Wednesday 8 October 2014

நேதாஜியும் நேருவின் துரோகமும்

(படித்ததை வேதனையோடு இங்கு பகிர்ந்து உள்ளேன்...)

நேதாஜியும் நேருவின் துரோகமும்...1.
_____________________________________

1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி அயோத்யாவுக்கு அருகில் இருக்கும் ஃபைஸாபாத் என்னும் நகரில் ஒரு பாழடைந்த வீட்டில் ஒரு சாது சுமார் 90 வயதில் தனது இறுதி மூச்சை விடுத்தார். அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அந்த சாது வேறு யாரும் இல்லை, நேதாஜி என இந்தியமக்கள் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் தான் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினர்.

ஆனால் உலகம் முழுக்க பரப்பப்பட்ட செய்திகளின் மூலம் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஜப்பானில் இருந்து சோவியத் யூனியனுக்கு விமானத்தில் செய்த பயணத்தின் போது விமானவிபத்தில் நேதாஜி இறந்துவிட்டதாக ஜப்பானின் செய்தி நிறுவனம் அறிவித்தது.

சோவியத் யூனியனுக்கு எதிராக ஹிட்லருடன் சேர்ந்து சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சோவியத் யூனீயனில் சிறைபிடிக்கப்பட்டு வைத்திருந்ததாகவும் அங்கே தான் நேதாஜி மரித்ததாகவும் ஆதாரம் இல்லாத செய்திகள் கூட உண்டு.

ஜப்பானின் செய்தி நிறுவனத்தின் மூலம் இம்மாதிரி விமானவிபத்து செய்தியைப் பரவவிட்டுவிட்டு நேதாஜி தப்பித்துப் போய் எங்கோ மறைந்திருந்ததாகவும் பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர் இந்தியாவுக்கு வந்து ஒரு கர்ம யோகிபோல் மறைந்து வாழ்ந்து மறைந்தார் என்பதாகவும் அவர்தான் ஃபைஸாபாதில் மறைந்த சாது என்பதையும் பலர் அடித்துக்கூறினாலும் உண்மை என்ன என்பது தெரிந்தவர் யார் யார் தெரியுமா..?

இந்தியாவுக்கு நல்லது செய்வதாக நடித்து துரோகத்தையே செய்துவந்த நேருவும் அவரது பரம்பரையினரும் தான்,. உடனே நேருவுக்கு ஆதரவாக மறுப்புத் தெரிவிக்கும் பல புரட்சியாளர்கள் இங்கே வந்து கதறலாம். அல்லது தன் சுவற்றில் முழங்கலாம். ஆனால் உண்மை அதுதான்.

ஆதாரங்கள்…?

# 1954 ஆம் ஆண்டு நேதாஜி விமான விபத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டபின்னர் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் முடிசூட்டிக்கொண்ட நேரு அப்போதும் சரி அதற்கும் முன்னரும் சரி.. எந்தவிதமான துயர அறிக்கையும் வெளியிடவில்லை. மாறாக இந்திய தேசிய காங்கிரஸ் நேதாஜியின் இறப்பை ஒரு சிறிய தீர்மாணத்தின் மூலம் காட்டிக்கொண்டுவிட்டு அமைதியானது. காரணம் நேரு காந்தி கூட்டணிக்கு நேதாஜியின் வளர்ச்சியும் வழிமுறைகளும் பிடிக்காமல் போனதுதான். இந்திய தேசிய காங்கிரஸில் இருந்தே நேதாஜியை விரட்டியவர்கள் இந்த மனிதப்புனிதர்கள். அதன் பின்னர் தான் நேதாஜி ஃபார்வேர்ட் ப்ளாக் இயக்கத்தைத் தொடங்கினார் என்பது வேறு தகவல்.

