள் இயற்கையான காற்றுப்போக்கும் குளிர்ந்த நிலையிலும் இருப்பவை. வசித்துப்பார்த்தவர்களுக்குத் தெரியும் அருமை. கதவுகளைத் திறந்து வைத்தால் போதும். வீட்டின் ஊடே ‘வென்ச்சுரி விளைவினால்’ காற்று அடித்துக்கொண்டே இருக்கும். ஸ்ரீரங்கம் ‘ராய’கோபுரத்தின் ஊடேயும் இதே விளைவினால்தான் காற்று பிய்த்துக்கொள்கிறது. சூடான காற்று மேல்நோக்கி எழுந்து, தன்னிச்சையாய் எடுத்துக்கட்டி வழியாய் வெளியேறியபடி இருக்கும். ‘பெட்ரூம்-கிளாஸ்’ என்றறியப்பட்ட எண்ணை-விளக்கின் மேல் பொருத்தியிருக்கும் கண்ணாடியின் கூம்பு வடிவும் இதற்கே (லியனார்டோ டா வின்சி பதினைந்தாம் நூற்றாண்டில் கண்டுபிடித்தது.)

எடுத்துக்கட்டிக்கு எதிர் டிசைனாய், ஆனால் அதே உபயோகமுள்ள வகையில், கூடத்திற்கு அருகில் ‘முற்றம்’ வைத்துக் கட்டியிருப்பார்கள். கவனித்தால் தெரியும், முற்றம் உள்ளிருந்து வெளியே வானத்திற்கு அகலமாகும் வகையில் ஓட்டுக்கூரை வேய்ந்திருப்பார்கள். ராக்கெட் நாஸில்-ஐ கவிழ்த்துப் பொறுத்தியதுபோல. இவ்வகை வீடுகளில் முற்றத்தில் வானிலிருந்து காற்று உள்ளே இழுக்கப்படும் (‘மித்தத்தில உக்காரு; காத்து பிச்சிக்கும்’.) கதவுகள் திறந்திருக்கும் வாசல்-கொல்லை காற்று வழியில் கலந்து வெளியேறும். மின்சாரமற்ற காலந்தொட்டே மனிதன் கற்ற வசிப்பிடக்கலை. குடவாசலில் என் தாத்தா வீடு இவ்வகையில் இன்றும் இருக்கிறது, வேறு யாரிடமோ.

அடுக்ககக் கலாச்சாரத்தில், ஸ்ரீரங்கத்திலும் தங்கள் வீட்டை இடித்து, கோபுரமாய் நெடுக்குத் தெருவாய் கட்டிக்கொள்கிறார்கள், முடியாதவர்கள், நீட்டமான வீட்டை குறுக்காய் பல இடங்களில் தடுத்து, பக்கவாட்டில் பல வாசல்களை வைத்து அடுக்ககங்களை படுக்கவைத்துள்ளனர். எடுத்துக்கட்டியெல்லாம் அப்பீட். இயற்கையான கோடைக் குளிர்ச்சிகள் ஹோகயா. அடுக்ககக் கதவைத் திறந்தால் எதிர் வீட்டுக் கொல்லைச் சுவர்தான் தெரிகிறது. மெகாசீரியல் ஓலங்கள்தான் உள்ளே வருகின்றன.

சூட்டைக் குறைக்க காற்றின் விசையை அதிகரிக்கவேண்டும் என்பதைக் கடந்து சூடான மூளையில் யோசிக்க முடியாமல், மின்விசிறியை 3, 4, 5, 6… என்று ரெகுலேட்டரை திருகிப் பேய்த்தனமாய் சுழலவிடுகிறோம். சூடான காற்று சுழன்று கவிகிறது. இயல்பான அளவினின்றும் அதிகப்படியாக உடலில் இருந்து ஆற்றல் வெளியேற வகைசெய்துகொள்கிறோம். சுருக்க ஓய்ச்சலாகிவிடுகிறோம்.

(இப்படி யோசித்துப்பாருங்கள்: அறை முழுவதும் சூடான காற்றுதான் என்கையில், அதையேச் சுழலவிடுவதால் மட்டும் அதை எப்படிக் குளிரவைக்க முடியும்? நம் உடல் வெப்பத்தைவிடச் சூடான காற்று நம் புறத்தில் ’வேகமாய்ச்’ சுற்றுவதால், எவ்வாறு நம் உடல் சூட்டை குறைக்கமுடியும்?)

‘செய்யாதெனச் செய்தோம்’ என்பதற்கேற்ப மின்விசிறிக் காற்று குறைக்காத வெய்யில் சூட்டில் இருந்து தப்பிக்க அநேக வீடுகளில் ஏஸி வைத்துக்கொண்டு பிரபந்தம் வாசிக்கிறார்கள். வீட்டிற்கு வெளியே ஸ்ரீரங்கம் மேலும் கொதிப்படைகிறது.

ஒருகாலத்தில் திண்ணைக்கு நான்கைந்து என்று சும்மா கிடந்த நீர் தெளித்த பனையோலை விசிறிகளை ஆடாமல் பிடித்துக்கொண்டு அவைமுன் காற்று வர நம் தலையை குறுக்காய் ஆட்டிக்கொள்கிறோம். வேண்டாம் என்று.

