Thursday 4 July 2013

ஸ்ரீரங்கம் அன்றும் இன்றும்

வண்டின முறலும் சோலை மயிலின மாடும் சோலை. மாற்றங்களை வரவேற்றபடி. இருபத்தியைந்து வருடங்கள் நான் வளர்ந்திருக்கிறேன், அதன் வீழ்ச்சியுடன். இன்றும் விட்டுவிடாமல் தொட்டுக்கொள்வதற்கு மட்டுமான உறவு. பழைய ஞாபகங்கள். புதிய ரணங்கள். நண்பிக்கு மேலே, காதலிக்கு கீழே. மனைவியாகிவிடமாட்டாள் என்பதில் ‘அப்பாடா, தப்பித்தோம்’ என்கிற நிம்மதியில்லை. மனைவியானாலும் அறுபதாம் கல்யாணத்தில்தான் என்பதில் இன்றளவு நிம்மதியே.

ஸ்ரீரங்கமும் கிட்டத்தட்ட இதையேதான் சொல்லும், என்னைப் பற்றி.

பல்லவனில் லால்குடி வந்ததுமே எழுந்து (சில முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் அரியலூரிலேயே எழுந்துவிடுவர்) தலையைச் சரிசெய்துகொண்டு, பரணில் இருக்கும் லக்கேஜையெல்லாம் இறக்கி அவற்றை அடுத்தவர் முன்னேறிவிடாமல் தற்காப்பாய் வைத்துக்கொண்டு, வாசலுக்கு கியூ-கட்டி, கொள்ளிடம் வந்ததும் ராயகோபுரத்தை பார்வையிட ஜன்னல் வழியே குனிந்தால், காணோம். கும்மிருட்டு. கரண்ட் இல்லை.

நான் வாசித்த ஹைஸ்கூல் தாண்டி என்றும் மூடியிருக்கும் லெவல்கிராஸிங் ஊடே காட்டழகியசிங்கரைக் கடந்து, ரயில்நிலையத்தில் இறங்கியதும் சிறு உற்சாகம். தண்டவாளத்தில் ரயில் வருமுன் இரண்டு பைசாவை வைத்து, தடதடத்ததும் பத்துபைசா சைஸிலிருக்கும் அக்காசைத் தேடிப் பொறுக்கி, இன்ட்ரவலில் அருகில் பள்ளியின் முன் ஐஸ்ஃப்ரூட் வாங்குவது பாலகாண்டத்தில்.

சிறுவனாய் வசித்த தாத்தம் தெரு வீடு, திருமஞ்சனக்காவேரி என்றழைக்கப்படும் திருச்சாக்கடையின் திருப்பாலம், வேலிக்குள் முட்புதர்களாகவும், கறிகாய்ச் செடிகளாகவும் இருந்த பிரதேசங்கள் ஹோல்சேலாய் சிமெண்ட் ஜல்லிக் கலவைகளில் சிரிக்க, இளமை நினைவை சுரக்கும், துறக்கும், தெருக்கள் என்று அந்நியமாய்க் கடந்து வீட்டையடைந்தேன். முப்பது வருடம் முன்னர் திருமஞ்சனக் காவேரியில்தான் வீட்டில் பொங்கலுக்கு “காக்கா பிடி, கன்னு பிடி” என்று கலர் சாதங்களை வைத்துப் பிடி சுற்றுவார்கள். பாலத்தில் மேலிருந்து அதில் தொபுகடீர் என்று குதித்துக் குளிக்கும் சக சிறுவர்களை, காலில் தண்ணீர் படாமல் (அரைகுறையாய் உள்ளங்கால் ஈரமாகி அடுத்த அடியில் ஒட்டும் மண் எனக்கு மரவட்டையை ‘க்ரச்சக்’ என்று மிதிப்பதைவிட உவேக்) ஓரமாய் நின்று வேடிக்கைப் பார்ப்பேன். பாலத்திலிருந்து தொபுகடீர் என்று திருமஞ்சனக் காவேரிக்குள் இன்று தற்கொலை செய்துகொள்ளக்கூட குதிக்கமுடியாது. சற்றே ஆழமான குப்பைக்குழியில் விழுவதால் கால் மட்டும் உடையலாம்.

திருச்சி மாவட்டம் கந்தக பூமி. கோடை வெப்பநிலையும் சென்னையைக்காட்டிலும் ஸ்ரீரங்கத்தில் அதிகம். நிச்சயம் தரையிலேயே ஆம்லெட் போடலாம். ஹீரோயினின் நாபிக்கமல பிரதேசங்களைத் தேடிப்போகவேண்டியதில்லை. மொட்டைமாடியில் வேஷ்டியில் பிழிந்த கூழ் இரண்டு மணிநேரத்தில் காய்ந்த வற்றலாகிவிடுகிறது. சற்றுப் பொறுத்து எண்ணை ஊற்றினால், அங்கிருந்தே வற்றலை இலைக்குப் பரிமாறிவிடலாம்.

வித்தியாசம், வெயில் சென்னையில் ஈரப்பதத்துடன்; ஸ்ரீரங்கத்தில் உலர்ந்து. அதனால் சென்னையில் வியர்த்துக்கொட்டுவது உடலின்மேலேயே அதிகமாய் தங்கி கசகசவென்றிருக்கும். வீட்டினுள் புழுங்கும். வெளியே ‘ஸீ ப்ரீஸ்’ வாங்கினால் தேவலை என்றாகும். ஸ்ரீரங்கத்தில் உலர்ந்த ’அனல் காற்றில்’ வியர்வை ஆவியாகிவிடும். கசகசக்காது. ஆனால், வெளியே சென்றால் அரைமணியில் ஆயாசமாகிவிடும். ஆவியான வியர்வையுடன் நம் உடல் ஆற்றல் அல்லவா வெளியேறுகிறது. வீட்டினுள் புழுங்காமல் சற்று இதமாய் இருக்கும். உடலின்மேல் வியர்வை தென்படவில்லை என்பதால் அலட்சியமாகாமல், நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். மறந்தால் உச்சா எரியும்; மூக்கில் ரத்தம் கசியும்.

தண்ணீர் என்றதும் காவேரி, கொள்ளிடம் ஆறுகள். ‘பெரெனியல்’ என்று பாடத்தில் படிப்பதோடு சரி. வெள்ளையாய் காவேரி ஆற்றுப்படுகையில் பாலத்திற்கு அருகில் சீரியல் லைட் கட்டி சென்ற வருடம் துவங்கப்பட்ட பொதுமக்களுக்கான ‘பீச்’, செம ஹிட். ‘கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்’ என்று காவிரி மண்ணில் புதையப்புதைய நடக்கிறார்கள், இருள்கவியும்வரை. கொள்ளிடம் பாலத்திற்கு அருகில் இதேபோல் ‘மணல்வாரியம்மன் துணை’ என்று லாரிகள் பவனி.

கொள்ளிடத்தில் ‘வெய்யில் வீணாப்போறதேன்னு’ ஓரளவு சமதளமாயுள்ள இடத்தில் ’பிட்ச்சின்’ இருபுறமும் ஸ்டெம்ப் நட்டு கிரிக்கெட் ஆடுவோம். பந்தை லாங்-ஆஃபில் தூக்கி அடித்தால் திரும்பி நம்மிடமே வந்துவிழும். காற்று அப்படி. எதிர்ப்புறம் பௌலர் வீசிய பந்து, அடிக்க பாட்ஸ்மேனிடமே வராது.

வீட்டிலிருந்து துணிகளை பெருமுடிச்சேயில்லாத மூட்டையாய் கட்டி, கழுதைமேல் பொதியாய், வசந்த நகர் கடந்து, திருமங்கை மன்னன் படித்துறை தாண்டி கொள்ளிடத்தில் கரையோரத்தில் என்றும் சலசலக்கும் நீரில் துவைத்து வெள்ளாவி வைத்து வேட்டிகளை வெளீரிடும் வண்ணான்கள் வழக்கொழிந்துவிட்டனர். கொள்ளிடத்தைக் கடந்து உத்தமர் கோவிலில் வாஷிங்மிஷின் விற்கிறார்களாம். இளவேட்டிகளெல்லாம் வயதானப் பற்களென மஞ்சளாய் இளிக்கின்றன.