# நேரு இந்தியாவின் பிரதமர் பதவியைக் கைப்பற்றிக்கொண்டபின்னர். தேசபக்தி இயக்கத்தினர் பலரின் மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு 1956 ஆம் ஆண்டில் நவாஸ் கான் கமிட்டி என்னும் ஒரு கண் துடைப்புக் கமிட்டியை நேதாஜியின் மறைவு குறித்து விசாரிக்க அமைத்தது. ஆனால் பொய்யான நோக்கத்தில் அமைந்த அந்த கமிட்டியோ எந்த ஆணியையும் பிடுங்காமல் ஒதுங்கிக்கொண்டது. அதாவது ஜப்பானின் செய்தி நிறுவன அறிக்கையையே தனது முடிவாக அறிவித்து இந்தியர்களை முட்டாள்களாக்கிச் சென்றது, நேருவும் விரும்பியது அதைத்தானே..?

# பிறகு இந்திராகாந்தியின் ஆட்சியில் 1970 – 74 ஆண்டுகளில் ஜி டி கோஸ்லா கமிஷன் ( G.D. Khosla Commission ) அமைக்கப்பட்டு மீண்டும் ஒரு கண் துடைப்பு நாடகம் நடந்தது. இந்த கமிஷனும் முந்தைய கமிஷன் போலவே நேதாஜி விமான விபத்தில்தான் இறந்தார் என்று ஃபைலகளை மூடிவிட்டு சிலகோடிகள் செலவுக் கணக்கைக் காட்டியது.

# 1986 இல் ஃபைஸாபாதில் இறந்த அந்த ஏழைச்சாதுவிடம் 23 டிரங்குப் பெட்டிகள் இருந்தன. அவற்றில் பல பொருட்கள் இருந்தன. ( அவற்றைப் பிறகு பார்ப்போம் ) அவை அந்த சாது நேதாஜியாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று சான்றுகள் காட்டினாலும் அதை விசாரிக்க 1999 ஆம் ஆண்டு முழுமனதுடன் அல்லாமல் நேதாஜியின் மீது பக்தி கொண்டவர்களின் பல போராட்டங்களின் அழுத்தத்தால் ஜஸ்டிஸ் எம் கே முகர்ஜியின் தலைமையில் தீவிர நேதாஜி ரகசியத் தேடல் கமிட்டி அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. இரண்டாண்டுகளின் தீவிர வீணடிப்பு காலத்துக்குப் பிறகு 2001 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தனது வெள்ளை அம்பாசடர் காரில் சென்று எம் கே முகர்ஜி அந்த முகம் தெரியா சாதுவின் உடமைகளை ஆராயச்சென்றது. ( கால இடைவெளியைக் கணக்கிட்டுக்கொள்ளவும் )

# இதற்கிடையில் நேதாஜியின் மருமகள் லலிதா போஸ் ஓர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த தேடுதல் வழக்கின் கீழ் அந்த சாதுவிடம் இருந்த 23 ட்ரங்குப்பெட்டிகளின் உடைமைகளைப் பார்வையிட அனுமதிபெற்று பார்வையிட்டபோது அப்பெட்டிகளில் மொத்தம் 2673 பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. லலிதா போஸ் அந்த உடைமைகளில் இருந்த கடிதங்களில் இருந்த எழுத்துகளைக் கண்டு அது தனது தனது மாமாவின் கையெழுத்துகள் என்றும் இருந்த புகைப்படங்கள் சிலவற்றில் குடும்பப் படங்களும் இருப்பதாகவும் கூறியபோது, அவை ஏற்கப்படாமல் அந்த 2673 பொருட்கள் மீண்டும் 23 பெட்டிகளில் அடைக்கப்பட்டு மாவட்ட ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டது. ( இதில் இருக்கும் சில மர்மங்களை வரும் பதிவில் விபரமாகக் கூறுகிறேன். )