கோவில் பிரதான கோபுரத்தின்மேல் நியான் ஒளியில் மினுக்கும் ரெங்கா ரெங்கா ரெங்கா-வில் துவங்கி, ஸ்ரீரங்கத்தில் அநேகமாய் அனைத்து வர்த்தகங்களும் ரெங்கன் பெயரை முன்வைத்தே தொடங்கப்படும். ரெங்கா வாடகை மிதிவண்டி நிலையம், ரெங்கா பீடா ஸ்டால், ரெங்கா பேல் பூரி கடை, ரெங்கா அயர்ன் வண்டி, இப்படிப் போய், ரெங்கா விறகுமண்டி, ரெங்கா டைப்ரைட்டிங் இன்ஸ்ட்யூட் என்று ஏற்பட்டவை காலத்திற்கு ஏற்ப ரெங்கா கேஸ் சர்வீஸ், ரெங்கா இண்டெர்நெட் கஃபே, ரெங்கா ரியல் எஸ்டேட் என்று உருமாறியுள்ளது. லேட்டஸ்ட், ரெங்கா இன்வர்ட்டர் கடை. உத்திரை வீதி வீட்டிலேயே ஒரு பகுதியில் செய்து விற்கத்தொடங்கியுள்ளார்கள். இதுவரை கண்களில் படாதது ரெங்கா மதுபானக்கடை.

அப்போலோ மருந்தகம் ஈ ஓட்டுகிறது. வாஸன் மெடிக்கலில் ஏக வியாபாரம். பலர் கூடி அணிவரிசையாய் மிச்சமிருக்கும் ஸ்ரீரங்கவாசிகளுக்கெல்லாம் மருந்து விற்கின்றனர். மக்கள் நோயுற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்.

கையெழுத்து மறையும் நேரம், கையகலக் கரண்டி நங் நங் ஓசையுடன் புரட்டும் இலுப்பைச்சட்டியில், மணலில் வறுத்த வேர்க்கடலை. எரிவாயுவை சூடுபடுத்துவதற்கான ‘புதிய வழிமுறை’ என்று, ‘போரஸ் பெபிள் பெட் ஹீட்டர்’ செய்வதற்கான ஒரு ஆராய்ச்சிப் பணியை சிலவருடங்கள் முன்னர் இந்திய அரசு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றிற்காக மேற்கொண்டிருக்கிறேன். நம் சமயற்கலையில் உள்ள பாரம்பர்ய தொழில்நுட்பங்களை பிரித்தாய்ந்தால் மேற்படி ‘பெபிள் பெட் ஹீட்டர்’ போன்ற புதிய தொழில்நுட்பங்களின் ஒரு வடிவத்தின் ரிஷிமூலம் உள்ளுரிலேயே கிடைக்கலாம். உட்ஸ் எஃக்கின் தரத்தையும் குப்தர் காலத்து ஸ்மெல்டிங் முறையையும் (இன்று குதுப் வளாகத்தில்) டில்லியில் இருக்கும் தூணில் கண்டு அதிசயித்து மட்டும் இருக்கவேண்டியதில்லை.

ஐந்து ரூபாய்க்குச் சுருட்டிக்கொடுத்த அளவு, நறநறக்கும் மணல் துகள்களுடன் சேர்ந்த ருசியில், சற்று குறைவானதென்றே பட்டது. காலம் கடலை அளவை மட்டுமா குறைக்கிறது. செய்தித்தாள்களின் தாக்கத்தையும்தான். கடலை சுருட்டிய பேப்பரை விரித்ததும், ‘ஸ்ரீரங்கம் ஜீயர் உடல் நலக்குறைவு’ என்றது. அன்றைய செய்தித்தாளில் மடித்துக்கொடுத்திருக்கிறார்.

இரண்டு நாள் கழித்து வாங்கியிருந்தால் கடலை மடித்த பேப்பர் “45ஆவது பட்டத்து ஜீயர் முக்தியடைந்தார்” என்றிருக்கும்.

ஸ்ரீரங்கத்தை விட்டு, மெயின்கார்டுகேட், உறையூர் நாச்சியார்கோவில், சங்கம் ஹோட்டல் சோமா பார் என்று ஒரு நாள் கழித்தேன்.

டி.எஸ்.டி. பஸ்ஸில் ஸ்ரீரங்கத்திலிருந்து மெயின்கார்டுகேட்டிற்கு செல்ல டிக்கெட் இருபத்தியைந்து வருடங்களில் ஐம்பது பைசாவில் இருந்து நான்கு ரூபாயாகியிருக்கிறது. மற்றபடி கட்டைவிரல் நகத்தினால் அமுக்கிக் கிழிக்கப்படும் அதே நிறங்களிலான டிக்கெட். உய்ங் உய்ங் ஹாரன். ஸ்டாப்பிங்கில் ஆள்பிடிக்க நியூட்ரலில் உருட்டுவது. நடுவில் எங்கு யார் கையாட்டினாலும் அவர்கள் வயதிற்குத் தகுந்தாற்போல் பிரேக்கடித்து வேகத்தைக் குறைப்பது (‘மூவிங்கில்’ தொற்றிக்கொள்ளவேண்டும்). காவேரி பாலத்தின்மேல் ஜிட்டாய் பறப்பது. சத்திரம் பஸ் ஸ்டாண்டில் உக்கிரமாய் கிளம்பி, முன்னால் நிற்கும் போட்டி கம்பெனி பஸ்ஸை ஓவர்டேக் செய்து, அவன் அலறிக்கொண்டு கிளப்பியதும் மீண்டும் நிறுத்தி பிரயாணிகளைச் சேர்ப்பது. விரல்களிடையே ‘வர்ணக்’கிரமமாய் டிக்கெட்டுகள். விரல்களில் மெட்டல் மோதிரங்கள். பக்கவாட்டுத் தகரங்களிலும், பஸ்ஸினுள்ளே குழாய்களிலும் தடதடக்கும் நடத்துனரின் மெட்டல் மோதிரங்கள் (இறங்கரச்ச எதுக்குமா படிக்கட்டுல தூங்கறீங்க). இவைகள் மாறவில்லை.