வீட்டில் ரிடையரான பெற்றோர்கள் செல்பேசியில் அலார்ம் வைத்துக்கொண்டு பங்சுவலாய் டி.வி.யில் ‘சிவம்’ பார்க்கிறார்கள். உதவியாளி ‘தளிப்பன்ற உள்ளையும்’ பெருக்குகிறாள். இரவில் வயதானவர்களால் ஏஸி இன்றித் தூங்கமுடிவதில்லை. கரெண்ட் இல்லாவிட்டாலும் பரவாயில்லையாம். வயதான உடல் லேசில் மாறாது. முயன்று மாற்றிவிட்டால், மீண்டும் அப்புதிய நிலையிலிருந்து லேசில் மாறாது. ஐந்தில் வளைந்தாலும், ஐம்பதில் வளைந்தாலும், சரியான மாற்றங்களையே முயலவேண்டும்.

ஓரிரவில் கொசுக்களுக்கு நாம் வந்தது தெரிந்துவிடுகிறது. என்னுடைய பி-பாஸிடிவ் வகை ரத்தத்தை மட்டுமே விரும்பிக் குடிக்கின்றன்றனவோ என்பது என் நெடுநாளைய சந்தேகம். நாக்கற்ற கொசுக்களுக்கும் உணவில் ஒரு தேர்வு இருக்கலாமல்லவா. என் மனைவியைக் கொசுக்கள் கடிப்பதில்லை.

வரும் இரவுகளில் மகள், மனைவி தூங்குவதற்கு, தூங்கமுடியாத நான் சாமரம் போடவேண்டியுள்ளது. எலக்ட்ரிக் கொசு பேட் வைத்துக்கொண்டு. கிரிக்கெட், டென்னிஸ் (இவன் ஃபோர்ஹேண்ட் அழகாய் இருக்கிறது என்பார் ஸ்ரீரங்கம் கிளப் கோச்), டேபிள் டென்னிஸில் (டேபிளுக்கு மேல்பக்கமாய் அடிப்பா) பால்யத்தில் ஆடாது விட்ட ஷாட்களையெல்லாம் பழகிக்கொள்கிறேன்.

ஆனால் கொசுக்கள் ஒன்றும் புதிதல்ல. சுதந்திரப் போராட்டத் தியாகியான என் தாத்தாவையும் கடித்திருக்கிறது. கொசுக்கடிக்கு பேர்போன ஆர்-ஈ.ஸி. கல்லூரி விடுதியிலிருந்து இரவு தங்குவதற்கு ஸ்ரீரங்கம் வீட்டிற்கு வந்திருந்த மெட்ராஸ் நண்பன் கொசுக்கடியின் வலிதாங்காமல், “டேய், இங்கயும் கொசு கடிக்குமா,” என்றதற்கு “இங்க மட்டும் இல்லடா, எங்கயும் கொசு கடிக்கத்தான் செய்யும்,” என்கிற என் பதிலில் விட்டதுதான் நட்பை.

முப்பத்தைந்து வருடங்கள் முன்னர் வீட்டைக் கட்டியபோது ஸ்ரீரங்கத்தில் மூன்றே காண்ட்டிராக்டர்கள். ரெங்காச்சாரி மாமா கூப்பிட்ட குரலுக்கு ஆள் அனுப்பி வீட்டில் கழன்ற ஜன்னல் கொக்கியை மாட்டுவதிலிருந்து, கிணற்றில் உள்புறம் குருவிப் பொந்துகளில் சிமெண்ட் பூசுவதுவரை அனைத்து சில்லறை வேலைகளையும் செய்துகொடுப்பார். பெரிய வேலைகளுக்கு மட்டும் ரேட் பேசி, காசு வாங்கிக்கொள்வார். இன்றும் மோட்டார் காயில் மாற்றுவது, பியூஸ் போடுவது, சந்துப்பக்கங்களை சுத்தம்செய்வது, பெயிண்ட், ஒட்டடை அடிப்பது, தேங்காய் பறிக்க, வாழைத்தார் களைய, வேப்பமரக்கிளை மின்கம்பியில் உரசாமல் கழிக்க, என்று வீட்டை ரிடையராகவிடாமல் இருத்த நான்கைந்து உதவியாளர்கள் தொடர்ச்சியாய் தேவையாயிருக்கிறது.

கவிஞர்களுக்கு அடுத்துச் சுயதொழிலாய் ஸ்ரீரங்கம் முழுவதும் அடுக்ககம் மட்டுமே கட்டத்தெரிந்த காண்டிராக்டர்கள் நிறைய இன்றுள்ளனர். கட்டிய வீட்டைக் காபந்து பண்ண மேற்படி சில்லறை வேலைகளுக்கு அவர்களிடம் ஆட்களில்லை.

முழங்கை மோதி குழாய் உடைந்துவிட, நிறுத்தமுடியாத குளியல். முப்பது வருடம் முன்னால் என்னுடன் மாங்காய் அடித்தவர்தான் இன்று மிஞ்சியுள்ள பிளம்பர். ‘பல்திறனாளி’. ஆனால் லேசில் வந்துவிடமாட்டார். ஏக டிமாண்ட். ஃபோனில் “இதோ பறிச்ச எலுமிச்சம்பழத்தோட வந்துட்டேன்” என்றார், தில்லானா மோ. வைத்தி கணக்காய். நானே உடைந்த குழாயை கழற்றி, திருகுகளில் நூல்சுற்றி, ஒரு லொடக் லொடக் பைப்ரென்ச் உதவியுடன் துருப்பிடித்த ஸ்டாப்பரைத் திருகி அடைத்துவிட்டேன். விரல் முட்டிகளில் சிராய்ப்புகளுடன் தொப்பலாய் வெளிவந்த என்னைப்பார்த்ததும், அப்பா, “இவனும் மெக்கானிக்கல் படிச்சதுக்கு உபயோமா ஒரு வேல செஞ்சுட்டாண்டி”. நான்கைந்து நாள் கழித்து அம்மா ஃபோனில் “இன்னும் எலுமிச்சம்பழம் வரலை” என்றிருந்தார்.

நாச்சிமுத்து துணிக்கடை இருபது வருடத்தில் இரண்டிலிருந்து மூன்றாகியிருக்கிறது. ரெடிமேட் சுடிதார்களும் விற்கிறார்கள். இன்றும் தீபாவளிக்கு அங்கு துணியெடுத்து, அளவுகொடுத்து டைட்டாய் சட்டை தைத்துக்கொள்ள ஆசைதான். ரோட்டில் தள்ளிக் கொண்டுவந்து வீட்டிலேயே அரைநாளில் தைத்துக்கொடுக்கும் டெய்லர்கள் இல்லை. அம்மாமண்டபம் கடை டெய்லருக்கு ரெண்டு நாளிற்குள் சுடிதார் தைப்பதுதான் ஞாபகம் இருக்கிறதாம். உடுத்தும் அளவு எனக்கு ஆண்ட்ராஜினஸ் அவசரமில்லை.

வெள்ளை வேட்டி, சுருட்டிவிடப்பட்ட வெள்ளைச் சட்டையில், தலையில் கூடையில் வைத்து எவர்சில்வர் பாத்திரம் விற்றவரும் ரிடையர் ஆகிவிட்டார். பையன் பொறியியல் படித்துவிட்டு எங்கோ சாஃப்ட்வேர் எழுதி விற்றுக்கொண்டிருக்கிறான்.

இளநீர் பறிப்பவரை செல்போனில் அழைத்தால் வருகிறார். களேபரமாய் கம்பங்களுக்கு சுற்றியுள்ள டி.வி. கேபிள் ஒயர்கள்மேல் மட்டையைப் போடுகிறார். ரிமோட் உதவியின்றி சேனல்கள் மாறுகின்றன. பார்ப்பவர்களுக்கு ஒன்றும் வித்தியாசப்படவில்லை.