அடுத்த பாகத்தில் மீண்டும்…



நேதாஜியும் நேருவின் துரோகமும்...2..
____________________________________

ஃபைஸாபாதில் அந்த மர்ம சாதுவிடம் இருந்த 23 பெட்டிகளில் இருந்தவற்றில் முக்கியமானவை : 1. ஒரு ஜோடி ஜெர்மன் பைனாகுலர்கள்2. ஒரு கரோனா டைப் ரைட்டர்3. ஒரு பைப் ( புகையிலை பொருத்தி புகைக்கும் பைப் )4. ஒரு ரோலக்ஸ் வாட்ச் ( நேதாஜி எப்போதும் அணிவது )5. ஒரு சிறிய பெட்டிக்குள் ஐந்து பற்கள்6. ஒரு ஜோடி சில்வர் ரிம்முடன் கூடிய வட்டவடிவகண்கண்ணாடிகள்7. Gulliver’s Travels, புத்தகம்8. P.G. Wodehouse’s The Inimitable Jeeves, புத்தகம்9. மிக அரிதாகக் கிடைக்கின்ற International Military Tribunal for the Far East, 10. The History of the Freedom Movement in India, 11. The Last Days of the Raj, 12. Moscow’s Shadow Over West Bengal 13. Solzhenitsyn’s The Gulag Archipelago.

7 முதல் 13 வரையிலான புத்தகங்கள் மற்றும் ஜர்னல்கள் ஒரு முகம் தெரியாத சாதுவிடம் இருக்கக்கூடியதல்ல. மிக ஆழ்ந்து வாசிக்கின்ற ஒரு தேசபக்தரிடம் இருக்கவேண்டியவை. நேதாஜி கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்பதையும் இங்கே நினைவு கூரவேண்டும்.

மேலும் தொடர்வோமா..?

ஃபைஸாபாத்தில் அந்த சாதுவின் உடைமைகளைப் பரிசோதனை செய்ய எம் கே முகர்ஜி 2001 இல் சென்றார். கமிட்டி அமைக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்து அதற்கும் ஐந்தாண்டுகள் முன்பே வெளீயான சாதுவின் உடைமைகளைப் பரிசோதிக்க காலதாமதம் ஏன் என்பது உங்களைப் போலவே எனக்கும் தோன்றுகிறதுதான். ஆனால் ஓர் அரசாங்கம் அமைக்கும் கமிஷன் அந்த அரசு சொன்னபடிதான் நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நாம் சிறுகுழந்தைகள் அல்ல தானே..?

முகர்ஜி சென்றபோது அவருடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிருபர் அனுஜ் தர் என்பவரும் சென்றிருந்தார். அவரது கூற்றின்படி அங்கே பெட்டிகளில் இருந்த சில புத்தகத்தில் மார்ஜின் பகுதியில் எழுதப்பட்டிருந்த சில வரிகள் ( குறிப்பெடுத்தவை போன்றவை ) நிச்சயமாக சுபாஷ் சந்திர போஸினுடையதுதான் என்பதை அந்த நிருபர் உறுதி செய்துகொண்டதாகக் கூறுகிறார். கையெழுத்து நிபுணர் ஒருவரிடம் கொடுத்து பரிசோதிக்கப்பட்டபோது அந்த நிபுணர் அது நிச்சயமாக நேதாஜியினுடையதுதான் என்று கூறியும் முன்னரே முடிவு செய்திருந்தபடி முகர்ஜி கமிஷனும் அதைத் தொடர்ந்து அரசாங்கமும் அந்த நிபுனரின் கூற்றை அதிரடியாக மறுத்துவிட்டது.2006 ஆம் ஆண்டில் முகர்ஜி கமிஷன் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை நேதாஜியின் மறைவைப்பற்றிய மர்மங்களை அதிகரிக்கவைத்தது என்பதுதான் அந்த அறிக்கையின் முக்கிய அம்சம்.

ஆம்.

அந்த முகர்ஜி அறிக்கையின்படி

# நேதாஜி முன்பு ஜப்பான் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின் படி இறந்தது தவறான செய்தி.# டோக்கியோவில் இருக்கும் ஜப்பானிய கோயிலில் இருந்து கிடைத்த சாம்பல் நேதாஜியினுடையது அல்ல.