காத்தோடு பூவுரச, தோளோடு தோளுரச, களையான சுடிதார் பெண்ணுடன் அமர்ந்திருப்பதும், அவளிடம் அடிக்கடி இங்கிலீஷில் வழிவதும், பஸ் இரைச்சலில் பேசுவது கேட்கவேண்டிய சாக்கில் காதை முகர்வதும், இன்றும் நான் ஏறும் பஸ்களில் அராஜகமான செயல்தான். நின்றிருந்த பல அத்தைமார்களின் பார்வைகள் ஆடும் ஆள்காட்டிவிரல்களாய் பயமுறுத்தியது. பக்கவாட்டில் சரிபார்த்துக்கொண்டேன். என் மனைவிதான் அமர்ந்திருந்தாள்.

டௌனில் தெப்பக்குளம், சின்னக்கடை பெரியக்கடை வீதிகள் என் நினைவுகளிலிருப்பதுபோலவே இன்றும் மக்கள் பிதுங்கி வழிகின்றன. முகப்பில் ‘பர்மா பஜார்’ நான் பார்த்து வளர்ந்த பையன். இன்று என்னை நெருங்கவிடாமல் வேற்றுமுகமாய்ப் பார்க்கிறான். “பாலூட்டி வளர்த்த கிளி” என்று பாடல் ஒலித்த ஸ்ரீரங்கம் தேவி “மூட்டைப்பூச்சி” டாக்கீஸ் இன்று பஸ் ஸ்டாப்பில் மட்டுமே இருக்கிறது. கோடவுனாய், கல்யாணமண்டபமாய், முன்புறம் பழக்கடையாய் அவதாரங்களை மாற்றிக்கொண்டிருக்கிறது. தியேட்டர்களுக்குப் பெயர்போன திருச்சியில், ஐந்து தியேட்டர்களை உள்ளடக்கி டீடிஎஸ்ஸில் முழங்கிய மாரீஸ் காம்ப்ளக்ஸே இன்று வெளிறிய கலரில், வெறிச்சோடி, வெங்கனவாய். திரையுலகம் போலவே.

சாரதாஸ்-தான் ஜவுளி வியாபாரத்தில் “தாஸ் தாஸ், சின்னப்பதாஸ் தாஸ்” (வில்லனைப் ‘போற்றும்’ இந்தப் பாட்டே இன்றைய பரணில்). கீதாஸ் கடை அம்பேல். ஆனந்தாஸ் ஏதோ இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய். வழக்கம் போல இக்கடைகளினுள் செல்லவில்லை. வெளியே சைக்கிளில் ‘ப்ளம்ஸ்’ பழங்களை ‘ப்ளம்ஸ்ல காய்னே கிடையாது-ம்மா, எல்லாம் பழந்தான்’ என்று விற்றுக்கொண்டிருந்தவர், எனக்கு விற்க மறுத்துவிட்டார் (நானே பொறுக்கிக்கொள்கிறேன் என்றதால்).

சின்னக்கடை வீதியையும், என்.எஸ்.போஸ் ரோட்டுக் கடைகளையும் இணைக்கும் குறுக்குச்சந்துகள், கடைகள் என்று பலதும் மாறவில்லை. ஒருசமயம் ஆருயிர் நண்பன் வசித்த வீட்டின் சந்தையே காணோம். அடைத்து புதிதாய் கட்டிடம். பள்ளிவாசல் எதிரே பறவைகள் சரணாலயமான ஆலவிருட்சம் இன்றும் உள்ளது. இளையராஜாவே இங்கு வந்துதான் பறவையொலிகளை ரெக்கார்ட் செய்துகொண்டு போனதாய் என் வயதொத்த இப்பிரதேச இளைஞர்களின் ஐதீகம். உடான்ஸ்.