பணியாளர்கள் என்றில்லை, சிறு தொழில் வேலை செய்த அநேகர் டோடோ பறவை போலாகிவிட்டனர். சிட்டுக்குருவிகளே தேவலாம். ஆங்காங்கே ஒன்றிரண்டு ஊஞ்சலுக்கு மேல் உத்திரத்தில் கூடுகட்ட மிஞ்சுகிறது.

வீட்டிற்கு அருகிலிருந்த சாராயக்கடையும் அடுக்ககமாகிவிட்டது. ‘பார்’கள் வீட்டு இலக்கங்களில் உறைந்துவிட்டன. என் சிறுவயதில் ஒருமுறை அப்பா இக்கடையினுள் சென்றுவருவதை பார்த்திருக்கிறேன். கோன் ஸ்பீக்கர் வால்யூமை குறைத்துவைக்கச்சொன்னார். செய்தார்கள். எதிர் சாரியில் மாடிவீடாகிவிட்டது மல்லிகைப்பூக் கொல்லை. அருகில் அதன் சொந்தக்காரரின் குடிசை, மொட்டைமாடிக் குடிலாகிவிட்டது. எங்கள் வீட்டிற்கு பாம்புகள் வருகை இன்றில்லை.

அடிக்கும் ரியல் எஸ்டேட் காற்றில், வீட்டைச் சுற்றி வீசக் காற்றில்லை. தோப்பே தோற்று உருமாறுதோற்றப் பிழையாகிவிட்டது. மிஞ்சியிருக்கும் தென்னை, நாற்றங்கால் முதலியவை, சாணக்கியர் சந்திரகுப்தருக்கு எதிரிநாட்டை வீழ்த்த வழங்கிய அறிவுரைக்கேற்ப, ஓரங்களில் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ’வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்’ தோற்றுவிக்க, இனி கட்டிடங்களையே ஆடும் வகையில் கட்டினால்தான் உண்டு.

ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் அதிகம் விலைபோகுமிடங்கள் சென்னை, கோவை, அடுத்து ஸ்ரீரங்கமாம். எங்கிருந்தோ பொற்கிழி ஈந்து ஸ்ரீரங்கத்தையே பார்த்திராத ஜனம், இங்கு ரிடையரான சந்ததியினரில் தங்களுக்கு வேண்டிய சிலரை வாஸ்த்துப்படி காவியடித்த அடுக்ககங்களில் இருத்திக்கொண்டே இருக்கிறது. நேற்று ரிடையர் ஆன என் அப்பாவையே ‘வாடாப்பா சௌக்கியமா’ என்று குசலுவார்கள் இதிலுறையும் சீமையில் சில்லறைபுரளும் சீமாச்சுக்களின் சீனியர்சிட்டிசன்கள். அடுக்கக வருணாஸ்ரம அழுத்தத்தில் ஊரே சில வருடங்களில் சந்நியாஸம் வாங்கிக்கொண்டுவிடும்.

என்னை அழைத்திருந்த ‘க்ருஹப்பிரவேசத்திற்கு’ வாலை என்னதான் அமுக்கித் திருகினாலும் மூன்றாவது மாடிக்குப் பசுமாடு படியேறச் சம்மதிக்கவில்லை என்பதால் லிஃப்ட்டுக்கருகில் அமெரிக்கா பூச்சுடன் அலங்காரமாய் இருக்கும் ‘மாட்டுப்பெண்ணிடம்’ மஞ்சநீர் தட்டில் தங்க முலாமிட்ட பசுமாடு விக்ரகம் வைத்துத் தடவிச் சிலிர்த்துக்கொண்டார்கள். இரண்டே நாள் விடுப்பில் இதற்கென்றே ராம்ராஜ் வேஷ்டியில் இறக்குமதியாகியிருக்கும் மகன், ஸ்மார்ட் ஃபோனில் தட்டி, ஃபேஸ்புக்கில் லைக்கிட முரசுகிறார். ஸ்ரீரங்கத்தில் அடுத்த அடுக்ககத்தை இண்டஸ்ட்ரியல் லிஃப்ட் வைத்துக் கட்டினால், பசுமாட்டை மாடிவீட்டு வாசல்வரை அழைத்துவருவது எளிமையாகும். சம்பிரதாயங்களை விட்டுக்கொடுக்கலாமா. சாணித் தொல்லைக்கு பெரிய சைஸ் டயப்பெர் அமெரிக்காவிலேயே கவனம் செய்யலாம்.

சுற்றிலும் தென்னை மரங்களுடன், சோலைக்குள் நான் ஸ்ரீரங்கத்தில் வாசிக்கத் துவங்கிய கூரைப் பள்ளிக்கூடம் இன்று அடுக்ககமானது போகட்டும். அதற்கு “ஜெயஸ்ரீ கார்டன்ஸ்” என்று பெயர்வைப்பது “மருமத்தினெறிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும்புழையிற் கனல் நுழைந்தாலெனும்” வகை முரண்நகை. உள்ளே ஒரு துளசி மாடம் கூட இல்லை. ஜெயஸ்ரீ என்று பெயருடைய தாவணிப் பெண்ணாவது உலாவரட்டும்.

பிரதானக் கூடத்தின் கூரையில், எடுத்துக்கட்டி எனப்படும், நான்கு சுவர்களிலும் பெரிய சாளரங்களுடனான சதுரமான சிறு கோபுர வடிவம் கொண்ட வீடுகள் ஸ்ரீரங்கம் பிரதான சித்திரை, உத்திரை வீதிகளில் இயல்பு. எடுத்துக்கட்டி வழியே பக்கவாட்டில் சூரிய ஒளி வீட்டினுள் மிதமாய் விழுந்து ஒளியூட்டும். வாசல் ஒரு வீதியிலும், கொல்லை பின் வீதியிலும் முடியும் இவ்வகை வீடுகள் இயற்கையான காற்றுப்போக்கும் குளிர்ந்த நிலையிலும் இருப்பவை. வசித்துப்பார்த்தவர்களுக்குத் தெரியும் அருமை. கதவுகளைத் திறந்து வைத்தால் போதும். வீட்டின் ஊடே ‘வென்ச்சுரி விளைவினால்’ காற்று அடித்துக்கொண்டே இருக்கும். ஸ்ரீரங்கம் ‘ராய’கோபுரத்தின் ஊடேயும் இதே விளைவினால்தான் காற்று பிய்த்துக்கொள்கிறது. சூடான காற்று மேல்நோக்கி எழுந்து, தன்னிச்சையாய் எடுத்துக்கட்டி வழியாய் வெளியேறியபடி இருக்கும். ‘பெட்ரூம்-கிளாஸ்’ என்றறியப்பட்ட எண்ணை-விளக்கின் மேல் பொருத்தியிருக்கும் கண்ணாடியின் கூம்பு வடிவும் இதற்கே (லியனார்டோ டா வின்சி பதினைந்தாம் நூற்றாண்டில் கண்டுபிடித்தது.)

எடுத்துக்கட்டிக்கு எதிர் டிசைனாய், ஆனால் அதே உபயோகமுள்ள வகையில், கூடத்திற்கு அருகில் ‘முற்றம்’ வைத்துக் கட்டியிருப்பார்கள். கவனித்தால் தெரியும், முற்றம் உள்ளிருந்து வெளியே வானத்திற்கு அகலமாகும் வகையில் ஓட்டுக்கூரை வேய்ந்திருப்பார்கள். ராக்கெட் நாஸில்-ஐ கவிழ்த்துப் பொறுத்தியதுபோல. இவ்வகை வீடுகளில் முற்றத்தில் வானிலிருந்து காற்று உள்ளே இழுக்கப்படும் (‘மித்தத்தில உக்காரு; காத்து பிச்சிக்கும்’.) கதவுகள் திறந்திருக்கும் வாசல்-கொல்லை காற்று வழியில் கலந்து வெளியேறும். மின்சாரமற்ற காலந்தொட்டே மனிதன் கற்ற வசிப்பிடக்கலை. குடவாசலில் என் தாத்தா வீடு இவ்வகையில் இன்றும் இருக்கிறது, வேறு யாரிடமோ.