# ஃபைஸாபாதில் இறந்த சாதுதான் நேதாஜியா என்பதில் முழுமையான முடிவுக்கு வரும்படியான சாத்தியக்கூறுகள் கிடையாது.

( அதே நேரம் 2010 ஆம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி நேர்முகத்தில் அதே முகர்ஜி ஃபைஸாபாதில் இறந்த சாதுவும் நேதாஜியும் ஒருவர் தான் என நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார் என்பது ஆச்சரியமான அதே சமயம் சிந்திக்கத்தக்க ஓர் அம்சம் )

முடிவாக எம் கே முகர்ஜியின் அந்த கமிட்டி அறிக்கையை நம்பகத்தன்மை வாய்ந்தது என்று அப்போதைய ( 2006 ) சோனியா அரசு மறுத்துவிட்டது. ஆக 7 வருட பலகோடிச் செலவில் உருவான அந்த அறிக்கையும் கோயிந்தா..

அப்படி ஏன் தான் நேதாஜி விடயத்தில் மர்மத்தை வெளிப்படுத்த இந்திய அரசு அதாவது அப்போதைய காங்கிர அரசுகள் தயக்கம் காட்டியது என்று கேள்வி எழுகிறதல்லவா..?

இதற்கு விடை நேருவின் காலத்தில் இருந்தே வெட்ட வெளிச்சம்தான். நேருவுக்கும் நேதாஜிக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகாது. இருவரும் காங்கிரஸுக்குள் டாம் அண்ட் ஜெர்ரியாகத்தான் இருந்தனர். பலமுறை காந்தியின் உதவியால் நேரு நேதாஜியை அவமதித்திருக்கிறார். பலர் முன் சாடியிருக்கிறார். நெருக்கடிமேல் நெருக்கடி கொடுத்து நேதாஜியை காங்கிரஸை விட்டே வெளியேறும் வகையில் நிர்ப்பந்தித்திருக்கிறார். ஆரம்பம் முதலே நேதாஜியை தீர்த்துக் கட்டும் சகலவித ஏற்பாடுகளையும் செய்தே வந்திருக்கிறார்.இதற்கெல்லாம் பல ஆதாரங்கள்/ சம்பவங்கள் இருந்திருக்கின்றன.

அதை மூன்றாம் பகுதியில் பார்ப்போமே..

நேதாஜியும் நேருவின் துரோகமும்...3..
______________________________________

நேதாஜியின் உயிருடன் இருந்தபோது எடுக்கப்பட்ட இறுதியான புகைப்படம் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம்தேதி சைகோன் விமானநிலையத்தில் என்று வரலாறு தெரிவிக்கிறது. அடுத்த ஐந்து நாட்களில் அதாவது ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஜப்பானிய செய்தி நிறுவனம் அவரை இறந்ததாக அறிவித்தது,

அந்த அறிவிப்பு இதுதான் :

He was seriously injured when his plane crashed at Taihoku airfield [Taipei, then in Formosa, now in Taiwan] at 14.00 hours on August 18th. He was given treatment in a hospital in Japan [sic] where he died at midnight.

அடுத்து செப்டம்பர் 7 ஆம்தேதி நேதாஜியுடன் இறுதியாக விமானத்தில் பயணித்த கர்னல் ஹபிபுர் ரஹமான் கூற்றுப்படி இருவரும் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதில் நேதாஜி இறந்துவிட்டதாகவும் ஹபிபுர் ரஹ்மான் மட்டுமே உயிர்பிழைத்ததாகவும் தகவல்கள் இருக்கின்றன. பிறகு அஸ்தி நிரம்பிய கலயம் ஒன்றை எடுத்துக்கொண்டு டோக்கியோ வந்து சேர்ந்தார் கர்னல் ஹபிபுர் ரஹ்மான், அந்த கலயம் டோக்கியோவில் இருக்கும் ரென்கோஜி ஆலயத்தில் வைக்கப்பட்டு ‘’ நேதாஜி சலே கயே ’’ ( நேதாஜி மறைந்துவிட்டார் ) என்று அறிவிக்கப்படுகிறது.

இப்போது பல கேள்விகள் நம் முன்னால் உள்ளன.