மலைவாசல் எதிரே கடைத்தெருவில் விளிம்பில் புத்தக பைண்டிங் கடை இன்னமும் இருக்கிறது. நரைத்துவிட்ட கடைக்காரருக்கு என்னை ஞாபகமில்லை. தாண்டி, பழைய புத்தகக் கடையில் ஞாபகம் வைத்திருந்தார். முப்பது வருடம் முன்னால் நான் பழையதாய் போட்ட ‘ஐ-சிங்’ புத்தகம் நொறுங்கலாய் இன்றும் கிடைத்தது. பி.ஜி.வுட்ஹவுஸிலிருந்து டாம் ஷார்ப், ஜேம்ஸ் மிச்னர், வில்லியம் ஷைய்ரர் என்று நான் விசாரித்த ஒரு முப்பது பெயர்களாவது பழையபுத்தகக்கடையிலும் போணியாகாத மூதாதைய எழுத்தாளர்களாகிவிட்டனர். ஸையன்ஸ் பிக்‌ஷனை ஒருவரும் வாங்குவதில்லையாம். அன்று காட்டிய அதே ஜே.ஜீ.பல்லார்ட்டை இன்றும் காட்டினார். ஜோ நெஸ்போ, ஹார்லன் கோபன், மாத்யூ ரெய்லீ போன்றவர்களின் புனைவுகள் புரளுகிறதாம். அர்த்னால்தர் இந்த்ரிதாஸோன், நீல் ஸ்டீவென்ஸன், கிரிஸ்டஃபர் மூர் என்று சற்று மாற்றினாலும் இருகைகளையும் உயர்த்திவிடுகிறார். தமிழில் நீலபத்மநாபன், அசோகமித்திரன், ராஜநாராயணன், ஜெயமோகன் போன்றோருக்கு தனி வாசகர் வட்டம் உள்ளது என்றது ஆறுதலாய் இருந்தது. அதனால் வட்டம் எவ்வளவு பெரியது என்று கேட்கவில்லை.

நான் பொறுக்கிய ஐம்பது பழையபுத்தகங்களுக்கு நான் அனுமானித்ததைவிட இரண்டரை மடங்கு விலை எழுதிக்கொண்டிருந்ததால் கடுப்பாகி எதையும் வாங்காமல் எஸ்கேப். உடன்வந்து கால்கடுக்க காத்திருந்து வெயிலில் கருத்திருந்த மனைவி, கோபத்தில் மீண்டும் சிவந்துவிட்டாள் (இவ்ளோ நாழி தேடிப் பொறுக்கின எதயுமே வாங்கப்போர்தில்லையா; லூஸ்ரா நீ). கடைக்காரர், நான், இருவருமே மனதினில் சொல்லிக்கொண்டோம்: பழையன களை.

‘மைக்கல்ஸ்’ ஐஸ்க்ரீம் கடையில் ஒரு ரூபாயிலிருந்த வெனில்லா, எட்டுரூபாய்கள். ஃபுருட் சாலட் இரண்டிலிருந்து ஒன்பதாய். அதே சிறு அளவு. அதே அதிருசி. விலைப்பட்டியலில் அறிவித்திருக்கும் கிரேப் ஸிரப் இருபது வருடம் முன்பு போலவே இன்றும் கிடைக்கவில்லை. ஐஸ்க்ரீமின் சிறு அளவு, ருசியிலும், உண்பவர் நாக்கிலும் நம்பிக்கை வைக்கும் வியாபாரத் தந்திரம். நிச்சயம் ஒன்றில் நிறுத்தமாட்டீர்கள். மூன்று நான்கு சாதாரணம். நடுத்தர நுகர்வோருக்கான குளிர்ச்சியை முன்வைத்த வியாபார வெற்றி. யோசித்துப்பார்த்தால், முன்னரே ஒரு ரூபாய்க்கு விற்றிருக்கக்கூடாதோ என்று படுகிறது.

‘ஸீ-கிங்ஸ்’ ஐஸ்க்ரீம் கடைக்காரர் ஞாபகம் வைத்திருக்கிறார். நட்-கார்னர், டியூட்டி-ஃப்ருட்டி, ஃபலூடா, டபுள்-டெக்கர் என்று பழைய ஐஸ்க்ரீம் பெயர்கள். புது விலை. அதே சுவை. கடை மாடியிலும் ஒரு தளம் முழுவதும் விரிந்திருப்பது சமீபத்தில்தானாம். முழுவதும் ஏஸி என்றாலும், மாடிக்கடையை மக்களுக்குமுன் ஈக்கள் கண்டுபிடித்துவிட்டன. பக்கத்து ‘வெஸ்ட்டர்ன் மியூஸிக்’ காஸெட் கடை நான் திருச்சியைவிட்டு அகன்றதுமே திவாலாகிவிட்டதாம். இன்ஸ்பெக்டர் க்ளூஸோ ஃபிரான்ஸை விட்டு அகன்றதும் பிங்க் பாந்த்தர் வைரம் திருடு போய் விடுவதைப்போல.

சோஃபீஸ் போன்று கேர்ள்-ப்ரெண்ட்ஸ் பிங்க் கலர் கவருடன் “கெட்-வெல்-ஸூன்” என்றோ “மிஸ் யூ – தாங்க்ஸ்” என்றோ எழுதி நமக்கு ஆர்ச்சி கார்டுகள் வாங்கிய தலங்கள் இன்றும் தழைக்கிறது. வாங்கும் யுவன் யுவதிகள் மாறிவிட்டார்கள் (நல்லவேளை).

நேற்று கிடைக்காத மாப்பிள்ளை விநாயகர் கோலிசோடாவுக்கு இன்று விளக்கம் கிடைத்தது. உச்சிப்பிள்ளையார் கோவில் (அல்லது மலைக்கோட்டை) தாண்டி புகழையாபிள்ளை தெரு சர்பத்கடையில். கோலி சோடாவின் பாட்டில் பிரத்தியேகமானது. கோலி இருக்கும் பகுதி புறநாநூற்றுப் பெண்கள் இடைபோல குறுக்கு சிறுத்து பின் தெற்கில் பெருத்திருக்கும். இவ்வகைப் பாட்டில்களைச் செய்வது சிரமம் என்பதால் விலை அதிகம். கடைகளில் வைத்திருப்பதற்கே கிரயமாய் பாட்டிலுக்கு முப்பத்தியிரண்டு ரூபாய் டெபாஸிட் கேட்கிறார்களாம். உள்ளிருக்கும் சோடா ஐந்து ரூபாய்தான். சிறு கடைகளில் ஸ்டாக் எடுப்பது குறைந்துவிட்டது.