அடுக்ககக் கலாச்சாரத்தில், ஸ்ரீரங்கத்திலும் தங்கள் வீட்டை இடித்து, கோபுரமாய் நெடுக்குத் தெருவாய் கட்டிக்கொள்கிறார்கள், முடியாதவர்கள், நீட்டமான வீட்டை குறுக்காய் பல இடங்களில் தடுத்து, பக்கவாட்டில் பல வாசல்களை வைத்து அடுக்ககங்களை படுக்கவைத்துள்ளனர். எடுத்துக்கட்டியெல்லாம் அப்பீட். இயற்கையான கோடைக் குளிர்ச்சிகள் ஹோகயா. அடுக்ககக் கதவைத் திறந்தால் எதிர் வீட்டுக் கொல்லைச் சுவர்தான் தெரிகிறது. மெகாசீரியல் ஓலங்கள்தான் உள்ளே வருகின்றன.

சூட்டைக் குறைக்க காற்றின் விசையை அதிகரிக்கவேண்டும் என்பதைக் கடந்து சூடான மூளையில் யோசிக்க முடியாமல், மின்விசிறியை 3, 4, 5, 6… என்று ரெகுலேட்டரை திருகிப் பேய்த்தனமாய் சுழலவிடுகிறோம். சூடான காற்று சுழன்று கவிகிறது. இயல்பான அளவினின்றும் அதிகப்படியாக உடலில் இருந்து ஆற்றல் வெளியேற வகைசெய்துகொள்கிறோம். சுருக்க ஓய்ச்சலாகிவிடுகிறோம்.

(இப்படி யோசித்துப்பாருங்கள்: அறை முழுவதும் சூடான காற்றுதான் என்கையில், அதையேச் சுழலவிடுவதால் மட்டும் அதை எப்படிக் குளிரவைக்க முடியும்? நம் உடல் வெப்பத்தைவிடச் சூடான காற்று நம் புறத்தில் ’வேகமாய்ச்’ சுற்றுவதால், எவ்வாறு நம் உடல் சூட்டை குறைக்கமுடியும்?)

‘செய்யாதெனச் செய்தோம்’ என்பதற்கேற்ப மின்விசிறிக் காற்று குறைக்காத வெய்யில் சூட்டில் இருந்து தப்பிக்க அநேக வீடுகளில் ஏஸி வைத்துக்கொண்டு பிரபந்தம் வாசிக்கிறார்கள். வீட்டிற்கு வெளியே ஸ்ரீரங்கம் மேலும் கொதிப்படைகிறது.

ஒருகாலத்தில் திண்ணைக்கு நான்கைந்து என்று சும்மா கிடந்த நீர் தெளித்த பனையோலை விசிறிகளை ஆடாமல் பிடித்துக்கொண்டு அவைமுன் காற்று வர நம் தலையை குறுக்காய் ஆட்டிக்கொள்கிறோம். வேண்டாம் என்று.

கோவில் பிரதான கோபுரத்தின்மேல் நியான் ஒளியில் மினுக்கும் ரெங்கா ரெங்கா ரெங்கா-வில் துவங்கி, ஸ்ரீரங்கத்தில் அநேகமாய் அனைத்து வர்த்தகங்களும் ரெங்கன் பெயரை முன்வைத்தே தொடங்கப்படும். ரெங்கா வாடகை மிதிவண்டி நிலையம், ரெங்கா பீடா ஸ்டால், ரெங்கா பேல் பூரி கடை, ரெங்கா அயர்ன் வண்டி, இப்படிப் போய், ரெங்கா விறகுமண்டி, ரெங்கா டைப்ரைட்டிங் இன்ஸ்ட்யூட் என்று ஏற்பட்டவை காலத்திற்கு ஏற்ப ரெங்கா கேஸ் சர்வீஸ், ரெங்கா இண்டெர்நெட் கஃபே, ரெங்கா ரியல் எஸ்டேட் என்று உருமாறியுள்ளது. லேட்டஸ்ட், ரெங்கா இன்வர்ட்டர் கடை. உத்திரை வீதி வீட்டிலேயே ஒரு பகுதியில் செய்து விற்கத்தொடங்கியுள்ளார்கள். இதுவரை கண்களில் படாதது ரெங்கா மதுபானக்கடை.

அப்போலோ மருந்தகம் ஈ ஓட்டுகிறது. வாஸன் மெடிக்கலில் ஏக வியாபாரம். பலர் கூடி அணிவரிசையாய் மிச்சமிருக்கும் ஸ்ரீரங்கவாசிகளுக்கெல்லாம் மருந்து விற்கின்றனர். மக்கள் நோயுற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்.

கையெழுத்து மறையும் நேரம், கையகலக் கரண்டி நங் நங் ஓசையுடன் புரட்டும் இலுப்பைச்சட்டியில், மணலில் வறுத்த வேர்க்கடலை. எரிவாயுவை சூடுபடுத்துவதற்கான ‘புதிய வழிமுறை’ என்று, ‘போரஸ் பெபிள் பெட் ஹீட்டர்’ செய்வதற்கான ஒரு ஆராய்ச்சிப் பணியை சிலவருடங்கள் முன்னர் இந்திய அரசு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றிற்காக மேற்கொண்டிருக்கிறேன். நம் சமயற்கலையில் உள்ள பாரம்பர்ய தொழில்நுட்பங்களை பிரித்தாய்ந்தால் மேற்படி ‘பெபிள் பெட் ஹீட்டர்’ போன்ற புதிய தொழில்நுட்பங்களின் ஒரு வடிவத்தின் ரிஷிமூலம் உள்ளுரிலேயே கிடைக்கலாம். உட்ஸ் எஃக்கின் தரத்தையும் குப்தர் காலத்து ஸ்மெல்டிங் முறையையும் (இன்று குதுப் வளாகத்தில்) டில்லியில் இருக்கும் தூணில் கண்டு அதிசயித்து மட்டும் இருக்கவேண்டியதில்லை.

ஐந்து ரூபாய்க்குச் சுருட்டிக்கொடுத்த அளவு, நறநறக்கும் மணல் துகள்களுடன் சேர்ந்த ருசியில், சற்று குறைவானதென்றே பட்டது. காலம் கடலை அளவை மட்டுமா குறைக்கிறது. செய்தித்தாள்களின் தாக்கத்தையும்தான். கடலை சுருட்டிய பேப்பரை விரித்ததும், ‘ஸ்ரீரங்கம் ஜீயர் உடல் நலக்குறைவு’ என்றது. அன்றைய செய்தித்தாளில் மடித்துக்கொடுத்திருக்கிறார்.

இரண்டு நாள் கழித்து வாங்கியிருந்தால் கடலை மடித்த பேப்பர் “45ஆவது பட்டத்து ஜீயர் முக்தியடைந்தார்” என்றிருக்கும்.

ஸ்ரீரங்கத்தை விட்டு, மெயின்கார்டுகேட், உறையூர் நாச்சியார்கோவில், சங்கம் ஹோட்டல் சோமா பார் என்று ஒரு நாள் கழித்தேன்.