# அத்தகைய விமான விபத்தில் நேதாஜி மட்டும் உயிரிழக்க ஹபுபுர் ரஹ்மான் பிழைத்துக் கொண்டது எப்படி..?

# இறந்தது நேதாஜி என்னும் போது அவசரம் அவசரமாக எரிக்கப்பட்டது ஏன்..? பூத உடலை புகைப்படம் எடுக்காதது ஏன்..?

# ஒரு கலயத்தில் காணப்படும் அஸ்தி நேதாஜியுடையதுதானா என்பதற்கான ஆதாரம் வேறு என்ன இருக்கிறது…?

அது இருக்கட்டும். பிறகு என்ன நடந்தது என்று பார்ப்போம்.

அந்த அறிவிப்புக்குப்பின் இந்திய பத்திரிகையாளர் ஹரின் ஷா என்பவர் தைப்பே. (Taipei ) சென்று அங்கே நேதாஜியின் மருத்துவ மற்றும் தகனத்துக்கான போலீஸ் ரிப்போர்ட்களைப் பார்வையிட்டார். ஜப்பான் மொழியில் இருந்த அந்த ஆவணங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது அதிர்ச்சி கிடைத்தது. தைப்பே மருத்துவமனையில் இதய அதிர்ச்சியில் இறந்த ஒகாரோ இசிரோ (Okara Ichiro ) என்பவரது தகனம் என்பதும் அவர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி தகனம் செய்யப்பட்டார் என்பதும் தான் அந்த அதிர்ச்சிகரத் தகவல்.

இந்தச்செய்தி முகர்ஜியின் கமிஷன் செய்த விசாரணையில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அறிக்கையையே குப்பை என ஒதுக்கியது சோனியாவின் அரசு. ஏன்.. ?

நேதாஜியின் மரண மர்மத்தை வெளியுலகுக்கும் நேதாஜியின் வழித்தோன்றலுக்கும் காட்டாமல் வைத்திருக்கவேண்டிய அவசியம் என்ன..?

பாரதரத்னா முன்பொருமுறை நேதாஜிக்கு வழங்கப்பட்டபோது நேதாஜியின் வாரிசுகள் திட்டவட்டமாக மறுத்ததன் காரணமே இதுதான். எந்த தலைவரை இந்தியாவும் ஏன் உலகமுமே தலையில் வைத்துப் போற்றியதோ அந்தத் தலைவரின் மரண ரகசியத்தை அவரது குடும்பத்துக்குக் கூடத்தெரிவில்லாமல் காத்துவருகையில் அவருக்கான பாரதரத்னாவில் மதிப்பு இல்லை.நேதாஜிக்கு பாரத ரத்னா மதிப்பு தரப்போவதில்லை. பாரதரத்னாவுக்கு வேண்டுமானால் நேதாஜிக்கு கிடைப்பதால் உயர்வு கிடைக்கலாம்.

நேதாஜியின் மரண ரகசியத்தை நேருமுதல் அவரது வாரிசுகள் அனைவருமே கட்டிக்காத்து வருவதன் மிக முக்கியக்காரணங்கள் என்ன என்ன..?

# காங்கிரஸ் எழுதிய இந்தியச் சுதந்திர வரலாற்றில் காந்தியும் நேருவும் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டிருப்பதையும் பட்டேல் முதல் முத்துராமலிங்கத் தேவர் ( நேதாஜியின் மிக நெருங்கிய நண்பர் ) வரை மற்ற சுதந்திரப்போராட்ட வீர்ர்களை எல்லாமே இருளடித்து வைத்திருப்பதையும் இந்திய சுதந்திர வரலாறு படிப்பவர்கள் உணரலாம்.