நேற்று பன்னீர் சோடாவில் சமாதானமடைந்திருந்தோம்.

இன்று நரி முகத்தில் விழிப்பு (எழுந்ததும் இல்லாளும் இவனும் ஒருவரையொருவர் நோக்கியதனால்). ரப்பர் பையில் வைத்துக் கட்டையால் அடித்த ஐஸ் நொறுக்கல்களுடன், நன்னாரி சர்பத். கடைக்காரர் நன்னாரியை (சரஸபரில்லா) ஐம்பது மில்லி அலுமினியக்குவளையில் அளந்து கொட்டினார்.

கடைப் பெண்மணியின் குரல்: உள்ள உக்காந்து சாப்பிடுங்க.

இந்த வெயிலுக்கு இப்படி உக்காந்து இவ்ளோ நன்னாயிருக்கிற சர்பத்த சாப்ட்டேன்னா, அப்பறம் அப்டியே கால நீட்டி இங்கயே படுக்கவேண்டிதுதான்.

கடைப் பெண்மணி: ஏன், படுத்துட்டுதான் போங்களேன்.

கடை ஸ்டூலில் அமர்ந்து ருசித்துக்கொண்டிருக்கையில் விலைப் பட்டியல் நெருடியது. பெரிய இளநீர் முப்பது ரூபாய். முன்னூறு மில்லி கோக் விலைக்கே கிடைக்கிறது. ஒரு லிட்டர் கோக் பாட்டில் தொன்னூறு ரூபாய்தான். நாஞ்சில் நாடன் “சூடிய பூ சூடற்க” விலைக்கே கிடைக்கிறது.

நன்னாரி சர்பத் வயதானவருக்குத் தயாரானது. இடையே சைக்கிள் மத்யமர், சித்தாள் பெண் இருவரும் பாதாம் பால் வாங்கிக் குடித்தனர். கடைக்காரர் நன்னாரிக்கு அடுத்து வீட்டில் தயாரித்த ஆரஞ்சு மற்றும் ரோஸ்மில்க்கை எங்களுக்குக் கொடுக்கையில், சந்தனப்பொட்டிட்ட சிறுவன் டின்னில் அடைத்த ஃபாண்ட்டாவை இருபத்தியைந்து ரூபாய்க்கு அதட்டிக்கேட்டு வாங்கி கால்சிராயில் திணித்துக்கொண்டு விலகினான்.

கடைப் பெண்மணி: இப்படி வழிய வழிய கொடுத்தீங்கனா அவங்க எப்படி குடிப்பாங்க?

கடைக்காரர்: நிறஞ்சு சாப்படனும்மா.

முப்பது ரூபாய்க்கு மிச்சமாய் கொடுத்த ஒரு ரூபாயை மறுக்காமல் வாங்கிக்கொண்டேன்.

அவ்வாறு செய்வதுதான் நான் விரும்பும் உலகில் உறைந்திருக்கும் அவ்வியாபாரத்திற்கு கௌரவம் என்று பட்டது.

இடையில் இரண்டு நாள்கள் கும்பகோணம் விஸிட். டொயோட்டா கார் பயணம், சோழர்கால கோவில்கள், தற்காலக் கல்யாணம், அதன் சினிமா நாகஸ்வரம், தாராசுரம் கோவில், பட்டு என்று இதன் குறிப்புகள் தனியே.

மீண்டும் ஸ்ரீரங்கம். பழைய நண்பருடன் தினமும் மாலையில் வீதி உலா. சித்திரை உத்திரை வீதிகள் சுற்றி, நிச்சயமாய் ‘வாத்தியார்’ (என்று அறியப்படும் எழுத்தாளர் ‘சுஜாதா’ ரங்கராஜன்) வசித்த வீடுவரை சென்று தலா ஒரு பெருமூச்சு, ஒரு மானசீக சல்யூட், இரு ‘மேல்’மூச்சுக்களுடன் (இரண்டு ஆண்களல்லவா) ஜுட். சில வருடங்களுக்கு முன்பிருந்ததைவிட இன்றைக்குப் புதுப்பெயிண்ட் அடித்து ‘வாத்தியார்’ வீடு பொலிவுடன் உள்ளது. நண்பர் ‘வாத்தியார்’ எழுதிய அனைத்தையும் உடனுக்குடன் வாசித்தே வளர்ந்தவர். அவர் எழுத்தில் அமிழ்ந்த ஆழ்வார். நான் வெறும் ஆழ்வார்க்கடியான். ‘வாத்தியார்’ எழுத்தைத் தொகுப்புகளாய் சாய்ஸில் விட்டு வாசித்தவன். ஒருமுறைகூட அவரை நேரில் சந்தித்ததில்லை.

