Saturday, 29 June 2013

லியனார்டோ டாவின்சி


உலகமே வியக்கும் மோனாலிசா ஓவியத்தை வரைந்தவர் லியனார்டோ டாவின்சி என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால், அவர் ஓவியர் மட்டுமல்ல... ஒரு கண்டுபிடிப்பாளரும் கூட! அது மட்டுமல்ல... பொறியாளர், சிற்பி, உடற்கூற்றியல் அறிஞர், கட்டிடவியல் நிபுணர், நகரமைப்பு வல்லுநர், புல்லாங்குழல் இசை மேதை என்று பலப் பல துறைகளில் பேரறிஞராக இருந்தவர்.

இத்தாலியில் 1452ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி பிறந்தார் டாவின்சி. தந்தை வழக்கறிஞர். பணத்துக்குக் குறைவில்லை. தன் 14வது வயதிலேயே மாதிரி வடிவமைப்பில் ஆர்வம் கொண்டிருந்தார் டாவின்சி. அந்த ஆர்வத்தைப் பார்த்த அவர் தந்தை, ஆந்திரயா டெல் வெரோசியோ என்ற சிற்பியிடம் அவரை பயிற்சிக்கு அனுப்பினார். அந்தப் பயிற்சி அவரை தனித்துவமிக்க ஓவியராக்கியது. உலகப் புகழ் மோனாலிசா போன்ற ஓவியங்களை வரைந்தாலும், டாவின்சியின் மனம் திருப்தி கொள்ளவில்லை.

மனிதர்களின் உடலமைப்பை நுட்பமாக அறிந்தால்தானே துல்லியமான ஓவியங்களை வரைய முடியும்? எனவே, மனித உடல் உறுப்புகளைப் பற்றி உலகம் அறிந்திராத பல தகவல்களை எளிமையான கோட்டோவியங்கள் மூலம் வெளிப்படுத்தினார் டாவின்சி. படிக்கும் காலத்தில் அறிவியலையும் கணிதத்தையும் அவர் பயிலவில்லை. ஆனாலும் ஓவியம் மற்றும் சிற்பக்கலை வழியே அவற்றைத் தொட்டார் டாவின்சி.

பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்று ஆராய்ந்த அவர், மனிதன் பறவை போலப் பறக்க வேண்டும் என்றால் அதற்கு எப்படிப்பட்ட கருவியை உருவாக்க வேண்டும் என்பதையும் படங்கள் வழி விளக்கினார். இன்றைய பாரா கிளைடிங் இறக்கை போல இருக்கும் அக்கருவி, விமானத்தின் உருவாக்கத்துக்கு முன்னோடி என்பது கண்கூடு. இன்றைய ஹெலிகாப்டர் போலவே ஒரு கருவியை வரைந்து அதற்கு ஆகாய துளைப்பான் என்று பெயரிட்டிருக்கிறார் டாவின்சி.

பறக்கும் கருவிகள் மட்டுமல்லாது, இன்றைய டாங்கிகள் போன்ற போர்க்கருவி, எல்லா திசையிலும் சுடும் இயந்திரத் துப்பாக்கி எனப் பல்வேறு பொறியியல் அதிசயங்களை 15ம் நூற்றாண்டிலேயே தந்துவிட்டுப் போனார் அவர். வெறும் ஏட்டளவில் மட்டுமே நின்று போன டாவின்சியின் பொறியியல் கண்டுபிடிப்புகளை சமீபத்தில் பி.பி.சி தொலைக்காட்சியினர் நிஜமாக வடிவமைத்துப் பார்த்தார்கள். அவை அனைத்திலும் ஏதோ ஒரு பொறியியல் குறைபாடு இருக்க, அதை மட்டும் நிவர்த்தி செய்தபோது அக்கருவிகள் நன்றாகவே இயங்கின.

தனது குறிப்புகளைப் பயன்படுத்தி சாமானியர்கள் யாரும் அபாயகரமான கருவிகளைக் கண்டறிந்து உலகுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்று தான் டாவின்சி தனது குறிப்பில் வேண்டுமென்றே குறைகளை விட்டிருக்கிறார் என்கிறார்கள் இன்றைய ஆய்வாளர்கள். இன்று வரை நம்மால் புரிந்து கொள்ள முடியாத பல மர்மங்கள் டாவின்சியின் படைப்புகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள் சிலர்.

No comments:

Post a Comment