# நேதாஜி பற்றிய பல விவரங்கள் தெரியவந்தால் சுதந்திரப்போராட்டத்திற்கான மிகமுக்கிய காரணகர்த்தாவான நேதாஜி முன்னுக்குக் கொண்டுவரப்பட்டு காந்தி நேருபற்றிய ஏகத்தாங்கல்கள் அனைத்தும் பொய்யெனப் புலப்பட்டுவிடலாம். ( கொஞ்ச காலம் முன்பு வெளியான மாணவர்களுக்கான சர்வே ஒன்றில் இருபதாம் நூற்றாண்டி மிகச்சிறந்த தலைவர்கள் வரிசையில் காந்திக்கு முதலிடமும் நேதாஜிக்கு இரண்டாவது இடமும் மூன்றாவது இடமாகத்தான் நேருவுக்கும் கிடைத்ததை வைத்து இருட்டடிப்புச் செய்தபின்னர் கூட நேதாஜி இளைஞர்கள் மனதில் பதிந்துள்ளதைப் புரிந்துகொள்ளலாம். )

# இப்படி இருக்க நேதாஜி பற்றிய அனைத்து விவரங்களும் வெளிப்பட்டால் காந்தியின் இடம் காலியாகிவிடும். சொகுசு வாழ்க்கையிலும் தின்பதிலும் பெண்கள் சுகத்திலும் மட்டுமே அதிகம் திளைத்திருந்த நேருவின் இடம் சுவடு தெரியாமல் போய்விடும். இந்த ஒரு காரணம் போதாதா நேரு குடும்பத்தின் கள்ளமவுனத்தைக் காட்டுவதற்கு..?

இன்னும் சில விடயங்கள் உள்ளன.

நேதாஜி இந்திய தேசியக்காங்கிரஸில் மகத்தான இடம் வகித்து வந்தபோதிலேயே நேருவுக்கும் நேதாஜிக்கும் ஒவ்வாமை இருந்தது. நேதாஜியின் கனத்த கம்பீரமான கேட்பவரை வசியவைக்கும் குரலும் அவரது பேச்சில் இருந்த காந்தத் தன்மையும் காங்கிரஸில் அவருக்கான மகத்தானதோர் இடத்தைப் பெற்றுத்தந்திருந்தது. அவரது வளர்ச்சி என்பது நேருவின் பம்மாத்துக்கு மிகவும் தீவிரமாக உலைவைக்கும் என்பதை நேரு நன்றாக உணர்ந்திருந்தார். அவரை எப்படி எல்லாம் காங்கிரஸிலிருந்து வெளியேற்றுவது என அவர் காந்தியுடன் சேர்ந்து வகுத்த திட்டங்களும் நேதாஜியின் தீவிரவாதப் போக்கும் அவருக்கென மிகப்பெரும்பான்மையோர் ஆதரவும் இருந்ததை எல்லாம் கண்ட காந்தி நேரு கூட்டணி அவரை காங்கிரஸிலிருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்யவைத்தது என்பது வரலாறு காட்டும் மிகப்பெரிய சோகம்.

அதன் பின்னர் தான் நேதாஜி ஃபார்வேர்ட் ப்ளாக் கட்சியைத் துவக்கினார். தீவிரமாக இந்தியாவின் சுதந்திரத்தைப் பெறவேண்டி யோசித்தார். அவரது நோக்கம் மிகத்தெளிவு. எந்த விலை கொடுத்தாவது பிரிட்டிஷாரை வெளியேற்றியே தீரவேண்டும் என்பதுதான்.

அந்த நோக்கத்திற்காகவே அப்போது பிரிட்டனுக்கு மிகக்கடுமையான எதிரியாக விளங்கிய ஜெர்மனியுடன் கூட்டிணைந்து பிரிட்டிஷாரை தோற்கடித்து இந்தியாவைச் சுதந்திரமடையவைக்கவேண்டுமென விழைந்தார்.

இதன் காரணமாக பிறகு என்ன எல்லாம் நிகழ்ந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போமா..?