இன்றளவும் தொடரும் நண்பரின் சிகரெட் பழக்கம் ‘வாத்தியாரின்’ நினைவுகள் மங்காமல் இருக்கவாம். சிகரெட் பற்றவைக்க பெட்டிக்கடைகளில் ஒல்லியாய் வெட்டிய சிகரெட் பாக்கெட் துண்டுகளும், சிகரெட்டை விட அதிகமாய் புகைவிடும் திரி விளக்கும் இருக்கும். இல்லையேல் கனன்றுகொண்டிருக்கும் தாம்புக்கயிறு தொங்கும். ‘ரங்கு கடைக்கு’ (மூடியிருந்தது) அருகில் பெட்டிக்கடையில் நண்பருக்கு சிகரெட் பற்றவைக்க கடைக்காரர் எவர்சில்வர் லைட்டரை நீட்டி அவரே பற்றவைத்தது புதுசு. “வத்திப்பெட்டி கொடுத்தால் திரும்பிவர்ரதில்ல சார்.” (அதான் லைட்டர கொடுக்கலையா).

சிகரெட் பற்றிய நெடுநாளைய சந்தேகம் ஒன்றெனக்குண்டு. உள்ளிழுத்த புகையை உடனே உடலின் வடக்குப்பகுதி துவாரங்கள் வழியே வழியவிடுவதுதான் ‘புகைபிடிப்பது’ எனும் செயலென்றால், பற்றவைத்து சிகரெட்டை விரலிடுக்கில் பிடித்திருந்தாலே போதுமே. புகை ‘வெளியில்’தானே செல்லும். கோவிலில் விளக்கேற்றுவதுபோல், ‘உடம்பு நல்லாருக்கனும்’ என்று ‘வேண்டிக்கொண்டு’, பெட்டிக்கடை திட்டுகளில் சாயங்காலவேளையில் நம் சார்பில் சிகரெட்டை ஏற்றிவைத்துவிட்டு வந்துவிடலாம்.

அம்மா மண்டபம் காவிரிப் படித்துறையிலிருந்து பார்த்தால், சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இன்று ராஜகோபுரம் ஆகிவிட்ட “மொட்டை கோபுரம்” தெரியும் (புகைப்படத்தைப் பார்த்து ’சுஜாதா’ தேசிகன் ஒரு கோட்டோவியம் வரைந்துள்ளார், ‘ஸ்ரீரங்கத்து தேவதைகளு’க்காக). கோபுரம் அருகே, அதைப்பார்த்துச் சிரிக்கும் காந்தியடிகளின் உலோக ’பஸ்ட்’. அவர் முதுகுப்புறம் இன்றும் பன்னீர் மற்றும் கோலி சோடா கிடைக்கும் ‘செல்வா கடை’யைக் கடந்து, நீல-வெள்ளை முகப்புடனான போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகிலிருக்கும் ராமானுஜர் மண்டபம். ஒரு காலத்தில் ராமானுஜர், காந்தி இருவரும் அகண்ட இச்சாலையின் நடுவில் இருந்தனர். என் பிறப்பை அறிந்தகாலந்தொட்டு ராமானுஜர் ரோட்டின் வலது ஓரமாக கம்பிகளுக்குள் ஒதுங்கிவிட்டார். சாலையின் ஒரு பகுதியே இன்று வளர்ச்சி ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டது.

கிழக்கு வடக்குச் சித்திரை வீதி சந்திப்பில் நிலையான மேடைகட்டி தினமும் ஏதாவது சத்சங்க விஷயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முதல் நாள் விசாகா ஹரி “கண்ணபிரான் என்ன ஷொல்றார், அவர் நம்மாத்து குழந்தயோனொ..” என்றிருந்தவர் திடீரென்று பாடத்துவங்கினார். அவசரமாய் கடந்தாலும் தாயார் சன்னதி கோபுரம் வருமுன் ஆரபிதான் என்று கண்டுபிடித்துவிட்டேன். ‘போய் சொல்லிட்டு வந்துரட்டா, சந்தோஷப்படுவா’ என்றதற்கு மனைவி கிள்ளினாள்.

மறுதினம் அதேயிடத்தில் “குழந்தைகளெல்லாம் மேக்கப் போட்டுண்டு, மாறுவேஷம் பன்ற நிகழ்ச்சி; அனைவரும் வருமாறும், குழந்தைகளின் ஒப்பனை நிகழ்ச்சிய வந்து பார்குமாறும் கேட்டுக்கறேன்,” என்றார் மைக்கில் மாமா. அதற்கடுத்த நாள் உலாவில், வரவீணாவில் துவங்கி, நின்னுக்கோரி வர்ணம், பஜனைப் பாடல்கள் என்று தெருவில் நடப்போரையெல்லாம் கூப்பிட்டு உட்காரவைத்து, மையத்தில் எம்.டி.ஆர். குரலில் ஒருவரும், குழுவாய் மற்றவரும் சர்வலகுவில் பஜனைக்கொட்டு மிருதங்கத்துடன் பாடிக்கொண்டிருந்தனர். வாசல்களில் மாமா மாமிக்கள் உல்லாசம்.