டி.எஸ்.டி. பஸ்ஸில் ஸ்ரீரங்கத்திலிருந்து மெயின்கார்டுகேட்டிற்கு செல்ல டிக்கெட் இருபத்தியைந்து வருடங்களில் ஐம்பது பைசாவில் இருந்து நான்கு ரூபாயாகியிருக்கிறது. மற்றபடி கட்டைவிரல் நகத்தினால் அமுக்கிக் கிழிக்கப்படும் அதே நிறங்களிலான டிக்கெட். உய்ங் உய்ங் ஹாரன். ஸ்டாப்பிங்கில் ஆள்பிடிக்க நியூட்ரலில் உருட்டுவது. நடுவில் எங்கு யார் கையாட்டினாலும் அவர்கள் வயதிற்குத் தகுந்தாற்போல் பிரேக்கடித்து வேகத்தைக் குறைப்பது (‘மூவிங்கில்’ தொற்றிக்கொள்ளவேண்டும்). காவேரி பாலத்தின்மேல் ஜிட்டாய் பறப்பது. சத்திரம் பஸ் ஸ்டாண்டில் உக்கிரமாய் கிளம்பி, முன்னால் நிற்கும் போட்டி கம்பெனி பஸ்ஸை ஓவர்டேக் செய்து, அவன் அலறிக்கொண்டு கிளப்பியதும் மீண்டும் நிறுத்தி பிரயாணிகளைச் சேர்ப்பது. விரல்களிடையே ‘வர்ணக்’கிரமமாய் டிக்கெட்டுகள். விரல்களில் மெட்டல் மோதிரங்கள். பக்கவாட்டுத் தகரங்களிலும், பஸ்ஸினுள்ளே குழாய்களிலும் தடதடக்கும் நடத்துனரின் மெட்டல் மோதிரங்கள் (இறங்கரச்ச எதுக்குமா படிக்கட்டுல தூங்கறீங்க). இவைகள் மாறவில்லை.

காத்தோடு பூவுரச, தோளோடு தோளுரச, களையான சுடிதார் பெண்ணுடன் அமர்ந்திருப்பதும், அவளிடம் அடிக்கடி இங்கிலீஷில் வழிவதும், பஸ் இரைச்சலில் பேசுவது கேட்கவேண்டிய சாக்கில் காதை முகர்வதும், இன்றும் நான் ஏறும் பஸ்களில் அராஜகமான செயல்தான். நின்றிருந்த பல அத்தைமார்களின் பார்வைகள் ஆடும் ஆள்காட்டிவிரல்களாய் பயமுறுத்தியது. பக்கவாட்டில் சரிபார்த்துக்கொண்டேன். என் மனைவிதான் அமர்ந்திருந்தாள்.

டௌனில் தெப்பக்குளம், சின்னக்கடை பெரியக்கடை வீதிகள் என் நினைவுகளிலிருப்பதுபோலவே இன்றும் மக்கள் பிதுங்கி வழிகின்றன. முகப்பில் ‘பர்மா பஜார்’ நான் பார்த்து வளர்ந்த பையன். இன்று என்னை நெருங்கவிடாமல் வேற்றுமுகமாய்ப் பார்க்கிறான். “பாலூட்டி வளர்த்த கிளி” என்று பாடல் ஒலித்த ஸ்ரீரங்கம் தேவி “மூட்டைப்பூச்சி” டாக்கீஸ் இன்று பஸ் ஸ்டாப்பில் மட்டுமே இருக்கிறது. கோடவுனாய், கல்யாணமண்டபமாய், முன்புறம் பழக்கடையாய் அவதாரங்களை மாற்றிக்கொண்டிருக்கிறது. தியேட்டர்களுக்குப் பெயர்போன திருச்சியில், ஐந்து தியேட்டர்களை உள்ளடக்கி டீடிஎஸ்ஸில் முழங்கிய மாரீஸ் காம்ப்ளக்ஸே இன்று வெளிறிய கலரில், வெறிச்சோடி, வெங்கனவாய். திரையுலகம் போலவே.

சாரதாஸ்-தான் ஜவுளி வியாபாரத்தில் “தாஸ் தாஸ், சின்னப்பதாஸ் தாஸ்” (வில்லனைப் ‘போற்றும்’ இந்தப் பாட்டே இன்றைய பரணில்). கீதாஸ் கடை அம்பேல். ஆனந்தாஸ் ஏதோ இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய். வழக்கம் போல இக்கடைகளினுள் செல்லவில்லை. வெளியே சைக்கிளில் ‘ப்ளம்ஸ்’ பழங்களை ‘ப்ளம்ஸ்ல காய்னே கிடையாது-ம்மா, எல்லாம் பழந்தான்’ என்று விற்றுக்கொண்டிருந்தவர், எனக்கு விற்க மறுத்துவிட்டார் (நானே பொறுக்கிக்கொள்கிறேன் என்றதால்).

சின்னக்கடை வீதியையும், என்.எஸ்.போஸ் ரோட்டுக் கடைகளையும் இணைக்கும் குறுக்குச்சந்துகள், கடைகள் என்று பலதும் மாறவில்லை. ஒருசமயம் ஆருயிர் நண்பன் வசித்த வீட்டின் சந்தையே காணோம். அடைத்து புதிதாய் கட்டிடம். பள்ளிவாசல் எதிரே பறவைகள் சரணாலயமான ஆலவிருட்சம் இன்றும் உள்ளது. இளையராஜாவே இங்கு வந்துதான் பறவையொலிகளை ரெக்கார்ட் செய்துகொண்டு போனதாய் என் வயதொத்த இப்பிரதேச இளைஞர்களின் ஐதீகம். உடான்ஸ்.

மலைவாசல் எதிரே கடைத்தெருவில் விளிம்பில் புத்தக பைண்டிங் கடை இன்னமும் இருக்கிறது. நரைத்துவிட்ட கடைக்காரருக்கு என்னை ஞாபகமில்லை. தாண்டி, பழைய புத்தகக் கடையில் ஞாபகம் வைத்திருந்தார். முப்பது வருடம் முன்னால் நான் பழையதாய் போட்ட ‘ஐ-சிங்’ புத்தகம் நொறுங்கலாய் இன்றும் கிடைத்தது. பி.ஜி.வுட்ஹவுஸிலிருந்து டாம் ஷார்ப், ஜேம்ஸ் மிச்னர், வில்லியம் ஷைய்ரர் என்று நான் விசாரித்த ஒரு முப்பது பெயர்களாவது பழையபுத்தகக்கடையிலும் போணியாகாத மூதாதைய எழுத்தாளர்களாகிவிட்டனர். ஸையன்ஸ் பிக்‌ஷனை ஒருவரும் வாங்குவதில்லையாம். அன்று காட்டிய அதே ஜே.ஜீ.பல்லார்ட்டை இன்றும் காட்டினார். ஜோ நெஸ்போ, ஹார்லன் கோபன், மாத்யூ ரெய்லீ போன்றவர்களின் புனைவுகள் புரளுகிறதாம். அர்த்னால்தர் இந்த்ரிதாஸோன், நீல் ஸ்டீவென்ஸன், கிரிஸ்டஃபர் மூர் என்று சற்று மாற்றினாலும் இருகைகளையும் உயர்த்திவிடுகிறார். தமிழில் நீலபத்மநாபன், அசோகமித்திரன், ராஜநாராயணன், ஜெயமோகன் போன்றோருக்கு தனி வாசகர் வட்டம் உள்ளது என்றது ஆறுதலாய் இருந்தது. அதனால் வட்டம் எவ்வளவு பெரியது என்று கேட்கவில்லை.

நான் பொறுக்கிய ஐம்பது பழையபுத்தகங்களுக்கு நான் அனுமானித்ததைவிட இரண்டரை மடங்கு விலை எழுதிக்கொண்டிருந்ததால் கடுப்பாகி எதையும் வாங்காமல் எஸ்கேப். உடன்வந்து கால்கடுக்க காத்திருந்து வெயிலில் கருத்திருந்த மனைவி, கோபத்தில் மீண்டும் சிவந்துவிட்டாள் (இவ்ளோ நாழி தேடிப் பொறுக்கின எதயுமே வாங்கப்போர்தில்லையா; லூஸ்ரா நீ). கடைக்காரர், நான், இருவருமே மனதினில் சொல்லிக்கொண்டோம்: பழையன களை.