நேதாஜியும் நேருவின் துரோகமும்...4.
_____________________________________

நேதாஜியின் மறைவுச்செய்தி இந்தியாவுக்கு வந்தடைந்தவுடன் அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த வாவெல் சொன்னது : இதை நான் நம்ப மறுக்கிறேன். அவர் ( நேதாஜி ) தலைமறைவாய்ப் போகவேண்டுமென நினைத்தால் கொடுக்கப்படும் மிக அருமையான செய்தி இதுதான் ‘’

அதே சமயம் காந்தியும் 1946 ஆம் ஆண்டில் சொன்னார் : ’’எனது உள்ளுணர்வு எனக்குச் சொல்லிக்கொண்டிருப்பது சுபாஷ் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்பதுதான். அவர் எங்கோ மறைவாக இருக்கிறார். ’’
நேதாஜியை அறிந்தவர் யாருக்குமே தெளிவாகத் தெரிந்த உண்மை என்ன என்றால் நேதாஜி தப்பிக்கவேண்டும் என்று நினைத்தால் அது எத்தகைய சூழ்நிலையானதாக இருந்தாலும் அவர் தப்பித்தே தீருவார் என்பதுதான். இதற்கு பல முன்னுதாரணங்கள் இருந்துள்ளன.

1941 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் பிரிட்டிஷ் அரசு அவரை இல்லக் கைதியாக வைத்திருக்கையில் பிரிட்டிஷ் காவலர்களின் கண்களில் மண்ணைத்தூவி ஆஃப்கானிஷ்தான் சென்று அங்கே இருந்த இத்தாலியத் தூதுவரின் உதவியால் ஓர் இத்தாலிய வியாபாரியாக ‘’ ஆலண்டோ மஸோட்டா ‘’ என்னும் பெயரில் மத்திய ஆசியா வழியாக மாஸ்கோ சென்று பிறகு அங்கிருந்து பெர்லினுக்கு ஹிட்லரைச் சந்திக்கச் சென்றார்.

இதை ஒரு சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அத்தனை தூரம் மறைவாகச் சென்றடைவது என்பது இக்காலத்தில் கூட இயலாத விடயம். ஆயினும் அவரது தீரமும் தீர்க்கமான முடிவும் நாட்டுப்பற்றும் அவரை இந்த சாகசத்தைச் செய்து முடிக்கத்துணையாய் இருந்தன.

பெர்லினில் இருந்துகொண்டே பிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிராக வானொலியில் பிரச்சாரம் செய்து பிரிட்டிஷை இந்தியாவிலிருந்து துரத்த ஜெர்மனியின் துணையை நாடவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இன்றைக்கு சொகுசாக வாழ்ந்துகொண்டு முகநூலில் பிரசங்கம் செய்பவர் யாரும் நேதாஜியின் அன்றைய முடிவை எகத்தாளமாகப் பேசலாம். ஆனால் எத்தைத்தின்றால் பிரிட்டிஷ் என்னும் பித்தம் ஒழியும் என்று இருந்த தேசபக்தரான நேதாஜி செய்தவை எதுவுமே தவறானவை அல்ல என்று அன்றைய காலக்கட்டத்தில் இருந்து யோசித்தால் புலப்படும்.

பிறகு ஹிட்லரின் சில கண்டிஷன்களால் வெறுப்படைந்து அங்கிருந்து நழுவி கடல்வழியாக நீர்மூழ்கிக்கப்பலின் மூலமாகவே ஜப்பானுக்குச் சென்று அங்கே 50 ஆயிரம் படைவீரர்களைத் திரட்டி ஆசாத் ஹிண்ட் ஃபௌஜ் அல்லது இந்திய தேசிய ராணுவத்தை (Indian National Army (INA) ) அமைத்தார். அந்தப்படையில் பெரும்பாலும் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிசெய்து ஜப்பானால் கைப்பற்றப்பட்ட இந்திய வீரர்களை ஒருங்கிணைத்தார். இதைச் சொல்லவருவதன் காரணம் அவர் நினைத்தால் எந்த நாட்டிலிருந்தும் எந்த நாட்டுக்கும் ரகசியமாகச் செல்லமுடியும் என்பதுதான். அத்தகு நுண்ணறிவும் சமயோசிதப்புத்தியும் கொண்ட ஒரு தேசியத்தலைவரைத் தான் நேருவும் காந்தியும் மிக எளிதாக ஓரம்கட்டினார்கள். காரணம்..?