தெற்கு கிழக்கு சித்திரை வீதிகள் சந்திக்கும் விலாஸமான ஓரத்தில், சுற்றிலும் பவர்-கட் இருந்தும், மூன்று இரவுகள் ஆர்க்-விளக்கின் ஒளியில் தயாரானது மேடை. ஆவி வந்த இடமாம். பெட்ரமாக்ஸ் விளக்கில் சாயங்கால கறிகாய் மார்கெட், ‘பார்க்’கிட்டிருந்த சைக்கிள்கள் என்று கலைத்துப்போட்டு, தெற்கு சித்திரை வீதியின் ஒரு பாதி முழுவது, உட்புறம் கரை வேட்டியணிந்த, கூரை வேயப்பட்டது. ஆபீஸ் செல்பவர்கள், பாதசாரிகள், வேறுவழியாக வீட்டை அடையப் பழகிவிட, கடைசி நேரத்தில் முதலமைச்சர் விஸிட்டை ரத்துசெய்துவிட்டார். வட்டச் செயலாளர் சிலர் பிழைப்பை கவனிக்க பழையபடி ஆட்டோ ஓட்டச்சென்றுவிட்டனர்.

மேடைக்குப் பின்புறம், வெளி-ஆண்டாள் சன்னதி இருக்கும் மேற்கு அடையவளைந்தானில், வந்திருக்கவேண்டிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த, ரோட்டின் ஓரங்களில் கட்டைகட்டுவதெற்கென ஓரிரவில் கம்பங்கள் நடப்பட்டன. பலனாய் வாகனங்களில் எதிரெதிர் ஓரங்களில் சென்றுகொண்டிருந்தவர்கள், கட்டாயமாக ரோட்டின் நடுவில் சந்தித்துப் பேசிக்கொண்டு விருட்டுகிறார்கள். “ஹிஸ்ட்ரி ஆஃப் தி வேர்ல்ட் – பார்ட் ஒன்” மெல் ப்ரூக்ஸ் படத்தில், “N V T S, NUTS” என்று நூற்றாண்டுகளுக்கு முன்னர், பழைய ரோமாபுரியில், ரோட்டில், சாதாரணன் அலுத்துக்கொள்வான்.

இளவயது ’வாத்தியார்’ (கணையாழியில் கொடுத்த) தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் புதுமைப்பித்தன் கிடையாது என்றது போல், ஸ்ரீரங்கம் பற்றி எழுதிவிட்டு, கோவிலைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையென்றால், இக்கட்டுரையின் அதிர்ச்சி மதிப்பு கூடிவிடும். சிறுவயதில் தாத்தாவை கைப்பிடித்து அழைத்துச்சென்றதோடு சரி, அரங்கனை இன்றும் தரிசிக்க முயல்வதில்லை. வழியில் பக்தகேடிகளைச் சந்திக்கையில் தரிசனம் தெறித்து மனத்தில் தரித்திரமே தங்குகிறது. பட்டாச்சாரியார்கள் சிலர் இன்றும் கையில் காந்திப் படம் போட்டு எதைவைத்திருந்தாலும் உரிமையாய் பிடுங்கிக்கொள்கிறார்கள். அடுத்தமுறை ‘இன்றைய காந்தி’ எடுத்துச்செல்லவேண்டும்.

உத்திரை வீதிகளில் ரோட்டோரங்களையெல்லாம் வீட்டின் வாசற்படிகள்வரை சிமெண்ட்டில் பூசிவிட்டார்கள். கார்கள் நிறுத்த சாலையை அகலமாக்கவாம். முன்னர் மழை பெய்கையில் ரோட்டோர மண் உறிந்துகொண்டு, வீட்டுவாசலில் மாலையில் பொழுதைகழிப்பவர்களுக்கு குளுமையாகவும் வைத்திருந்தது. ஓரளவு வெற்றிகரமாக வீட்டில் மழைநீர் சேமிப்புத்திட்டத்தை அமலாக்கியவர் தன் தொகுதியில் மணல்மேல் சிமெண்ட் கொட்டுவதற்கு மாற்றாய் அட்லீஸ்ட் துளையுள்ள பேவ்மெண்ட் பொருட்கள் உபயோகிப்பதனை பரிசீலிக்கச் சொல்லலாம்.

முப்பது வருடம் முன்னர் அம்மாமண்டபம் ரோட்டில் ஓரிரவில் சாரியாய் ஜன்னல்களில் கறுப்பு நீலத் துணிகள் தொங்கும் பஸ்கள் நிறுத்தி, சாரிசாரியாய் சீசனுக்கு வந்துபோகும் ஐயப்ப பக்தர்களைக் கண்டுதான் பொறுமுவோம். தீடீர் ஜனத்தொகை பெருக்கத்தில் தெற்குவாசல் அதிநெரிசலில் கால் மிதிபட்டு நேற்று சுமுகமாய் இருந்த ஏதோ இரண்டு ஸ்ரீரங்கவாசிகளிடையே வாக்குவாதங்கள் பெருகும். இன்றும் அதிநெரிசல், வாக்குவாதங்கள், வருடமுழுவதும். அரங்கனை தரிசிக்க வந்துபோகும் ஜனத்தொகை உதவியின்றியே. கோவிலினுள்ளும்தான் தேசிகர் சந்நிதி துவாதஸி இலவச பந்திபோஜனத்தில்தான் எத்தனைக் கோபங்கள், கொந்தளிப்புகள், அதிரசங்கள், ஆத்திரங்கள். அல்பங்கள்.