‘மைக்கல்ஸ்’ ஐஸ்க்ரீம் கடையில் ஒரு ரூபாயிலிருந்த வெனில்லா, எட்டுரூபாய்கள். ஃபுருட் சாலட் இரண்டிலிருந்து ஒன்பதாய். அதே சிறு அளவு. அதே அதிருசி. விலைப்பட்டியலில் அறிவித்திருக்கும் கிரேப் ஸிரப் இருபது வருடம் முன்பு போலவே இன்றும் கிடைக்கவில்லை. ஐஸ்க்ரீமின் சிறு அளவு, ருசியிலும், உண்பவர் நாக்கிலும் நம்பிக்கை வைக்கும் வியாபாரத் தந்திரம். நிச்சயம் ஒன்றில் நிறுத்தமாட்டீர்கள். மூன்று நான்கு சாதாரணம். நடுத்தர நுகர்வோருக்கான குளிர்ச்சியை முன்வைத்த வியாபார வெற்றி. யோசித்துப்பார்த்தால், முன்னரே ஒரு ரூபாய்க்கு விற்றிருக்கக்கூடாதோ என்று படுகிறது.

‘ஸீ-கிங்ஸ்’ ஐஸ்க்ரீம் கடைக்காரர் ஞாபகம் வைத்திருக்கிறார். நட்-கார்னர், டியூட்டி-ஃப்ருட்டி, ஃபலூடா, டபுள்-டெக்கர் என்று பழைய ஐஸ்க்ரீம் பெயர்கள். புது விலை. அதே சுவை. கடை மாடியிலும் ஒரு தளம் முழுவதும் விரிந்திருப்பது சமீபத்தில்தானாம். முழுவதும் ஏஸி என்றாலும், மாடிக்கடையை மக்களுக்குமுன் ஈக்கள் கண்டுபிடித்துவிட்டன. பக்கத்து ‘வெஸ்ட்டர்ன் மியூஸிக்’ காஸெட் கடை நான் திருச்சியைவிட்டு அகன்றதுமே திவாலாகிவிட்டதாம். இன்ஸ்பெக்டர் க்ளூஸோ ஃபிரான்ஸை விட்டு அகன்றதும் பிங்க் பாந்த்தர் வைரம் திருடு போய் விடுவதைப்போல.

சோஃபீஸ் போன்று கேர்ள்-ப்ரெண்ட்ஸ் பிங்க் கலர் கவருடன் “கெட்-வெல்-ஸூன்” என்றோ “மிஸ் யூ – தாங்க்ஸ்” என்றோ எழுதி நமக்கு ஆர்ச்சி கார்டுகள் வாங்கிய தலங்கள் இன்றும் தழைக்கிறது. வாங்கும் யுவன் யுவதிகள் மாறிவிட்டார்கள் (நல்லவேளை).

நேற்று கிடைக்காத மாப்பிள்ளை விநாயகர் கோலிசோடாவுக்கு இன்று விளக்கம் கிடைத்தது. உச்சிப்பிள்ளையார் கோவில் (அல்லது மலைக்கோட்டை) தாண்டி புகழையாபிள்ளை தெரு சர்பத்கடையில். கோலி சோடாவின் பாட்டில் பிரத்தியேகமானது. கோலி இருக்கும் பகுதி புறநாநூற்றுப் பெண்கள் இடைபோல குறுக்கு சிறுத்து பின் தெற்கில் பெருத்திருக்கும். இவ்வகைப் பாட்டில்களைச் செய்வது சிரமம் என்பதால் விலை அதிகம். கடைகளில் வைத்திருப்பதற்கே கிரயமாய் பாட்டிலுக்கு முப்பத்தியிரண்டு ரூபாய் டெபாஸிட் கேட்கிறார்களாம். உள்ளிருக்கும் சோடா ஐந்து ரூபாய்தான். சிறு கடைகளில் ஸ்டாக் எடுப்பது குறைந்துவிட்டது.

நேற்று பன்னீர் சோடாவில் சமாதானமடைந்திருந்தோம்.

இன்று நரி முகத்தில் விழிப்பு (எழுந்ததும் இல்லாளும் இவனும் ஒருவரையொருவர் நோக்கியதனால்). ரப்பர் பையில் வைத்துக் கட்டையால் அடித்த ஐஸ் நொறுக்கல்களுடன், நன்னாரி சர்பத். கடைக்காரர் நன்னாரியை (சரஸபரில்லா) ஐம்பது மில்லி அலுமினியக்குவளையில் அளந்து கொட்டினார்.

கடைப் பெண்மணியின் குரல்: உள்ள உக்காந்து சாப்பிடுங்க.

இந்த வெயிலுக்கு இப்படி உக்காந்து இவ்ளோ நன்னாயிருக்கிற சர்பத்த சாப்ட்டேன்னா, அப்பறம் அப்டியே கால நீட்டி இங்கயே படுக்கவேண்டிதுதான்.

கடைப் பெண்மணி: ஏன், படுத்துட்டுதான் போங்களேன்.

கடை ஸ்டூலில் அமர்ந்து ருசித்துக்கொண்டிருக்கையில் விலைப் பட்டியல் நெருடியது. பெரிய இளநீர் முப்பது ரூபாய். முன்னூறு மில்லி கோக் விலைக்கே கிடைக்கிறது. ஒரு லிட்டர் கோக் பாட்டில் தொன்னூறு ரூபாய்தான். நாஞ்சில் நாடன் “சூடிய பூ சூடற்க” விலைக்கே கிடைக்கிறது.

நன்னாரி சர்பத் வயதானவருக்குத் தயாரானது. இடையே சைக்கிள் மத்யமர், சித்தாள் பெண் இருவரும் பாதாம் பால் வாங்கிக் குடித்தனர். கடைக்காரர் நன்னாரிக்கு அடுத்து வீட்டில் தயாரித்த ஆரஞ்சு மற்றும் ரோஸ்மில்க்கை எங்களுக்குக் கொடுக்கையில், சந்தனப்பொட்டிட்ட சிறுவன் டின்னில் அடைத்த ஃபாண்ட்டாவை இருபத்தியைந்து ரூபாய்க்கு அதட்டிக்கேட்டு வாங்கி கால்சிராயில் திணித்துக்கொண்டு விலகினான்.

கடைப் பெண்மணி: இப்படி வழிய வழிய கொடுத்தீங்கனா அவங்க எப்படி குடிப்பாங்க?

கடைக்காரர்: நிறஞ்சு சாப்படனும்மா.

முப்பது ரூபாய்க்கு மிச்சமாய் கொடுத்த ஒரு ரூபாயை மறுக்காமல் வாங்கிக்கொண்டேன்.

அவ்வாறு செய்வதுதான் நான் விரும்பும் உலகில் உறைந்திருக்கும் அவ்வியாபாரத்திற்கு கௌரவம் என்று பட்டது.

இடையில் இரண்டு நாள்கள் கும்பகோணம் விஸிட். டொயோட்டா கார் பயணம், சோழர்கால கோவில்கள், தற்காலக் கல்யாணம், அதன் சினிமா நாகஸ்வரம், தாராசுரம் கோவில், பட்டு என்று இதன் குறிப்புகள் தனியே.

மீண்டும் ஸ்ரீரங்கம். பழைய நண்பருடன் தினமும் மாலையில் வீதி உலா. சித்திரை உத்திரை வீதிகள் சுற்றி, நிச்சயமாய் ‘வாத்தியார்’ (என்று அறியப்படும் எழுத்தாளர் ‘சுஜாதா’ ரங்கராஜன்) வசித்த வீடுவரை சென்று தலா ஒரு பெருமூச்சு, ஒரு மானசீக சல்யூட், இரு ‘மேல்’மூச்சுக்களுடன் (இரண்டு ஆண்களல்லவா) ஜுட். சில வருடங்களுக்கு முன்பிருந்ததைவிட இன்றைக்குப் புதுப்பெயிண்ட் அடித்து ‘வாத்தியார்’ வீடு பொலிவுடன் உள்ளது. நண்பர் ‘வாத்தியார்’ எழுதிய அனைத்தையும் உடனுக்குடன் வாசித்தே வளர்ந்தவர். அவர் எழுத்தில் அமிழ்ந்த ஆழ்வார். நான் வெறும் ஆழ்வார்க்கடியான். ‘வாத்தியார்’ எழுத்தைத் தொகுப்புகளாய் சாய்ஸில் விட்டு வாசித்தவன். ஒருமுறைகூட அவரை நேரில் சந்தித்ததில்லை.

