Friday, 22 February 2013

கிறிஸ்துவுக்கு முந்தய முருகன் கோவில்




சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது.  இந்த செய்தி ஊடகங்களுக்கு முக்கியமல்ல.



எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நன்மை இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது.





பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது.






இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள்...

2 comments:

  1. Thanks for the information. I use to travel past this "Puligugai" so many times. I will visit during my next travel on ECR.

    ReplyDelete