கோவில் வாசலில் ‘ரெங்கா’ கோபுரத்திற்கு அருகில் இரண்டு நாள்கள் முன்னர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவள் இன்று இறந்துவிட்டாள். திறந்திருந்த வாயை மொய்த்த ஈக்கள், அகன்ற விழிகளைக் கண்டு அஞ்சவில்லை. கோபுரத்திற்கு உள்புறம் இறந்திருந்தால் வைகுண்டம் போயிருப்பாள். கோவிலுக்குள் (நியான் அறிவிப்பில்) ஹிந்துக்களுக்கு மட்டும்தான் அனுமதி உண்டே. ஸ்ட்ரெட்சர் கொண்டுவந்து எடுத்துச்சென்றனர்.

செய்வதற்கிருப்பவைகளைவிட அவற்றைச் செய்வதற்கான அவகாசம் குறைவானதாகவே தோன்றும் தினவாழ்க்கைச் சட்டகத்திலிருந்து வெளியேறி, தூக்கம், சாப்பாடு, குளியல் என்று அனைத்தையும் லங்கர்கட்டை காய்களென கலைத்துப்போட்டு வருடத்தில் சில நாட்கள் கிணற்று நீர், இலை வடாம், வீட்டு இளநீர், இமாம் பஸந்த் (தாத்தாச்சாரியார் தோட்டத்து மாம்பழம்), மர பெஞ்சு, ஒயர் கூடை, பழைய புத்தகங்கள், நினைவுகளுடன் ஸ்ரீரங்கத்தில் சோம்பியிருப்பது நன்று.

ஓய்வில் சட்டெனப் புரிவது சென்னையில் பிஸியாய் செய்துகொண்டிருப்பவைகளில் தேவையெற்ற செயல்கள் எவை என்பது. ஒரு வாரத்தில், இவ்வோய்வே பிரதான தேவையற்ற செயலோ என்றாகிவிட்டது. கிளம்பவேண்டியதுதான். டுக்ரிங் செய்வதற்கு.

நட்சத்திரங்கள் வெடித்து மாள்கின்றன. சில மாண்டு வெடிக்கின்றன. ‘அஜீதாஸ்யாம சரதஸ்சதம்’ என்று வரம்கேட்டு வணங்கும் சூரியன் சில மில்லியன் மனித வருடங்களில் நியூக்ளியர் ஃபியூஷனை நிப்பாட்டி செவ்வரக்கனாய் சைலண்ட் ஆகப்போகிறான். மொஹஞ்சதாரோவில் நீர்முகர்ந்த மண்பானை இன்றைய அருக்காட்சியகத்தில் ஏஸிக்காற்றை அள்ளியபடி. நேற்றைய சிலிக்கா மண் இன்றைய கைக்கடிகாரம். நாளைய தொல்பொருள். மாற்றம் என்பது மானுடத் தத்துவமும்தான். சிலவற்றின் காலவரைதான் கலக்குகிறது.

இரண்டிற்குமே வயதாகிறது என்றாலும், என்னைச் சுற்றிலும் ஊர் வளர்கிறதா, இல்லை என் உள்ளம் தேய்கிறதா. மலைக்கோட்டையிலிருந்து பார்த்தால், காவிரியே ஊரைச்சுற்றிய வெள்ளைப் புடவை போல் காட்சியளிக்கிறது. வாழ்ந்த ஊரின் நினைவுகள், நித்யங்கள், வாக்குறுதிகள், ஆசுவாசங்கள், என் வாழ்நாளுக்குள்ளேயே என் சம்மதமின்றி உருத்தெரியாமலாவது சமாதானப்படவில்லை. மாற்றங்கள் இயல்பே. தென்குமரியின் மனல்தேரிகள் நாஞ்சில் நாடனுக்கு மாறிவிடவில்லையா. அன்றி இவ்வுலகம் அளந்தானின் அரங்கத்திலிருந்து அகன்று, இன்று நானும்தான் நகரதனில் நைகிறேன். அன்றணிந்த அரை நிஜாரை நாகரீக வளர்ச்சி என்று வேறு விநியோகஸ்தர் ஸ்டிக்கருடன் இன்றும் அணிகிறேன். இருந்தும், மாற்றம் என்பது இழப்பின் மறுபெயர்தானா…தலைமுடியை இழப்பது முகத்தை அதிகரிக்கவா. தவிலோசை தலைவலிக்கச்செய்யவா. தடாகம் தவளை வளர்க்கவா.

உச்சிப்பிள்ளையார் கோவில் சென்றமுறைக்கு இப்போது ‘சின்னதாகிவிட்டது’ என்றாள் மகள். வளர்ந்துவிட்டாள். அறிவு, மன வளர்ச்சிகளில், பார்வை விலாஸங்களில், சிறுவயதில் பார்க்கும் விஷயங்கள் சுருங்கிவிடுவதற்கு உளவியல் காரணங்கள் உண்டு. எனக்கும் ஸ்ரீரங்கம் ஒவ்வொறு விஸிட்டிலும் சிறிதாகிக்கொண்டே வருகிறது. அது ரெங்கன் கருவறைவரை சுருங்குவதற்குள் என் அறிவை விருத்திசெய்து, அகண்டமாக்கி, மானுட ஜாதி நானென்று கூவிப் பழகிட வேண்டும்.

 - அருண் நரசிம்மன்

about the writer : http://www.ommachi.net/about