இன்றளவும் தொடரும் நண்பரின் சிகரெட் பழக்கம் ‘வாத்தியாரின்’ நினைவுகள் மங்காமல் இருக்கவாம். சிகரெட் பற்றவைக்க பெட்டிக்கடைகளில் ஒல்லியாய் வெட்டிய சிகரெட் பாக்கெட் துண்டுகளும், சிகரெட்டை விட அதிகமாய் புகைவிடும் திரி விளக்கும் இருக்கும். இல்லையேல் கனன்றுகொண்டிருக்கும் தாம்புக்கயிறு தொங்கும். ‘ரங்கு கடைக்கு’ (மூடியிருந்தது) அருகில் பெட்டிக்கடையில் நண்பருக்கு சிகரெட் பற்றவைக்க கடைக்காரர் எவர்சில்வர் லைட்டரை நீட்டி அவரே பற்றவைத்தது புதுசு. “வத்திப்பெட்டி கொடுத்தால் திரும்பிவர்ரதில்ல சார்.” (அதான் லைட்டர கொடுக்கலையா).

சிகரெட் பற்றிய நெடுநாளைய சந்தேகம் ஒன்றெனக்குண்டு. உள்ளிழுத்த புகையை உடனே உடலின் வடக்குப்பகுதி துவாரங்கள் வழியே வழியவிடுவதுதான் ‘புகைபிடிப்பது’ எனும் செயலென்றால், பற்றவைத்து சிகரெட்டை விரலிடுக்கில் பிடித்திருந்தாலே போதுமே. புகை ‘வெளியில்’தானே செல்லும். கோவிலில் விளக்கேற்றுவதுபோல், ‘உடம்பு நல்லாருக்கனும்’ என்று ‘வேண்டிக்கொண்டு’, பெட்டிக்கடை திட்டுகளில் சாயங்காலவேளையில் நம் சார்பில் சிகரெட்டை ஏற்றிவைத்துவிட்டு வந்துவிடலாம்.

அம்மா மண்டபம் காவிரிப் படித்துறையிலிருந்து பார்த்தால், சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இன்று ராஜகோபுரம் ஆகிவிட்ட “மொட்டை கோபுரம்” தெரியும் (புகைப்படத்தைப் பார்த்து ’சுஜாதா’ தேசிகன் ஒரு கோட்டோவியம் வரைந்துள்ளார், ‘ஸ்ரீரங்கத்து தேவதைகளு’க்காக). கோபுரம் அருகே, அதைப்பார்த்துச் சிரிக்கும் காந்தியடிகளின் உலோக ’பஸ்ட்’. அவர் முதுகுப்புறம் இன்றும் பன்னீர் மற்றும் கோலி சோடா கிடைக்கும் ‘செல்வா கடை’யைக் கடந்து, நீல-வெள்ளை முகப்புடனான போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகிலிருக்கும் ராமானுஜர் மண்டபம். ஒரு காலத்தில் ராமானுஜர், காந்தி இருவரும் அகண்ட இச்சாலையின் நடுவில் இருந்தனர். என் பிறப்பை அறிந்தகாலந்தொட்டு ராமானுஜர் ரோட்டின் வலது ஓரமாக கம்பிகளுக்குள் ஒதுங்கிவிட்டார். சாலையின் ஒரு பகுதியே இன்று வளர்ச்சி ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டது.

கிழக்கு வடக்குச் சித்திரை வீதி சந்திப்பில் நிலையான மேடைகட்டி தினமும் ஏதாவது சத்சங்க விஷயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முதல் நாள் விசாகா ஹரி “கண்ணபிரான் என்ன ஷொல்றார், அவர் நம்மாத்து குழந்தயோனொ..” என்றிருந்தவர் திடீரென்று பாடத்துவங்கினார். அவசரமாய் கடந்தாலும் தாயார் சன்னதி கோபுரம் வருமுன் ஆரபிதான் என்று கண்டுபிடித்துவிட்டேன். ‘போய் சொல்லிட்டு வந்துரட்டா, சந்தோஷப்படுவா’ என்றதற்கு மனைவி கிள்ளினாள்.

மறுதினம் அதேயிடத்தில் “குழந்தைகளெல்லாம் மேக்கப் போட்டுண்டு, மாறுவேஷம் பன்ற நிகழ்ச்சி; அனைவரும் வருமாறும், குழந்தைகளின் ஒப்பனை நிகழ்ச்சிய வந்து பார்குமாறும் கேட்டுக்கறேன்,” என்றார் மைக்கில் மாமா. அதற்கடுத்த நாள் உலாவில், வரவீணாவில் துவங்கி, நின்னுக்கோரி வர்ணம், பஜனைப் பாடல்கள் என்று தெருவில் நடப்போரையெல்லாம் கூப்பிட்டு உட்காரவைத்து, மையத்தில் எம்.டி.ஆர். குரலில் ஒருவரும், குழுவாய் மற்றவரும் சர்வலகுவில் பஜனைக்கொட்டு மிருதங்கத்துடன் பாடிக்கொண்டிருந்தனர். வாசல்களில் மாமா மாமிக்கள் உல்லாசம்.

தெற்கு கிழக்கு சித்திரை வீதிகள் சந்திக்கும் விலாஸமான ஓரத்தில், சுற்றிலும் பவர்-கட் இருந்தும், மூன்று இரவுகள் ஆர்க்-விளக்கின் ஒளியில் தயாரானது மேடை. ஆவி வந்த இடமாம். பெட்ரமாக்ஸ் விளக்கில் சாயங்கால கறிகாய் மார்கெட், ‘பார்க்’கிட்டிருந்த சைக்கிள்கள் என்று கலைத்துப்போட்டு, தெற்கு சித்திரை வீதியின் ஒரு பாதி முழுவது, உட்புறம் கரை வேட்டியணிந்த, கூரை வேயப்பட்டது. ஆபீஸ் செல்பவர்கள், பாதசாரிகள், வேறுவழியாக வீட்டை அடையப் பழகிவிட, கடைசி நேரத்தில் முதலமைச்சர் விஸிட்டை ரத்துசெய்துவிட்டார். வட்டச் செயலாளர் சிலர் பிழைப்பை கவனிக்க பழையபடி ஆட்டோ ஓட்டச்சென்றுவிட்டனர்.

மேடைக்குப் பின்புறம், வெளி-ஆண்டாள் சன்னதி இருக்கும் மேற்கு அடையவளைந்தானில், வந்திருக்கவேண்டிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த, ரோட்டின் ஓரங்களில் கட்டைகட்டுவதெற்கென ஓரிரவில் கம்பங்கள் நடப்பட்டன. பலனாய் வாகனங்களில் எதிரெதிர் ஓரங்களில் சென்றுகொண்டிருந்தவர்கள், கட்டாயமாக ரோட்டின் நடுவில் சந்தித்துப் பேசிக்கொண்டு விருட்டுகிறார்கள். “ஹிஸ்ட்ரி ஆஃப் தி வேர்ல்ட் – பார்ட் ஒன்” மெல் ப்ரூக்ஸ் படத்தில், “N V T S, NUTS” என்று நூற்றாண்டுகளுக்கு முன்னர், பழைய ரோமாபுரியில், ரோட்டில், சாதாரணன் அலுத்துக்கொள்வான்.

இளவயது ’வாத்தியார்’ (கணையாழியில் கொடுத்த) தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் புதுமைப்பித்தன் கிடையாது என்றது போல், ஸ்ரீரங்கம் பற்றி எழுதிவிட்டு, கோவிலைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையென்றால், இக்கட்டுரையின் அதிர்ச்சி மதிப்பு கூடிவிடும். சிறுவயதில் தாத்தாவை கைப்பிடித்து அழைத்துச்சென்றதோடு சரி, அரங்கனை இன்றும் தரிசிக்க முயல்வதில்லை. வழியில் பக்தகேடிகளைச் சந்திக்கையில் தரிசனம் தெறித்து மனத்தில் தரித்திரமே தங்குகிறது. பட்டாச்சாரியார்கள் சிலர் இன்றும் கையில் காந்திப் படம் போட்டு எதைவைத்திருந்தாலும் உரிமையாய் பிடுங்கிக்கொள்கிறார்கள். அடுத்தமுறை ‘இன்றைய காந்தி’ எடுத்துச்செல்லவேண்டும்.

