Thursday 14 February 2013

ஒரு டைரியின் டைரி..


டைரி தெரியும்... ஆண் டைரி, பெண் டைரி தெரியுமா?

ஓர் ஆண் எழுதும் டைரிக்கும் பெண் எழுதும் டைரிக்கும் ரொம்ப வித்தியாசங்கள் உண்டாம். லூவன் பிரசன்டைன் என்ற மொழியியல் வல்லுனர் டைரியைப் பற்றி புள்ளிவிபரம் சொல்கிறார். பெண் சராசரி யாக 1,000 வார்த்தைகள் எழுதினால், ஆண் 10 வார்த்தைகளில் அதை எழுதுவானாம்.

இதோ ஒரு தம்பதியின் டைரியை சாம்பிளுக்குக் காட்டுகிறார். டென் ஷன் ஆகாமல் படிக்கவும்!

அவளின் டைரி...

'இன்று என் கணவரின் நடவடிக்கைகளில் ஏகப்பட்ட மாற்றம். நேற்று ஒரு ரெஸ்ட்டாரென்ட் சென்று சாப்பிடுவதாக பிளான் செய்திருந்தோம். ஆனால், அலுவலகத்தில் இருந்து தாமதமாக வந்து அவசர அவசரமாக என்னை அழைத்தார். அவர் இப்படி என்னை அவமானப்படுத்துவது 12-வது தடவை. அதனால், வேண்டுமென்றே நானும் அரை மணி நேரம் காக்கவைத்துவிட்டுக் கிளம்பினேன். ஒரு சின்னப் பழி வாங்கல். அவ்வளவுதான். ஆனாலும் அவர் அதைப் பெரிதாய் எடுத்துக்கொண்டதுபோல தெரியவில்லை.காரில் போகும்போது ஒரு வார்த்தைகூட என்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. சாலையைவிட்டுப் பார்வை விலகாமல் காரை ஓட்டினார். நானாக வெட்கத்தைவிட்டு, 'ஐ லவ் யூ’ என்றேன். அதற்குச் சின்னதாய் சிரித்துவிட்டு கார் ஓட்டுவதில் கவனமாக இருப்பதுபோல பாசாங்கு செய்தார். நிச்சயமாக அலுவலகத்தில் யார் மீதோ அவர் காதல் வயப்பட்டு இருக்கிறார். அது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். எனக்குத் தெரியும். அவர் இப்போது எல்லாம் என்னிடம் முகம் கொடுத்துப் பேசுவது இல்லை. இது கடந்த ஒரு வாரமாகவே நடக்கிறது. ரெஸ்ட்டாரென்ட்டிலும் கடமைக்கு எதையோ ஆர்டர் செய்து சாப்பிட்டார். என்னிடம் மெக்கானிக்கலாகப் பேசினார். மொத்தத்தில் நடித்தார். எனக்கு அவர் அப்படிச் செய்வது சுத்தமாகப் பிடிக்கவில்லை. எரிச்சலாய் இருந்தது. தலை வலிக்கிறது எனப் பொய் சொல்லி, காருக்கு வந்தேன். அவரும் 'ஏன் என்னாச்சு?’ என்று எதுவும் கேட்கவில்லை. வீடு வரும் வரைக்கும் அவரும் பேசவில்லை. நானும் பேசவில்லை. வீட்டுக்கு வந்த பிறகாவது காரணத்தைச் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். டி.வி. பார்க்க ஆரம்பித்துவிட்டார். பேசினால் சண்டை வரும் என்பதால், நான் படுக்கைக்குப் போய்விட்டேன். அரை மணி நேரத்தில் அவரும் படுக்கைக்கு வந்தார். ஏதோ யோசனையில் அருகில் படுத்தார். சில நிமிடங்களில் நான் பேசத் தொடங்குவதற்கு முன் தூங்கியும்விட்டார். எனக்கு அழுகை வருகிறது. இதோ இதை எழுதும்போது கண்ணீர் பொங்கி வருகிறது. அவர் யாருடனோ நெருக்கமாக இருக்கிறார் என்பதை மட்டும் என் மனம் சொல்கிறது. கடவுளே என்னை ஏன் இப்படி ஒரு கொடுமையான நரகத்தில் தள்ளிவிட்டாய்’ (மேற்கொண்டு எழுத மனம் இல்லாமல் டைரியை மூடிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு 20 நிமிடங்கள் விழிப்பில் இருந்துவிட்டு அப்படியே தூங்கிப்போனாள்.)

இந்த இடத்தில் ஒரு சின்ன ரீவைண்ட். அவள் கோபத்தோடு படுக்கையில் வந்து விழுந்து டைரியை எழுத ஆரம்பிப்பதற்கு முன், அவன் ஹாலில் டைரி எழுதிவிட்டு வந்துதான் படுக்கைக்கு வந்தான். அவன் என்ன எழுதினான்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ...

அவனின் டைரி...

'இன்று என் கார் என்ஜின் மக்கர் செய்தது. கார்ப்பரேட்டரில் மிகப் பெரிய ஓட்டை விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன். சமாளித்து காரை ஓட்டி வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. போன வாரம் என்ஜினை மாற்றும்போது மெக்கானிக் என்னிடம் 'வண்டியை வித்திடுங்க சார்’ என்று சொன்னது மனதில் நிழலாடுகிறது. நாளைக்கும் பெரிய செலவு எதுவும் மெக்கானிக் வைக்கக் கூடாது... நாளை மறுநாள் வெளியூருக்கு ரயிலில்தான் போக வேண்டுமா..? ஓ மை காட்!’

Thanks - Vikatan Timepass 2013-01-19

No comments:

Post a Comment