ஆரம்பம் முதலாகவே அவரது தீட்சண்ணியத்தையும் தேசப்பற்றையும் அவரது மக்களை வசீகரிக்கும் தேஜஸும் காந்தியையும் நேருவையும் பொறாமைப்பட வைத்ததோடு நேதாஜி இருந்தால் அவர்களது நாடகம் செல்லாது என்பதையும் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார்கள்.

நேதாஜி பிரிட்டிஷுக்கு எதிராகப் படைதிரட்டிப் போரிட முடிவு செய்த உடனேயே அவரை தேசத் துரோகி எனவும் நாட்டுக்கு எதிரானவர் என்றும் பயங்கரவாதி என்றும் பிரிட்டிஷார் முடிவு எடுத்து அறிவித்ததோடு காந்தியையும் நேருவையும் கூட இந்தச் செயலுக்கு ஒத்து ஊதவைத்தனர். காந்தி சொன்னவை எல்லாவற்றையும் பிரிட்டிஷார் செய்து முடித்தார் என்னும் மிகப்பெரிய வியப்பான உண்மையை நம்மில் எத்தனைபேர் அறிவோம்..? அதை விடுங்கள். அதை பிறிதொரு சமயம் கண்டிப்பாக எழுதுவேன்.

ஜப்பானில் விமான விபத்து என்னும் நாடகத்தை நடத்தி அவருடன் உற்ற நண்பராக இருந்த ஹபிப் புர் ரஹ்மானின் உதவியால் ரஷ்யா சென்று அங்கே தலைமறைவாய் வாழ்க்கை நடத்திப் பின்னர் இந்தியா விடுதலை அடைந்தபின்னர் இந்தியாவுக்கு வந்து யோகியாகவும் சாதுவாகவும் ஃபைஸாபாத்தில் வசித்து பிறகு இயற்கை எய்தினார் என்பது தான் இதுவரை வந்த நேதாஜி பற்றிய செய்திகளில் இருந்து பெரும்பாலோர் முடிவுக்கு வந்திருக்கும் விடயம்.

ஆனால் காங்கிரஸ் ஆரம்பம் முதலாகவே நேதாஜிக்கு வன்சகமும் துரோகமும் செய்து அவர் பற்றிய செய்திகள் எல்லாம் அறிந்தும் இந்த நாள் வரை மறைத்து வந்திருக்கிறது என்பது மட்டும் திண்ணம்.ஒரு மகத்தான தேசபக்தி மிகுந்த தேசத்தலைவரை இருட்டடிப்பு செய்தபின் காந்தியையும் நேருவையும் மட்டுமே சுதந்திரப்போராட்ட வீரர்களாகச் சித்தரித்து வரலாற்றைப் பூசி மெழுகி இன்னும் நாடகம் நடத்துகிறது காங்கிரஸ்.

தற்போது அறுதிப்பெரும்பான்மையுடன் அசைக்கமுடியாத அரசை நிறுவியிருக்கும் மோடிஜியின் அரசாவது புதைந்து போன
நேதாஜியின் ரகசியங்களை வெளிக்கொணர்ந்து உலகுக்கு உண்மையான தேசத்தலைவர் யார் என்பதை நிரூபித்துப் பின்னர் பாரத ரத்னா வழங்கினால் நான் மிகவும் மகிழ்வேன்.

இப்பதிவை இத்துடன் முடித்துக் கொண்டாலும் உங்களுக்கு எழும் ஐயங்களைத் தொடுத்தால் அவற்றுக்கு பதிலைத் தொகுத்து இன்னுமொரு பதிவையும் பதிவேன்.

பொறுமையாக நான்கு பகுதிகளையும் வாசித்து விருப்பமிட்டு பகிர்ந்து ஆதரவு கொடுத்த அனைத்து தேசபக்தர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்.

ஜெய் ஹிந்த். ஜெய் பாரத்..ஜெய் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்..!

நன்றி : கலைவேந்தன்.

No comments:

Post a Comment