உத்திரை வீதிகளில் ரோட்டோரங்களையெல்லாம் வீட்டின் வாசற்படிகள்வரை சிமெண்ட்டில் பூசிவிட்டார்கள். கார்கள் நிறுத்த சாலையை அகலமாக்கவாம். முன்னர் மழை பெய்கையில் ரோட்டோர மண் உறிந்துகொண்டு, வீட்டுவாசலில் மாலையில் பொழுதைகழிப்பவர்களுக்கு குளுமையாகவும் வைத்திருந்தது. ஓரளவு வெற்றிகரமாக வீட்டில் மழைநீர் சேமிப்புத்திட்டத்தை அமலாக்கியவர் தன் தொகுதியில் மணல்மேல் சிமெண்ட் கொட்டுவதற்கு மாற்றாய் அட்லீஸ்ட் துளையுள்ள பேவ்மெண்ட் பொருட்கள் உபயோகிப்பதனை பரிசீலிக்கச் சொல்லலாம்.

முப்பது வருடம் முன்னர் அம்மாமண்டபம் ரோட்டில் ஓரிரவில் சாரியாய் ஜன்னல்களில் கறுப்பு நீலத் துணிகள் தொங்கும் பஸ்கள் நிறுத்தி, சாரிசாரியாய் சீசனுக்கு வந்துபோகும் ஐயப்ப பக்தர்களைக் கண்டுதான் பொறுமுவோம். தீடீர் ஜனத்தொகை பெருக்கத்தில் தெற்குவாசல் அதிநெரிசலில் கால் மிதிபட்டு நேற்று சுமுகமாய் இருந்த ஏதோ இரண்டு ஸ்ரீரங்கவாசிகளிடையே வாக்குவாதங்கள் பெருகும். இன்றும் அதிநெரிசல், வாக்குவாதங்கள், வருடமுழுவதும். அரங்கனை தரிசிக்க வந்துபோகும் ஜனத்தொகை உதவியின்றியே. கோவிலினுள்ளும்தான் தேசிகர் சந்நிதி துவாதஸி இலவச பந்திபோஜனத்தில்தான் எத்தனைக் கோபங்கள், கொந்தளிப்புகள், அதிரசங்கள், ஆத்திரங்கள். அல்பங்கள்.

கோவில் வாசலில் ‘ரெங்கா’ கோபுரத்திற்கு அருகில் இரண்டு நாள்கள் முன்னர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவள் இன்று இறந்துவிட்டாள். திறந்திருந்த வாயை மொய்த்த ஈக்கள், அகன்ற விழிகளைக் கண்டு அஞ்சவில்லை. கோபுரத்திற்கு உள்புறம் இறந்திருந்தால் வைகுண்டம் போயிருப்பாள். கோவிலுக்குள் (நியான் அறிவிப்பில்) ஹிந்துக்களுக்கு மட்டும்தான் அனுமதி உண்டே. ஸ்ட்ரெட்சர் கொண்டுவந்து எடுத்துச்சென்றனர்.

செய்வதற்கிருப்பவைகளைவிட அவற்றைச் செய்வதற்கான அவகாசம் குறைவானதாகவே தோன்றும் தினவாழ்க்கைச் சட்டகத்திலிருந்து வெளியேறி, தூக்கம், சாப்பாடு, குளியல் என்று அனைத்தையும் லங்கர்கட்டை காய்களென கலைத்துப்போட்டு வருடத்தில் சில நாட்கள் கிணற்று நீர், இலை வடாம், வீட்டு இளநீர், இமாம் பஸந்த் (தாத்தாச்சாரியார் தோட்டத்து மாம்பழம்), மர பெஞ்சு, ஒயர் கூடை, பழைய புத்தகங்கள், நினைவுகளுடன் ஸ்ரீரங்கத்தில் சோம்பியிருப்பது நன்று.

ஓய்வில் சட்டெனப் புரிவது சென்னையில் பிஸியாய் செய்துகொண்டிருப்பவைகளில் தேவையெற்ற செயல்கள் எவை என்பது. ஒரு வாரத்தில், இவ்வோய்வே பிரதான தேவையற்ற செயலோ என்றாகிவிட்டது. கிளம்பவேண்டியதுதான். டுக்ரிங் செய்வதற்கு.

நட்சத்திரங்கள் வெடித்து மாள்கின்றன. சில மாண்டு வெடிக்கின்றன. ‘அஜீதாஸ்யாம சரதஸ்சதம்’ என்று வரம்கேட்டு வணங்கும் சூரியன் சில மில்லியன் மனித வருடங்களில் நியூக்ளியர் ஃபியூஷனை நிப்பாட்டி செவ்வரக்கனாய் சைலண்ட் ஆகப்போகிறான். மொஹஞ்சதாரோவில் நீர்முகர்ந்த மண்பானை இன்றைய அருக்காட்சியகத்தில் ஏஸிக்காற்றை அள்ளியபடி. நேற்றைய சிலிக்கா மண் இன்றைய கைக்கடிகாரம். நாளைய தொல்பொருள். மாற்றம் என்பது மானுடத் தத்துவமும்தான். சிலவற்றின் காலவரைதான் கலக்குகிறது.

இரண்டிற்குமே வயதாகிறது என்றாலும், என்னைச் சுற்றிலும் ஊர் வளர்கிறதா, இல்லை என் உள்ளம் தேய்கிறதா. மலைக்கோட்டையிலிருந்து பார்த்தால், காவிரியே ஊரைச்சுற்றிய வெள்ளைப் புடவை போல் காட்சியளிக்கிறது. வாழ்ந்த ஊரின் நினைவுகள், நித்யங்கள், வாக்குறுதிகள், ஆசுவாசங்கள், என் வாழ்நாளுக்குள்ளேயே என் சம்மதமின்றி உருத்தெரியாமலாவது சமாதானப்படவில்லை. மாற்றங்கள் இயல்பே. தென்குமரியின் மனல்தேரிகள் நாஞ்சில் நாடனுக்கு மாறிவிடவில்லையா. அன்றி இவ்வுலகம் அளந்தானின் அரங்கத்திலிருந்து அகன்று, இன்று நானும்தான் நகரதனில் நைகிறேன். அன்றணிந்த அரை நிஜாரை நாகரீக வளர்ச்சி என்று வேறு விநியோகஸ்தர் ஸ்டிக்கருடன் இன்றும் அணிகிறேன். இருந்தும், மாற்றம் என்பது இழப்பின் மறுபெயர்தானா…தலைமுடியை இழப்பது முகத்தை அதிகரிக்கவா. தவிலோசை தலைவலிக்கச்செய்யவா. தடாகம் தவளை வளர்க்கவா.

உச்சிப்பிள்ளையார் கோவில் சென்றமுறைக்கு இப்போது ‘சின்னதாகிவிட்டது’ என்றாள் மகள். வளர்ந்துவிட்டாள். அறிவு, மன வளர்ச்சிகளில், பார்வை விலாஸங்களில், சிறுவயதில் பார்க்கும் விஷயங்கள் சுருங்கிவிடுவதற்கு உளவியல் காரணங்கள் உண்டு. எனக்கும் ஸ்ரீரங்கம் ஒவ்வொறு விஸிட்டிலும் சிறிதாகிக்கொண்டே வருகிறது. அது ரெங்கன் கருவறைவரை சுருங்குவதற்குள் என் அறிவை விருத்திசெய்து, அகண்டமாக்கி, மானுட ஜாதி நானென்று கூவிப் பழகிட வேண்டும்.

 - அருண் நரசிம்மன்

about the writer : http://www.ommachi.net/about


No comments:

Post a Comment